சிரியா விவகாரம் இந்தியா உட்பட உலக நாடுகளின் எதிர்வினைகள் !!

சிரியா விவகாரம் இந்தியா உட்பட உலக நாடுகளின் எதிர்வினைகள் !

சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாத் தனது குடும்பத்தினருடன் சிரியாவை விட்டு வெளியேறி ரஷ்யாவில் அரசியல் அடைக்கலம் புகுந்துள்ள நிலையில் ஹையத் தஹ்ரீர் அல் ஷாம் இயக்கம் பெரும் பங்கு வகித்து கூடவே மேலும் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் படைகளும் சேர்ந்து சிரியாவையும் அதன் தலைநகர் டமஸ்கசையும் கைப்பற்றியுள்ளது உலக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாகும் இதற்கு இந்தியா உட்பட பல்வேறு சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் ஆற்றிய எதிர்வினைகளை தற்போது வரிசையாக பார்க்கலாம்.

இந்தியா: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சிரியாவில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளுக்கு இடையே சிரியாவின் நிலையை உன்னிப்பாக இந்திய அரசு கவனித்து வருகிறது தமஸ்கஸ் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் சிரியாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அவர்களுடன் தொடர்பை கொண்டிருப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது, சிரியாவில் அனைத்து அமைப்புகளும் ஒன்றாக இணைந்து அந்நாட்டின் ஒற்றுமை இறையாண்மை மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்துவதாகவும் சிரிய சமூகத்தின் அனைத்து பிரிவுகளும் உள்ளடங்கிய ஒரு அமைதியான ஜனநாயக முறையை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்டோணியோ குவட்டரேஸ் சிரியாவில் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது வரவேற்பதாகவும் இனி அந்நாட்டை மீண்டும் கட்டமைப்பதில் அந்நாட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் 14 ஆண்டுகள் கொடூர உள்நாட்டு யுத்தமும் சர்வாதிகார ஆட்சியும் முடிவுக்கு வந்துள்ள நிலையில் சிரியாவில் மக்கள் இனி ஒரு அமைதியான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளதாகவும் இந்த உணர்ச்சிகரமான நேரத்தில் வன்முறையை கைவிட்டு அமைதியை கடைப்பிடித்து எந்த பாகுபாடும் இன்றி அனைத்து சிரிய மக்களின் உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் :

ஐரோப்பிய ஒன்றிய கமிஷன் தலைவர் அர்சலா வான் டெர் லேயன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க மாற்றம் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்க உள்ளது ஆனாலும் பல்வேறு சவால்களும் இதில் அடங்கியுள்ளது சிரியாவின் தேசிய ஒற்றுமைக்கும் அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்கும் சிரியாவை உருவாக்குவதிலும் அதனுடைய மேல் கட்டமைப்பிலும் உதவுவதற்கு ஐரோப்பா தயாராக உள்ளது எனவும் இது தொடர்பாக சிரியாவில் நிகழ் பெற்று வரும் சம்பவங்களை தொடர்ச்சியாக கவனித்து வருவதாகவும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பதிவிட்டுள்ளார்,

அதேபோல ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் கேஜா கேல்லாஸ் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியின் வீழ்ச்சி ஒரு சிறப்பான மாற்றம் எனவும் இது மிகுந்த நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது எனவும் இதன் மூலமாக ஆசாத்தை ஆதரித்து வந்த ரஷ்யா மற்றும் ஈரான் உடைய பலவீனங்கள் வெளிப்பட்டுள்ளதாகவும் எங்களது முதன்மை கடமை தற்போது அந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்பு சூழலை உறுதி செய்வதாகும் இது தொடர்பாக சிரியா மற்றும் அந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து கூட்டாளிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

துருக்கி: துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் பிதான் சிரியா நாட்டு மக்கள் தங்கள் நாட்டின் எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் புதிய தினத்தில் காலடி எடுத்து வைத்துள்ளனர் சிரியாவின் காயங்களை ஆற்றவும் மேலும் அந்நாட்டின் ஒற்றுமை இறையாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கு துருக்கி அரசு எந்தவிதமான உதவியையும் செய்ய தயாராக உள்ளதாகவும் வரும் காலங்களில் இவற்றை சாத்தியப்படுத்தும் விதமாக சர்வதேச மற்றும் பிராந்திய நாடுகளுடன் இணைந்து எங்களது பணிகளை தீவிர படுத்த உள்ளோம் என எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகூ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் மத்திய கிழக்கிற்கு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தினம் எனவும் பஷர் அல் ஆசாத்தின் சர்வாதிகாரம் மற்றும் கொடுங்கோல் ஆட்சியின் வீழ்ச்சி சிரியா நாட்டு மக்களுக்கு பல்வேறு சிறப்பான வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது எனவும் ஆனாலும் பல்வேறு ஆபத்துகளும் அதில் உள்ளடங்கும் எனவும் சிரியாவில் வசிக்கும் ட்ரூஸ், குர்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்ரேலுடன் அமைதியை விரும்பும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் நட்பு கரத்தை இஸ்ரேல் நீட்டுவதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் இடையே பேசும்போது கடைசியாக பஸர் அல் ஆசாத்தின் கொடுங்கோல் ஆட்சி விழுந்து விட்டதாகவும் இது நீதியின் அடிப்படை நியதி எனவும், மிக நீண்ட நாட்களாக துன்பங்களை அனுபவித்து வந்த சிரியா நாட்டு மக்களுக்கு தங்களது நாட்டிற்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இந்த விவகாரத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் ரஷ்யா ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளால் சிரியாவில் ஆசாத்தின் ஆட்சியை காப்பாற்ற முடியவில்லை, இதற்கு காரணம் உக்ரைன் மற்றும் இஸ்ரேல் ஆகியவை அமெரிக்காவின் ஆதரவோடு தங்களது தற்காப்புக்காக ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் ஈரான் ஆதரவு பயங்கரவாத கொடுத்த அடி தான் காரணம் எனவும் கூறியுள்ளார்.

நெதர்லாந்து: நெதர்லாந்து நாட்டின் பிரதமர் டிக் ஷ்கூஃப் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சிரியாவின் முன்னாள் அதிபர் ஆசாத்தின் வீழ்ச்சியை அவரது கொடுங்கோள் ஆட்சியின் கீழ் தவித்த அனைவருக்கும் கிடைத்த விடுதலை மற்றும் நிம்மதி என வர்ணித்துள்ளார் மேலும் சிரியாவில் அமைதியான அதிகார மாற்றம் மற்றும் ஸ்திரதன்மையை நிலை நாட்டுவது மற்றும் அந்நாட்டின் சிறுபான்மையினரை பாதுகாப்பது அந்தப் பிராந்தியத்திற்கும் சிரியாவிற்கும் மிகவும் இன்றி அமையாததாகும், சிரியாவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழல்களை தங்கள் அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்து: இங்கிலாந்து நாட்டின் பிரதமர் கியர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையில் சிரியாவில் நடைபெற்ற நிகழ்வுகள் முற்றிலும் எதிர்பாராதது பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியின் கீழ் சிரியா நாட்டு மக்கள் மிகுந்த கொடுமைகளை அனுபவித்து வந்ததாகவும் ஆசாத்தின் வீழ்ச்சியை இங்கிலாந்து வரவேற்பதாகவும் தற்போது இங்கிலாந்து அரசின் நோக்கம் சிரியாவில் அரசியல் தீர்வு அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை நிலைநாட்டுவது குறித்ததாகும் என தெரிவித்துள்ளார்.

போலந்து: போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் இது குறித்த தனது எக்ஸ் வலைதள பதிவில் சிரியாவில் ஆசாத் ஆட்சியின் வீழ்ச்சி ரஷ்யாவும் அதன் நட்பு நாடுகளும் வீழ்த்தப்பட முடியும் என்பதை காட்டுகிறதாகவும் சிரியாவில் நடைபெற்ற நிகழ்வுகள் உலகத்திற்கு கொடுமை நிறைந்த ஆட்சிகள் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

ஃபிரான்ஸ்: பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது எக்ஸ் வலைதள பதிவில் முன்னாள் சிரியா நாட்டு அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி கொடுங்கோள் ஆட்சி எனவும் அது வீழ்ச்சி அடைந்தது நிம்மதியை தருவதாகவும் இதை சாத்தியமாக்கிய சிரியா நாட்டு மக்களுக்கும் அவர்களின் அர்ப்பணிப்புக்கும் அவர்களின் தைரியத்திற்கும் மரியாதை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் இனி அடுத்தது என்ன என்ற நிச்சயமற்ற இந்த நேரத்தில் அந்நாட்டு மக்களுக்கு சமாதானம் சுதந்திரம் ஒற்றுமைக்கான எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கின் பாதுகாப்பில் பிரான்ஸ் மிகவும் உறுதியாக உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

ஜெர்மனி: ஜெர்மனி நாட்டின் வேந்தர் ஓலாப் ஷ்கோல்ஸ் பஷர் அல் ஆசாத் தெரிந்த பல லட்சம் மக்களைக் கொன்றதாகவும் பல லட்சம் பேர் சிரியாவை விட்டு அகதிகளாக வெளியேற காரணமாக இருந்ததாகவும் அவரது கொடுங்கோல் ஆட்சியில் கொல்லப்பட்டூர் சித்திரவதை செய்யப்பட்டோர் அகதிகளாக வெளியேறியவர்கள் என பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டவர்களுடன் எங்கள் சிந்தனைகள் உள்ளது எனவும் கடந்த சில ஆண்டுகளாக சிரியா நாட்டு மக்கள் ஆசாத் ஆட்சியில் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் அதனாலேயே ஆசாத் ஆட்சியின் முடிவு நல்ல செய்தி எனவும் இனி பாகுபாடின்றி அனைத்து சிரியா நாட்டு மக்களும் சுயமரியாதையுடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இதை வைத்தே இனி வரும் சிரியா நாட்டு அரசாங்கத்தை நாங்கள் மதிப்பீடு செய்வோம் எனவும் பதிவிட்டுள்ளார்.

ரஷ்யா: ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சிரியாவில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக ரஷ்ய அரசு கவனித்து வருவதாகவும் சிரியாவில் தற்போது அனைவரும் வன்முறையை கைவிட்டு அரசியல் தீர்வை நோக்கி நகர வேண்டும் எனவும் தற்போதைக்கு சிரியாவை பொறுத்தவரையில் ரஷ்யாவின் பிரதான நோக்கம் தங்களது கூட்டாளிகள் தங்கள் நாட்டுப் பிரஜைகள் தூதரக அதிகாரிகள் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ராணுவத்தினரின் பாதுகாப்பு ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா: சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சிரியாவில் ஏற்பட்டுள்ள சூழலை சீனா மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் வெகு சீக்கிரமாகவே சிரியாவில் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் சிரியாவில் உள்ள சீன குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் சிரியாவை விட்டு வெளியேற விரும்பும் சீன மக்களின் பாதுகாப்பான வெளியேற்றத்தை உறுதி செய்வதிலும் சீன அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சிரியாவின் அதாவது பஷர் அல் ஆசாத் தலைமையிலான சிரியா அரசின் நெருங்கிய கூட்டாளிகளான ஈரான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளின் அரசுகள் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிக்கைகளையும் இந்த விவகாரத்தில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும், எது எப்படியோ பஷர் அல் ஆசாத்தின் வீழ்ச்சி ரஷ்யா ஈரான் சீனா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.