அடுத்தாண்டு முதல் மாதம் இந்திய கடற்படைக்கான ரபேல் போர் விமானங்கள் மற்றும் மூன்று நீர்மூழ்கி கப்பல்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் !!

நேற்று அதாவது திங்கட்கிழமை அன்று இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள இந்திய கடற்படையின் தலைமையகத்தில் நடைபெற்ற வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடையே பேசும்போது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்திய கடற்படைக்கான 26 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான மற்றும் மூன்று ஸ்கார்பின்/கல்வரி ரக டீசல் எலக்ட்ரிக் நிர்மூழ்கி கப்பல்கள் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படையின் புத்தம் புதிய உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான INS VIKRANT விக்ராந்த் போர்க்கப்பலுக்கான போர் விமானங்கள் வாங்குவதற்கான தேடலும் முயற்சிகளும் ஒரு சில வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தன, ஆனால் தற்போது வரை எவ்வித உறுதியான முடிவுகளும் எட்டப்படவில்லை மேலும் இது இந்திய கடற்படையின் ஒரு விமானம் தாங்கி கப்பலின் முழு செயல்பாட்டுத் திறனையும் வெளிப்படுத்துவதில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வந்தது, இந்திய கடற்படையும் அமெரிக்க மற்றும் பிரெஞ்சு போர் விமானங்களை இதற்காக சோதனை செய்தது.

தொடர்ந்து இந்த சோதனைகளில் பிரான்ஸ் நாட்டின் DASSAULT AVIATION டசால்ட் ஏவிகேசன் நிறுவனம் தயாரிக்கும் Rafale ரபேல் போர் விமானங்களின் கடல்சார் வடிவமான Rafale M (Marine) என அழைக்கப்படும் ரபேல் எம் (மரைன்) ரக போர் விமானம் தேர்வு செய்யப்பட்டது, தொடர்ந்து இத்தகைய 26 போர் விமானங்களை இந்திய கடற்படைக்கு வாங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தன இதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் பல கட்ட பேச்சு வார்த்தைகளும் விவாதங்களும் நடைபெற்று வந்த நிலையில் காலதாமதம் ஆகி வந்தது, இதற்கு முக்கிய காரணம் இந்த விமானங்களின் விலை பற்றி பிரான்ஸ் முன்வைத்த நிபந்தனைகளாகும் இதன் காரணமாக இந்த விவகாரத்தில் ஒரு சமரசம் முடிவு எட்டப்படாமல் இருந்தது.

தற்போது இந்த விமானங்களை ஏற்கனவே இந்திய விமான படைக்கு எந்த விலையில் பிரான்ஸ் ரஃபேல் போர் விமானங்களை அளித்ததோ அதே விலையில் அளிப்பதற்கு தற்போது பிரான்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது, இந்திய கடற்படையின் தலைமை தளபதியின் கூற்றுப்படி இந்த விமானங்கள் வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்ட நிலையை எட்டி உள்ளதாகவும் இருநாட்டு அரசுகளுக்கு இடையிலான நேரடி ஒப்பந்தம் என்பதால் இதில் காலதாமதம் ஏற்படாது எனவும் மிக விரைவாக இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தார் மேலும் இனி பாதுகாப்பு துறைக்கான கேபினட் கமிட்டியின் ஒப்புதலுக்கு மட்டுமே காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த ரபேல் மரைன் ரக கடல்சார் போர் விமானங்கள் பிரான்ஸ் மற்றும் இந்திய விமானப்படைகளில் பயன்படுத்தப்படும் ரபேல் போர் விமானங்களை விடவும் சற்றே வடிவமைப்பில் வித்தியாசமானதாகும் குறிப்பாக இந்த வகை விமானங்களின் மூக்குப்பகுதி நீளமானதாகவும் உறுதி தன்மையை அதிகமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும் அதே போல இந்த வகை விமானங்கள் விமானம் தாங்கி கப்பலில் அதிக வேகத்தில் தரையிறங்க வேண்டியிருக்கும் என்பதால் இவற்றின் அடிப்பகுதியும் கூடுதல் உறுதி தன்மையை கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

இது தவிர இந்திய கடற்படையின் கோரிக்கையையும் ஃபிரான்ஸ் அரசு ஒப்புக் கொண்டுள்ளது அதன்படி இந்த விமானங்களில் முழுவதும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட அதிநவீன உத்தம் AESA வகை ரேடார்கள் பொருத்தப்படும் இது தவிர இந்தியாவிலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட ருத்ரம் மற்றும் அஸ்திரா போன்ற அதிநவீன ஏவுகணைகளையும் இணைத்து பயன்படுத்த முடியும் இது தவிர ஃபிரெஞ்சு தயாரிப்பு ஆயுதமான அதிநவீன MBDA Meteor ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு நிறுவனமான எம் பி டி ஏ தயாரிக்கும் அதிநவீன மிட்டியோர் ஏவுகணைகளும் இந்த விமானங்களில் பயன்படுத்தப்படும்.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்திய விமானப்படையின் ரபேல் விமானங்களுக்கு தேவையான 40 வெளிப்புற எரிபொருள் டாங்குகளும், சிறிய எண்ணிக்கையிலான பராமரிப்பு கருவிகளும் வாங்கப்பட உள்ளதாக பாதுகாப்பு துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆக இந்திய கடற்படைக்காக வாங்கப்படும் இந்த 26 ரபேல் போர் விமானங்களும் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு எந்த விலை நிர்ணயிக்கப்பட்டிருந்ததோ அந்த விலையில் வாங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மற்றொரு மேலும் சிறப்பான தகவல் என்னவென்றால் இந்திய கடற்படை ஏற்கனவே இயக்கி வரும் பிரெஞ்சு நாட்டு நிறுவனமான NAVAL GROUP தயாரிக்கும் ஆறு ஸ்கார்பீன் ரக (இந்தியாவில் கல்வரி என்ற பெயர் கொண்ட) டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை போன்ற மேலும் மூன்று கூடுதல் கல்வரி ரக டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை இந்தியாவிலேயே மும்பை மசகான் கப்பல் கட்டுமான தளத்தில் கட்டமைப்பதற்கான ஒப்பந்தமும் இறுதிசெய்யப்பட உள்ளதாக இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி கூறியுள்ளார் இந்த ஒப்பந்தமும் இந்தியா மற்றும் பிரான்ஸ் அரசுகளுக்கு இடையேயான நேரடி ஒப்பந்தமாக இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு மிக்க தகவல் ஆகும்.