துருக்கியின் மிகப்பெரிய உள்நாட்டு விமானந்தாங்கி கப்பல் திட்டம் !!
துருக்கி அரசு தனது துருக்கி கடற்படை கட்டளையகத்தின் ஒரு பிரிவான DDPO – Directorate of Design Project Office அதாவது வடிவமைப்பு திட்ட அலுவலக இயக்குனரகத்தை கொண்டு முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைத்து தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பல் ஒன்றை கட்டுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த புதிய விமானந்தாங்கி கப்பல் கடந்த ஆண்டு துருக்கி கடற்படையில் இணைந்த TCG ANADOLU எனும் ஸ்பெயின் நாட்டின் Juan Carlos – 1 ஜூவான் கார்லோஸ் -1 ரக கப்பல்களை அடிப்படையாக கொண்ட 27,500 டன்கள் எடை கொண்ட கப்பலை விடவும் பெரிதாக இருக்கும் என துருக்கியின் சபாஹ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இது பற்றிய தகவல்களை துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தில் மேற்குறிப்பிட்ட DPO ஊடக சந்திப்பை மேற்கொண்டது, ஏற்கனவே TCG ANADOLU கப்பலில் 70 சதவிகிதம் அளவுக்கு உள்நாட்டு தொழில்நுட்பங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் புதிய சுதேசி விமானந்தாங்கி கப்பலித் அந்த சதவிகிதத்தை அதிகரிக்க பல மடங்கு அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய விமானந்தாங்கி கப்பல் மனிதாபிமான உதவிகள், தொலைதூர ராணுவ நடவடிக்கைகள், தொலைதூர ரோந்து நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையிலும் துருக்கி ராணுவத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் குறிப்பாக துருக்கி கடற்படையின் Flag Ship அதாவது பிரதான கப்பலாகவும் விளங்கும் என கூறப்படுகிறது.
இந்த புதிய விமானந்தாங்கி கப்பலில் இருந்து ஆளில்லா விமானங்கள் மற்றும் இதர வானூர்திகளையும் இயக்கக்கூடிய வகையில் வடிவமைக்க உள்ளனர், ஏற்கனவே உள்ள TCG ANADOLU கப்பலுக்காக அமெரிக்க F-35B விமானங்களை வாங்கவிருந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து துருக்கி S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கியதால் அமெரிக்கா மேற்குறிப்பிட்ட விமானங்களை விற்கவில்லை ஆகவே தற்போது அந்த கப்பலில் இருந்து ஹெலிகாப்டர்கள் மற்றும் பிரதானமாக ட்ரோன்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.