வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 2025 பாதுகாப்பு பட்ஜெட்டை உயர்த்திய ஜப்பான் !
2025 நிதி ஆண்டுக்கான பாதுகாப்பு பட்ஜெட்டை ஜப்பான் அரசு அறிவித்துள்ளது அதன்படி இதுவரை ஜப்பானுடைய வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகமாக சுமார் 55 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது ஜப்பானிய யென் மதிப்பில் 8.70 ட்ரில்லியன் அளவிற்கு பாதுகாப்பு பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த ஆண்டு இது 7.9 ட்ரில்லியன் யென் என்று அளவில் இருந்தது தற்போது 0.8 ட்ரில்லியன் யென் அதிகரிக்கப்பட்டுள்ளது, ஜப்பான் இப்படி பாதுகாப்பு பட்ஜெட்டை உயர்த்துவது இது தொடர்ச்சியாக 13-வது முறையாகும்.
ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா தலைமையிலான ஜப்பானிய அமைச்சரவை இந்த பட்ஜெட் வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது இதனுடன் ஒட்டுமொத்த நாட்டிற்கான 115.4 ட்ரில்லியன் யென் பட்ஜெட்டிற்கும் ஜப்பானிய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் அதனுடன் சேர்த்து இந்த பாதுகாப்பு பட்ஜெட்டிற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, ஜப்பான் தனது பாதுகாப்பு திறன்களை அதிகப்படுத்துவதற்கான ஐந்தாண்டு திட்டத்தின் மூன்றாவது ஆண்டில் இந்த வருடம் காலடி எடுத்து வைக்கிறது அதன்படி பாதுகாப்பான பகுதியில் இருந்து கொண்டு அதாவது எதிரிகளால் தாக்க முடியாத தொலைவில் இருந்து எதிரி இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் திறன்கள் மற்றும் ஆளில்லா அமைப்புகள் மூலம் பல விதமான போர் முறைகளில் நட்பு நாடுகள் மற்றும் ஒத்த கருத்துடைய நாடுகளின் உதவியுடன் ஆதிக்கம் செலுத்துவது ஆகியவற்றில் ஜப்பான் அரசு கவனம் செலுத்தி வருகிறது, மேல் குறிப்பிட்டபடி பாதுகாப்பான இடத்திலிருந்து கொண்டு எதிரிகள் மீது தாக்குதல் நடத்தும் திறன்களை அதிகரிப்பதற்காக இந்த பட்ஜெட்டில் இருந்து சுமார் 939 பில்லியன் யென்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல ஜப்பானிய அரசு ஆளில்லா அமைப்புகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது அதன்படி வான் மற்றும் நீருக்கு அடியில் செயல்படும் ஆளில்லா அமைப்புகளை மனித உயிர் இழப்பு இன்றி போர்க்களத்தில் முற்றிலும் ஆதிக்கம் செலுத்த உதவும் கருவிகளாக ஜப்பானிய அரசு இவற்றை கருதுகிறது இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவிடம் இருந்து General Atomics ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் MQ-9B Sea Guardian ரக ஆளில்லா விமானங்களில் இரண்டை வாங்க 41.5 பில்லியன் யென் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய கடற்படைக்கு இந்த ஆளில்லா வானூர்திகள் மற்றும் அதன் துணை அமைப்புகள் உடனுக்குடன் களச் சூழல் பற்றிய தகவல்களை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது தவிர ஜப்பானிய ராணுவத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான ராணுவ வீரர்களின் பணியிட நிலைகளை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அரசு சுமார் 409.7 பில்லியன் யென் பணத்தை ஒதுக்கியுள்ளது இதில் சுமார் 387.8 பில்லியன் யென் வீரர்களின் பணியிட சூழல்களை மேம்படுத்தவும் 16.7 பில்லியன் யென்களை வீரர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் குறிப்பாக அவர்களின் ஊதியங்களை உயர்த்துவதற்கும்,1.9 பில்லியன் யென ஒய்வுக்கு பிறகான நலத்திட்டங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது, பல வளர்ந்த பொருளாதாரம் கொண்ட நாடுகளை போலவே ஜப்பானும் ராணுவ ஆட்சேர்ப்பில் தடுமாறுகிறது, அந்நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் வயது முதிர்ந்தவர்களாக உள்ளனர் ஆகவே மேலும் இளைஞர்களை ராணுவத்தில் சேர ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தவிர பிரதானமான செலவினங்களாக கருதப்படும் இத்தாலி மற்றும் பிரிட்டன் உடன் இணைந்து ஜப்பான் வருகிற 2035 ஆம் ஆண்டு வாக்கில் உருவாக்க உள்ள அடுத்த தலைமுறை போர் விமானத் திட்டத்திற்கான 108.7 பில்லியன் யென் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும், கடந்த ஆண்டு ஆரம்பத்தில் ஜப்பான் உள்நாட்டிலேயே தயாரித்த டைப் 12 ரக தரையில் இருந்து ஏவப்படும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை சோதனை செய்தது இவை பாதுகாப்பான தொலைவில் இருந்து கொண்டு எதிரி இலக்குகளை தாக்கும் ஆயுதங்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.