இந்திய தரைப்படையில் அதிகாரியாக இணைந்து சாதனை படைத்த மதுரை சுமை தூக்கும் தொழிலாளியின் மகன் !
மதுரை மாவட்டம் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் 23 வயதான கபிலன், இவர் சில நாட்களுக்கு முன் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நகரத்தில் அமைந்துள்ள இந்திய தரைப்படையின் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் மையமான இந்திய ராணுவ அகாடமியில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் தோளில் 2 நட்சத்திரங்களுடன் இந்திய அரசின் குரூப் ஏ அந்தஸ்து கொண்ட கெஸடட் அதிகாரியாக இந்திய தரைப்படையில் லெஃப்ட்நெண்ட் அந்தஸ்தில் இணைந்து தனது தேசப்பணியை துவங்கி அவரது குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
லெப்டிநெண்ட் கபிலன் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக டேராடூன் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார், இந்திய ராணுவ அகாடமியில் முன்னாள் பீல்ட் மார்ஷல் சாம் மானக்ஷாவின் நினைவாக உருவாக்கப்பட்ட சாம் மானக்சா பட்டாலியனுடைய அங்கமான சோஜிலா கம்பெனியில் பயிற்சி அதிகாரியாக ராணுவ திட்டமிடல், உடல் தகுதி, ஆயுதங்களை கையாள்வது உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகளைப் பெற்று பின்னர் இந்திய தரைப்படையின் பாரா சூட் ரெஜிமென்டின் அங்கமான பாரா சிறப்பு படை PARA SPECIAL FORCES படைகளுக்கான முதல் கட்ட தேர்வில் வெற்றி பெற்று உள்ளார்.
இனி இவர் எந்த பாரா சிறப்பு படை பட்டாலியனுக்கு தேர்வாகி உள்ளாரோ அந்த பட்டாலியனுக்கு இனி சென்று பல மாதங்கள் நீடிக்கும் முழு தேர்வை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறும் பட்சத்தில் அந்தப் படையில் அதிகாரியாக பணியமர்த்தப்படுவார், ஒருவேளை அந்த தேர்வுகளில் வெற்றி பெற விட்டாலும் கூட அவருக்கு இந்திய தரைப்படையின் பயிற்சி கட்டளையகம் ஒதுக்கீடு செய்யும் ரெஜிமென்ட் அல்லது சேவை படையில் அதிகாரியாக இணைந்து பணியாற்றுவார்.
லெப்டிநன்ட் கபிலன் உடைய தந்தை திரு வெற்றிச்செல்வம் ஆவார். இவர் ஒரு தினக்கூலி தொழிலாளி ஆவார். ஒரு நாளுக்கு ரூபாய் 100 என்ற அளவிற்கு சம்பளம் பெறும் சுமை தூக்கும் தொழிலாளி ஆவார், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இவரது உடலின் ஒரு பகுதி ஸட்ரோக் காரணமாக முற்றிலுமாக செயல் இழந்து விட்டது, அதைப்போல இவரது தாயார் காலம் சென்ற திருமதி பனையம்மாள் புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் அந்த நேரத்தில் கொரோனா பெரும் தொற்று பரவியது அந்தப் பெருந்தொற்று திருமதி பனையம்மாளையும் பாதித்தது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழ்மை நிலை மற்றும் உடல்நிலை மோசமான காரணத்தால் அவர் இயற்கை எய்தினார்.
திரு கபிலன் குடும்பத்தில் மூத்த மகன் ஆவார் இவருக்கு ஒரு சகோதரரும் உண்டு குடும்பத்தின் ஏழ்மை சூழல் காரணமாக குடும்பத்திற்காக உழைத்து கொண்டே தனது சிறுவயது கனவான ராணுவ அதிகாரி கனவை நோக்கி தனது பயணத்தை கடும் கஷ்டத்திற்கு இடையே நம்பிக்கையை விடாமல் தொடர்ந்து வந்தார், சிவில் இன்ஜினியரிங் முடித்திருந்த அவர் அதற்கேற்ற ஒரு சிறிய வேலையிலும் இணைந்து ஒரு கையில் குடும்ப பாரம் மறு கையில் தனது லட்சியம் ஆகியவற்றை சுமந்து கொண்டே பயணித்தார். பத்து முறை ராணுவ அதிகாரிக்கான தேர்வில் தோல்வியடைந்த அவர் 11 வது முறை தேர்ச்சி பெற்று பயிற்சியில் இணைந்தார்.
இவர் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் வழிகாட்டலின் கீழ் இயங்கும் ஒரு தனியார் மீட்புக் குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார் அந்தக் குழுவுடன் சென்று சென்னை மற்றும் குமரி புயல்களில் மீட்பு பணியிலும் ஈடுபட்டுள்ளார் இவரது முயற்சி 200 பேரின் உயிர்களை காப்பாற்ற உதவி உள்ளது பலர் கடமைகள் மற்றும் படிப்பு ஆகியவற்றின் சுமைகளால் தங்களது கனவுகளை இழக்கும் சூழல்கள் சர்வ சாதாரணமானது தான் ஆனால் இவர் அத்தகைய சூழலிலும் தளராமல் முயற்சி செய்தார் காலை 10 மணி முதல் 4 மணி வரை வேலை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தேர்வுக்கான தயார் எடுப்புகளில் ஈடுபட்டு இன்றைக்கு இந்த சாதனையை புரிந்துள்ளார்.
பயிற்சி நிறைவு விழாவில் தனது தாயாரின் புகைப்படம் மற்றும் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோருடன் புகைப்படத்திற்கு பெருமையுடன் போஸ் கொடுத்த கபிலன் அவர்கள் பேசும்போது மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே நான் பலமுறை தோல்வியை சந்தித்தேன் ஆனாலும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எனது கனவை கைவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்தேன் இன்று அதை அடைந்து விட்டேன் இந்த வெற்றி எனக்கானது மட்டுமல்ல என்னைப்போல ராணுவத்தில் இணைய வேண்டும் என முயற்சி செய்யும் பலருக்குமானது, ஒரு நாளுக்கு வெறும் நூறு ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் என்னை போன்ற ஒரு சுமை தூக்கும் தொழிலாளியின் மகனால் இதை சாதிக்க முடியும் என்றால் யாருக்கு வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என மகிழ்ச்சியுடன் பேசுகிறார்.
இந்த கண்கொள்ளாக் காட்சியை காண அவரது தாயார் திருமதி பனயம்மாள் தற்போது இவ்வுலகில் இல்லை என்றாலும் இத்தனை வருடங்கள் அந்த குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு அவர்களை கவனித்து கபிலன் அவரையும் அவரது சகோதரரையும் படிக்க வைத்த அவரது தந்தை இனி பெருமையுடன் தனது மகன் இந்திய ராணுவத்தில் அதிகாரி எனவும் இந்திய அரசின் குரூப் ஏ அதிகாரி எனவும் மகிழ்ச்சி அடைய முடியும், லெப்டிநண்ட் கபிலன் உடைய சகோதரரும் ஒரு உயரிய லட்சியத்தை தனது வாழ்க்கையில் கொண்டுள்ளார் அவர் இந்திய அரசின் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமை பணி தேர்வுகளுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது அவரும் தனது லட்சியத்தை அடைய வாழ்த்துகிறோம்.