இந்திய கடற்படை தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி திங்கட்கிழமை அன்று இந்திய கடற்படையின் தலைமையகத்தில் நடைபெற்ற வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது பாகிஸ்தான் கடற்படையின் வளர்ச்சி அபாரமாக உள்ளதாகவும் மிக மோசமான பொருளாதார சூழலிலும் கூட அவர்களின் கடற்படை பலம் அதிகரித்து வருவது ஆச்சரியப்படுத்துகிறது எனவும் பாகிஸ்தான் கடற்படையின் வளர்ச்சி தங்களை வியப்பில் ஆழ்த்துவதாகவும் ஆனால் அதற்கு காரணம் பாகிஸ்தான் மக்கள் நலனை விட ஆயுத பலத்தில் அதிக கவனம் செலுத்துவது எனவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசும் போது பாகிஸ்தான் கடற்படை 50 போர்க்கப்பல்களை இணைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் ஏற்கனவே பல கப்பல்கள் சீன உதவியுடன் பாகிஸ்தானில் கட்டப்பட்டு வருவதாகவும் இன்னும் பல கப்பல்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சீனா பாகிஸ்தானுக்கு எட்டு டீசல் எலக்ட்ரிக் நிர்மூழ்கி கப்பல்களை கட்டமைத்து வழங்கும் பணிகளை துவங்கி உள்ளதையும் சுட்டிக்காட்டி சீனா இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை பலப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் பாகிஸ்தானுடைய இந்த செயல்பாடுகளுக்கு எதிராக இந்திய கடற்படையும் தனது பலத்தை அதிகரிக்கும் வகையில் எதிர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
அதேபோல் இந்திய பெருங்கடலில் சீன கடற்படையின் நடவடிக்கைகள் பற்றி பேசும்போது இந்திய பெருங்கடலில் சீன கடற்படை போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களின் நடவடிக்கைகளையும் செயல்பாடுகளையும் கண்காணிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கடந்த ஓராண்டு காலத்தில் இந்திய பெருங்கடலில் சீன கடற் படையை மிக நெருக்கமாகவும் துல்லியமாகவும் இந்திய கடற்படை கண்காணித்ததாகவும் இந்திய பெருங்கடலில் யார் யார் எங்கு எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்கள் அனைத்தும் இந்திய கடற்படையின் வசம் எந்நேரமும் இருப்பதாகவும் கூறினார்.
மேலும் அவர் பேசும் போது கடல்களும் பெருங்கடல்களும் அனைவருக்குமானது அவற்றில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கவும் இயங்கவும் சுதந்திரம் உள்ளது ஆனால் அது நம்மை நமது கடல் சார் பாதுகாப்பையும் தேசிய பாதுகாப்பையும் பாதிக்காத வரையில் யாருக்கும் பிரச்சனை இல்லை அந்த அடிப்படையில் இந்திய கடற்படை இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் ஏற்கனவே இந்திய பெருங்கடல் பகுதியில் எந்தெந்த சக்திகள் எங்கெல்லாம் இயங்குகின்றன என்பதை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வசதிகளை இந்திய கடற்படை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது கூடுதல் சிறப்புமிக்க தகவலாகும்.