விரைவில் படையில் இணையும் சுதேசி தாக்குதல் ஆளில்லா விமானம் !!

  • Tamil Defense
  • April 26, 2022
  • Comments Off on விரைவில் படையில் இணையும் சுதேசி தாக்குதல் ஆளில்லா விமானம் !!

தற்போது இந்திய ராணுவம் வெளிநாட்டு தயாரிப்பு கண்காணிப்பு மற்றும் உளவு ட்ரோன்களை தான் பயன்படுத்தி வருகிறது அதே நேரத்தில் அமெரிக்காவில் இருந்து 30 MQ-9 Reaper ஆளில்லா தாக்குதல் விமானங்களை வாங்கவும் திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில் விரைவில் 75 சதவிகிதம் அளவுக்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பாகங்களை கொண்ட ஆளில்லா தாக்குதல் விமானமான Tapas-BH-201 படையில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் கோயம்புத்தூர் நகரை தளமாக கொண்டு இயங்கும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து சுதேசி என்ஜின் ஒன்றை இந்த தாக்குதல் ட்ரோனுக்காக தயாரிக்க உள்ளனர்.

பெங்களூர் நகரை தளமாக கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ADE – Aeronautical Development Establishment தான் இந்த Tapas BH 201 (தபாஸ்) ஆளில்லா தாக்குதல் விமானத்தை வடிவமைத்து தயாரித்து சோதனை செய்து உள்ளது.

இந்த MALE – MEDIUM ALTITUDE LONG ENDURANCE (நடுத்தர உயரம் மற்றும் அதிக தொலைவு) ரக ஆளில்லா விமான திட்டமானது 10 ஆண்டுகளுக்கு முன்னர் 1540 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது தற்போது 1786 கோடி ரூபாய்களை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இந்த ட்ரோன் தொடர்ந்து 18 மணிநேரம் சுமார் 28,000 அடி உயரத்தில் வெற்றிகரமாக பறந்து சோதனைகளை நிறைவு செய்த நிலையில் தற்போது ராணுவ வானூர்தி தர நிர்ணய அமைப்பான CEMILAC உடைய தர நிர்ணய சான்றிதழ் பெற காத்திருக்கிறது.

இந்த தபாஸ் ஆளில்லா விமானம் உளவு மற்றும் கண்காணிப்பு பணிகளை முதன்மையாக மேற்கொள்ளும் ஆனால் 150 கிலோ எடை வரையிலான ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் திறனையும் கொண்டிருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்கட்டமாக ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஐந்து தபாஸ் ஆளில்லா விமானங்களை இந்த மாதம் முதல் வருகிற செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தயாரித்து டெலிவரி செய்ய உள்ளதாக பாதுகாப்பு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.