நேற்றைய தினம் நமது ISRO – Indian Space Research Organisation அதாவது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் சந்திரயான்-3 திட்டத்தின் ஏவுதலின் போது நிகழ்ந்த மிக மிக முக்கியமான சம்பவம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது, அது இப்போது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி நமது விஞ்ஞானிகளின் திறமையையும் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.
அதாவது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி இஸ்ரோ நிறுவனம் சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கு சில நொடிகளுக்கு முன்னால் மிகப்பெரிய ஆபத்து ஒன்று விண்ணில் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர், அதாவது ஒரு மிகப்பெரிய விண்வெளி குப்பை துண்டு ஒன்று ராக்கெட்டின் பாதையை நோக்கி வந்து கொண்டிருந்தது திட்டமிட்ட நேரத்தில் ஏவினால் ராக்கெட் அந்த விண்வெளி குப்பையின் மீது மோதி வெடித்து சிதறும் அபாயம் இருப்பதை கண்டறிந்தனர்.
உடனடியாக விஞ்ஞானிகள் புத்திசாலித்தனமாக 4 நொடிகளுக்கு ராக்கெட் ஏவுதலை தாமதம் செய்தனர். அந்த நேரத்தில் மேற்குறிப்பிட்ட விண்வெளி குப்பை ராக்கெட்டின் பாதையை கடந்து வேறு திசையில் சென்றுவிட்டது அதன் பிறகு தான் ராக்கெட்டை ஏவினர். இந்த முடிவை எடுப்பதற்கு இஸ்ரோ ஒவ்வொரு ராக்கெட் ஏவுதலுக்கும் முன்பாக மேற்கொள்ளும் COLA – Collision Avoidance Analysis அதாவது மோதல் தடுப்பு ஆய்வு எனும் முறையை பயன்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரோ நிறுவனம் தனது ISSAR – Space Situational Assessment Report எனப்படும் விண்வெளி சூழல் அறிக்கையில் எப்படி இத்தகைய அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது என்பதை விளக்கியுள்ளது மேலும் இஸ்ரோ நிறுவனம் இதுவரை சுமார் 23 முறை மேற்குறிப்பிட்ட COLA தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விண்வெளியில் உள்ள இந்திய செயற்கைகோள்களை பாதுகாத்துள்ளது கூடுதல் தகவலாகும்.