கிரீஸ் நாட்டில் துறைமுகங்களை பெற திட்டமிடும் இந்தியா !!

  • Tamil Defense
  • May 5, 2024
  • Comments Off on கிரீஸ் நாட்டில் துறைமுகங்களை பெற திட்டமிடும் இந்தியா !!

கிரீஸ் அரசு தனது நாட்டில் உள்ள லாவ்ரியோ, பத்ராஸ் மற்றும் அலெக்சான்ட்ரூபோலிஸ் ஆகிய துறைமுகங்களை விற்க திட்டமிட்டுள்ளது, ஆகவே இந்தியா இவற்றை வாங்க மிக தீவிரமான முயற்சி செய்து வருகிறது இந்தியாவின் இந்த முயற்சிகளுக்கும் நோக்கங்களுக்கும் பின்னால் மிகப்பெரிய அளவிலான புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார காரணங்கள் உள்ளன.

இந்தியா தற்போது உலகின் வேகமான வளர்ச்சி விகிதம் கொண்ட நாடாகும், வேறேந்த நாடாலும் இந்த வேகத்தை எட்ட முடியவில்லை மேலும் 2030ஆம் ஆண்டு வாக்கில் ஜெர்மனி மற்றும் ஜப்பானை முந்தி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் இந்தியா தனது போட்டாயாளரான சீனாவின் OBOR – One Belt One Road திட்டத்தை போன்ற தனக்கு சொந்தமான பொருளாதார வழித்தடத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. வடக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவை மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் மத்திய கிழக்கு வழியாக இந்தியாவுடன் கடல் மற்றும் தரை வழியாக இணைக்கும் ஒரு பாதையை உருவாக்க இந்தியா விரும்புகிறது, இதை கடந்த ஆண்டு நமது நாட்டில் நடைபெற்ற G20 மாநாட்டில் இந்தியா அறிவித்தது.

மேற்குறிப்பிட்ட திட்டத்திற்கு இந்தியா மத்திய கிழக்கு ஐரோப்பா பொருளாதார வழித்தடம் IMEC – India Middle east Europe Economic Corridor என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த வழித்தடத்தில் கிரீஸ் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது ஆகவே தான் மேற்குறிப்பிட்ட மூன்று கிரீஸ் நாட்டு துறைமுகங்களை வாங்க இந்தியா அதீத ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கான ஏலத்திற்கு TAIPED எனப்படும் கிரீஸ் நாட்டின் பொது சொத்துக்கள் மேம்பாட்டு நிதியகம் தயாராகி வருகிறது, மேலும் கிரீஸ் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி கிரீஸ் பிரதமர் கைரியாகோஸ் மிட்சோடாகிஸ் சமீபத்தில் தனது நாட்டின் தொழிலதிபர்கள் குழுவுடன் இந்தியா வந்த போது நமது தரப்பிற்கு இந்த துறைமுகங்களை அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அதன்படி லாவ்ரியோ துறைமுகத்தின் டென்டர் நடவடிக்கைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதமே துவங்கயதாகவும் 51% அளவுக்கு விற்பனை சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் கூறப்பட்டது மேலும் அலெக்சாண்ட்ரூபோலி துறைமுகம் அந்த பகுதியிலேயே மிக முக்கியமானதாகும் உக்ரைன் போர் காரணமாக ஏற்கனவே நடைபெற்ற விற்பனை திட்டம் ரத்து செய்யப்பட்டு தற்போது மீண்டும் அதற்கான பணிகள் துவங்கி உள்ளன, கடைசியாக பத்ராஸ் துறைமுகத்திற்கான விற்பனை செயல்பாடுகள் விரைவில் துவங்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவின் இந்த IMEC திட்டத்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூட்டாக செயல்படுத்த உள்ளன, மேலும் இந்த திட்டம் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஜோர்டான், இஸ்ரேல் வழியாக ஐரோப்பாவை அடைகிறது. இந்த பாதை இந்தியாவில் இருந்து கடல் வழியாக ஐக்கிய அரபு அமீரகம் சென்று அங்கிருந்து இஸ்ரேல் வரை ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சென்று அங்கிருந்து மீண்டும் கடல் வழியாக இத்தாலி கிரீஸ் ஃபிரான்ஸ் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் மூலமாக ஒட்டுமொத்த ஐரோப்பாவை சென்றடைகிறது.

ஆனால் ஆசியாவில் இருந்து ஐரோப்பாவை இணைக்கும் வாசலாக கருதப்படும் துருக்கி இந்த திட்டத்தில் விடுபட்டுள்ளது இதனால் ஆத்திரமடைந்த துருக்கி இதற்கு போட்டியாக துருக்கி-ஈராக் மேம்பாட்டு சாலை என்ற பெயரில் ஈராக்கின் கிராண்ட் ஃபாவ் துறைமுகத்தில் இருந்து துருக்கி வழியாக ஐரோப்பா செல்லும் பொருளாதார வழித்தட திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் ஈராக் கத்தார் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை பங்கு பெறுகின்றன இதன் மதிப்பு சுமார் 25 பில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.