உக்ரேன் போர் உலகளாவிய போராக மாற்றமடைந்து வருகிறது-ரஷ்ய அதிபர் புடின் !!

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளின் அதிநவீன தொலைதூர தாக்குதல் குரூஸ் ஏவுகணைகளை உக்ரேன் ராணுவம் பயன்படுத்தி ரஷ்ய எல்லைக்குள் தாக்குதல் நடத்த அனுமதி அளித்ததை தொடர்ந்து உக்ரேன் போர் உலகளாவிய போராக மாற்றமடைந்து வருவதாகவும் இது இப்படியே தொடர்ந்தால் மேற்கத்திய நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் உக்ரேன் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தயாரிப்பு அதிநவீன தொலைதூர தாக்குதல் குரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்ய எல்லைக்குள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ரஷ்யா தனது புத்தம் புதிய ஒரேஷ்நிக் என்ற இடைத் தூர ஹைப்பர்சானிக் பலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி மிக முக்கியமான உக்ரைனிய ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியதை சுட்டிக்காட்டி இத்தகைய தாக்குதல்கள் தொடரும் எனவும் அத்தகைய தாக்குதல்களுக்கு முன்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்ய அதிபர் புடின் பேசும் போது ரஷ்யா மீது உக்ரைன் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தயாரிப்பு ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்திய நொடி முதல் ரஷ்யா இந்தப் போர் பிராந்திய தன்மைகளை இழந்து உலகளாவிய போருக்கான தன்மைகளை அடைந்து விட்டதாகவும் குறிப்பாக அமெரிக்கா ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரு உலகளாவிய போருக்கு நேராக தள்ளுவதாகவும் மேலும் ரஷ்யாவை மீண்டும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலமாக அளித்த உரையின்போது தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் அந்த உரையில் பேசும்போது அமெரிக்க தயாரிப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி உக்கிரன் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவுக்கு எந்தவித குறிப்பிடத்தக்க சேதமும் ஏற்படவில்லை எனவும் ஆனால் இங்கிலாந்து தயாரிப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி உக்கிரன் நடத்திய தாக்குதலில் ஒரு முக்கியமான ரஷ்ய ராணுவ கட்டளை தளம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் இதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறினார்.

இத்தகைய ஆயுதங்களின் பயன்பாடு உக்ரைனில் ரஷ்ய இராணுவத்தின் செயல்பாடுகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் மேலும் இது போன்ற அதிநவீன ஆயுதங்களை உக்ரைன் தங்களது ராணுவத்திற்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகளின் மீது ரஷ்யா ஆயுதங்களை பிரயோகிப்பதற்கு அனைத்து உரிமையும் காரணிகளும் உள்ளதாகவும் ஆனால் இத்தகைய தாக்குதல்கள் ரஷ்யாவால் நடத்தப்படும் என்பதை சந்தேகிப்பவர்கள் தவறான சிந்தனையில் உள்ளதாகவும் நிச்சயமாக அதற்கு பதிலடிகள் இருக்கும் எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்