நீர்மூழ்கி கப்பல்களின் திறனை மேம்படுத்த 3000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை உறுதி செய்த பாதுகாப்பு அமைச்சகம் !
இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்களின் திறன்களை அதிகரிக்கும் விதமாக சுமார் 2867 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான இரண்டு ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது இந்த இரண்டு ஒப்பந்தங்களும் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி தலைநகர் தில்லியில் பாதுகாப்பு துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் கையெழுத்து ஆகியுள்ளன. இதில் ஒரு ஒப்பந்தம் மும்பை கப்பல் கட்டுமான தளத்துடனும் மற்றொரு ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடனும் இறுதி செய்யப்பட்டுள்ளதை இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது செய்தி அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
முதலாவது ஒப்பந்தம் இந்தியாவின் பிரதான ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் DRDO Defence Research & Development Organisation நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைத்து மேம்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட AIP Air Independent Propulsion அதாவது நீர் மூழ்கி கப்பல்கள் அடிக்கடி நீர்ப்பரப்பிற்கு மேலே வந்து ஆக்சிஜனை உள் இழுத்துக் கொள்ளும் சூழலை மாற்றி அதிக நாள் கடலுக்குள்ளேயே தொடர்ந்து பயணிக்கும் திறனை அளிக்கும் இந்த அமைப்பை மும்பையில் அமைந்துள்ள MDL Mazagon Docks Limited மசகான் கப்பல் கட்டுமான தளம் தயாரித்து நீர் மூழ்கி கப்பல்களில் இணைப்பதற்கான சுமார் 1990 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் செய்து கொண்டுள்ளது.
அதேபோல இரண்டாவது ஒப்பந்தமாக உள்நாட்டிலேயே முற்றிலுமாக வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட அதாவது DRDO பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஒரு பிரிவான NSTL Naval Science & Technology Labaratory கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் உருவாக்கிய TAKSHAK EHWT – Electronic Heavy Weight Torpedo தக்ஷாக் மின்னணு கனரக நீரடிகணை அதாவது பேட்டரியில் இருந்து உற்பத்தியாகும் மின் சக்தி மூலமாக பயணிக்கும் மற்றும் வயர் மூலமாக வழிகாட்டப்பட்ட இந்த கனரக நீரடிகணையை இந்திய கடற்படையின் Scorpene கல்வரி ரக டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களில் பயன்படுத்தப்படுவதற்காக இணைக்க வேண்டி இந்த கப்பல்களை தயாரிக்கும் பிரான்ஸ் நாட்டின் NAVAL GROUP நேவல் குழுமத்துடன் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் சுமார் 867 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது.
இந்த இரண்டு ஒப்பந்தங்களும் இந்திய கடற்படையின் புத்தம் புதிய பிரான்ஸ் நாட்டின் உதவியோடு தொழில் நுட்ப பரிமாற்ற ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட கல்வரி ரக டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களில் மேல் குறிப்பிடப்பட்ட இரண்டு சுதேசி தொழில்நுட்பங்களையும் இணைக்கும் நோக்கத்துடன் இறுதி செய்யப்பட்டுள்ளனர் இந்த ஒப்பந்தங்கள் மூலமாக சுமார் 3 லட்சம் மனித மணி நேரம் அளவிற்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் இந்த இரண்டு ஒப்பந்தங்களும் இந்திய கடற்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பிரான்ஸ் நாட்டின் நேவல் குழுமம் ஆகிய மூன்று அமைப்புகளும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் பணியாக இருக்கும் எனவும் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் தனது செய்தி அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.