ரஷ்யா மீது அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தயாரிப்பு தொலைதூரத் தாக்குதல் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய உக்ரைன் !!

சமீபத்தில் அமெரிக்க அரசு உக்ரேனுக்கு தொலைதூர தாக்குதல் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்க தயாரிப்பு தொலைதூர தாக்குதல் ஏவுகணைகளை பயன்படுத்தி இரஷ்யா மீது உக்ரேன் தாக்குதல் நடத்தியது. அமெரிக்க அரசின் இந்த ஒப்புதலுக்கு முன்பாக இத்தகைய ஏவுகணைகளை உக்ரைன் நாட்டு எல்லைக்குள் மட்டுமே பயன்படுத்த அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் ரஷ்யாவின் எல்லைக்குள் மேற்கத்திய நாடுகளின் தொலைதூர தாக்குதல் ஏவுகணைகளை பயன்படுத்தி உக்கரையின் தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத தாக்குதலை ரஷ்யா நடத்த தயங்காது என்று அறிவிப்பை வெளியிட்டு ரஷ்யாவின் அணு ஆயுத தாக்குதல் கொள்கையில் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் இதைத் தொடர்ந்து சமூக வலைதள பாதுகாப்பு கணக்குகளில் ரஷ்யா தனது அதிநவீன RS – 26 ரக கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத தாக்குதல் ஏவுகணைகளை தயார் படுத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.

இதற்கிடையே நேற்று இரண்டு மிக முக்கியமான சம்பவங்கள் நடைபெற்றன. முதலாவது அமெரிக்க அரசு உக்ரைன் ராணுவம் கண்ணி வெடிகளை பயன்படுத்த அனுமதி அளித்தது. இரண்டாவதாக உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதி மீது இங்கிலாந்து தயாரிப்பான Storm Shadow தொலைதூர தாக்குதல் குரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யாவின் எச்சரிக்கையையும் மீறி தாக்குதல் நடத்தியது. முன்னர் இங்கிலாந்து இந்த ஏவுகணைகளை உக்ரேன் ராணுவம் உக்ரேன் எல்லைக்குள் மட்டுமே பயன்படுத்த அனுமதி அளித்திருந்தாலும் தொடர்ச்சியாக அமெரிக்க அரசிடம் அத்தகைய கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு வலியுறுத்தி வந்தது. தற்போது அமெரிக்க அரசு ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதி மீது தாக்குதல் நடத்த மட்டுமே இவற்றை பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுபாட்டை விதித்துள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் அலுவலகத்தை ஊடகவியலாளர்கள் தொடர்பு கொண்ட போது இத்தகைய முக்கியமான போர் சம்பந்தமான ராணுவ நடவடிக்கைகள் பற்றி பொதுவெளியில் கருத்து தெரிவிக்க முடியாது என மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரிய வீரர்கள் குர்ஸ்க் பகுதியில் களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும் உக்ரேன் தன்னுடைய ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பு ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கிடையே அமெரிக்காவின் இந்த கொள்கை மாற்றம் ரஷ்யா உக்ரேன் போர் ஆயிரம் நாட்களை கடந்துள்ள நிலையில் வெளியாகி உள்ளது மிக முக்கியமான நிகழ்வாகும்.

இந்தக் கொள்கை மாற்றம் ரஷ்யாவின் முன்னேற்றத்தை தடுப்பதற்காகவும் வருகிற ஜனவரி மாதம் அதிபர் பைடனுடைய பதவி காலம் முடிந்து புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்பு பதவி ஏற்க உள்ள நிலையில் அவர் ரஷ்யா உக்ரேன் போரை ஒரு சில நாட்களிலேயே முடித்து வைப்பேன் எனக் கூறியுள்ளது தொடர்ந்து அதற்கு முன்பதாக அதாவது போர் நிறுத்தம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பதாக உக்ரைன் அரசை தற்போது உள்ள நிலையை விடவும் குறைந்தபட்ச வலுவான நிலையில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

அதே நேரத்தில் சில பாதுகாப்பு நிபுணர்கள் கூறும்போது உக்ரைனுக்கு மிக அதிக அளவில் ஆயுத உதவி மற்றும் பண உதவியை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் அளித்து வருகின்றன. ஆனால் அதிபராக வெற்றி பெற்றுள்ள ட்ரம்ப் இந்த உதவிகளை விமர்சித்துள்ளார். மேலும் தான் பொறுப்பேற்ற பிறகு உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படுத்துவேன் என கூறியுள்ளார். இது தற்போது அமெரிக்காவை ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்கும் முன் ஒன்று உக்ரைனை வலுவான நிலையில் அமர்த்துவது அல்லது இரண்டாவதாக போரை மிகவும் சிக்கலாக்கி அதிலிருந்து மீளவே முடியாத அதாவது போர் நிறுத்ததிற்கான வாய்ப்புகளையே இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளாக இதை கருதலாம் என கூறுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.