ரியர் அட்மிரல் ராஜேஷ் தன்கா தலைமையில் தென்சீன கடல்பகுதியில் தொலைதூர நடவடிக்கை மேற்கொள்ள இந்திய கடற்படையின் INS DELHI ஐ.என்.எஸ் தில்லி, INS SHAKTI ஐ.என்.எஸ் ஷக்தி மற்றும் INS KILTAN ஐ.என்.எஸ் கில்டான் ஆகியவை புறப்பட்டு சென்றன இவை மூன்றும் இந்திய கடற்படையின் கிழக்கு கட்டளையகத்தின் கீழ் இயங்கும் முன்னனி கப்பல்களாகும்.
இந்த நிலையில் மேற்குறிப்பிட்ட முன்று போர் கப்பல்களும் தற்போது சிங்கப்பூருக்கு நட்பு ரீதியான பயணமாக சென்றடைந்து உள்ளன, அவற்றை சிங்கப்பூர் கடற்படையினர் மற்றும் இந்திய தூதர் ஆகியோர் வரவேற்றனர், இந்த பயணம் இரண்டு கடற்படைகள் இடையேயான வலுவான உறவுகளை பிரதிபலிக்கிறது.
சிங்கப்பூர் துறைமுகத்தில் தங்கியுள்ள நேரத்தில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது, அந்த வகையில் இந்திய தூதரகம், சிங்கப்பூர் குடியரசு கடற்படை, சிங்கப்பூர் கல்வித்துறை மற்றும் பொதுமக்களுடனான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன, இந்த நிகழ்ச்சிகள் இந்திய மற்றும் சிங்கப்பூர் கடற்படைகள் இடையேயான ஒற்றுமைகளை காட்டுவதாக அமையும்.
கடந்த முப்பது ஆண்டு காலமாக இந்திய கடற்படை மற்றும் சிங்கப்பூர் கடற்படை இடையே அடிக்கடி மேற்கொள்ளப்படும் பயணங்கள், கூட்டு பயிற்சிகள், பகிர்வுகள் மூலமாக நிலவும் ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றை உணரலாம், மேலும் இந்த பயணம் பற்றி இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த பயணம் இரு நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.