இந்திய சீனப் பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எட்டப்பட்ட 6 முடிவுகள் !!

இந்திய சீனப் பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எட்டப்பட்ட 6 முடிவுகள் !!

டிசம்பர் 18ஆம் தேதி இந்தியா சீனா சிறப்பு பிரதிநிதிகள் இடையேயான இந்திய சீன எல்லை பிரச்சனை தொடர்பான 23வது இருதரப்பு சந்திப்பு சீன தலைநகர் பீஜிங் நகரில் நடைபெற்றது கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு தரப்பு பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற முதலாவது பேச்சுவார்த்தை இதுவாகும் சமீபத்தில் ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் போது இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் இடையே எட்டப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் சீனாவின் சிறப்பு பிரதிநிதியாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யீ மற்றும் இந்திய தரப்பில் சிறப்பு பிரதிநிதியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் தலைமையில் இந்த இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

இந்த சிறப்பு பிரதிநிதிகளின் இரு தரப்பு பேச்சு வார்த்தையில் இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லை பிரச்சினையில் ஆறு மிக முக்கியமான முடிவுகள் ஒரு மனதுடன் எட்டப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அந்த ஆறு முடிவுகள் என்னவென்று அடுத்தடுத்து கீழே நாம் பார்க்கலாம், இந்த ஆறு முடிவுகளும் இரு நாடுகளாலும் ஒரு மனதுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

1) இரு தரப்பினரும் இரு நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்சனையில் எட்டப்பட்ட முடிவுகளை ஆராய்ந்து அவற்றை அமல்படுத்தும் பணிகளை தொடர வேண்டும் எனவும் ஒட்டுமொத்தமான இருதரப்பு உறவுகளில் இருந்து எல்லை பிரச்சினைகளை தனியாக பிரித்து அதாவது ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளையும் பாதிக்காத வகையில் எல்லை பிரச்சினையை மட்டும் தனியாக கையாள வேண்டும் எனவும் மேலும் இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் சமாதானத்தை நிலைநாட்டும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் இரு தரப்பு உறவுகளின் ஆரோக்கியமான மற்றும் ஸ்திரமான வளர்ச்சியை இருதரப்பினரும் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் ஒரு மனதுடன் ஒப்புக்கொள்ளப்பட்டது.

2) கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் சிறப்பு பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது இரு நாடுகள் இடையேயான எல்லை பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்ப்பதற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட அரசியல் வழிகாட்டல் நெறிமுறைகளின் அடிப்படையில் நியாயமான மற்றும் இரு தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட கூடிய தீர்வை ஏற்படுத்துவதற்கான தங்களது உறுதியான நிலைப்பாட்டை இரு தரப்பினரும் ஒரு மனதுடன் உறுதி செய்து கொண்டனர்.

3) இருதரப்பு பிரதிநிதிகளும் இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லையோர பகுதிகளில் நிலவும் சூழலை ஆராய்ந்து அதன் அடிப்படையில் எல்லைப் பகுதிகளில் உள்ள மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு விதிகளை மேலும் சீர்படுத்தவும், நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அதிகரிக்கவும் மற்றும் நிலையான அமைதி மற்றும் சமாதானத்தை எல்லைப் பகுதிகளில் எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இரு தரப்பினரும் ஒரு மனதுடன் ஒப்புக் கொண்டனர்.

4) இரு தரப்பு பிரதிநிதிகளும் இந்தியா சீனா இடையேயான எல்லையோர பகுதிகளில் இருதரப்பு எல்லையோர ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்ற நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையேயான நதிகள் தொடர்பான ஒத்துழைப்பை அதிகப்படுத்தவும், நாதுலா எல்லை வழியாக வர்த்தகத்தை துவங்கவும், திபெத்தில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு இந்தியர்களை அனுமதிக்கவும் இருதரப்பினரும் ஒரு மனதுடன் ஒப்புக்கொண்டனர்.

5) இரு தரப்பினரும் இரு நாடுகள் இடையேயான சிறப்பு பிரதிநிதிகள் சந்திப்புக்கான கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும் ராஜதந்திரம் மற்றும் ராணுவ பேச்சு வார்த்தைகளில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகப்படுத்தவும் எல்லை பிரச்சினைகளில் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான இந்தியா சீன பணிக்குழு சிறப்பு பிரதிநிதிகளின் சந்திப்பில் எட்டப்பட்ட முடிவுகளை அமல்படுத்தவும் ஒப்புக்கொண்டனர்.

6) இந்தியா சீனா சிறப்பு பிரதிநிதிகள் இடையேயான அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை அடுத்த ஆண்டு இந்தியாவில் நடத்துவதற்கும் இந்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான நாட்களை ராஜதந்திர செயல்பாடுகள் அதாவது இரு நாடுகளின் வெளியுறவு துறைகள் மூலமாக இறுதி செய்வதற்கும் இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இது தவிர இருதரப்பினரும் இரு தரப்புக்கும் பொதுவாக கவலை அளிக்கும் பிராந்திய சர்வதேச மற்றும் இருதரப்பு விவகாரங்கள் பற்றிய விரிவான மற்றும் ஆழமான புரிதல்களை பரிமாறிக் கொண்டனர் மேலும் சர்வதேச மற்றும் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் நிலையான மற்றும் கணிக்கக் கூடிய நன்மை பயக்கும் இந்திய சீன உறவுகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திக் கொண்டது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்.