உலக வரலாற்றில் முதல் முறையாக அணு ஆயுத தாக்குதல் ஏவுகணையை பயன்படுத்திய ரஷ்யா – உக்ரைன் மீது தாக்குதல் !!

சமீபத்தில் அமெரிக்க அரசு உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் எல்லைக்குள் தொலைதூர தாக்குதல் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தலாம் என அனுமதி அளித்திருந்ததும் அதை தொடர்ந்து ரஷ்ய அரசு அத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படும் பட்சத்தில் உக்ரேனுக்கு எதிராகவும் அத்தகைய தாக்குதல்களை ஆதரிக்கும் அல்லது அத்தகைய தாக்குதல்களுக்கு உதவும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகவும் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்து புதிய அணு ஆயுத தாக்குதல் கொள்கையை வெளியிட்டு இருந்தது நாம் அனைவரும் அறிவோம்.

இந்த நிலையில் நேற்று இரண்டாவது முறையாக உக்கிரன் இங்கிலாந்து தயாரிப்பு STORM SHADOW தொலைதூர தாக்குதல் குரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதி மீது தாக்குதல் நடத்தியது, இதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக ரஷ்யா உலக வரலாற்றிலேயே முதல்முறையாக அணு ஆயுத தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைனுடைய டினிப்ரோ நகரம் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட ஏவுகணையில் அணு ஆயுதத்திற்கு பதிலாக வழக்கமான வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது, அதாவது இந்த தாக்குதல் மூலம் ரஷ்யா மிகக் கடுமையான எச்சரிக்கையை அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இதர மேற்கத்திய நாடுகளுக்கும் தெரிவித்துள்ளது.

அதாவது அணு ஆயுத தாக்குதலுக்கு மட்டுமே உலக நாடுகள் பயன்படுத்தக்கூடிய இதுவரை பயன்படுத்தப்படாத கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தற்போது பயன்படுத்தி வழக்கமான வெடிகுண்டுகளை மட்டுமே வைத்து தாக்குதல் நடத்தியுள்ளோம். ரஷ்யாவை இனியும் சீண்டினால் அல்லது ரஷ்யாவை இனியும் நெருக்கினால் இவற்றை பயன்படுத்தி அணு ஆயுத தாக்குதல் நடத்துவதற்கு கூட தயங்க மாட்டோம் என்னும் மறைமுக எச்சரிக்கை செய்திதான் அது. இந்த தாக்குதல் உலக அளவில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் இது ரஷ்யாவின் அசாத்திய துணிச்சலை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

இதற்கு முன்பதாக ஒரே ஒருமுறை தான் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த காலகட்டத்தில் ஏவுகணைகள் இல்லை மாறாக விமானத்திலிருந்து அணுகுண்டை வீசி தான் தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குப் பிறகுதான் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் அணு ஆயுத தாக்குதல் ஏவுகணைகளை வடிவமைத்து தயாரிக்க துவங்கியதும் அவற்றை இதுவரை எந்த நாடுகளும் மற்றொரு நாட்டின் மீது அணு ஆயுதமோ அல்லது வழக்கமான வெடிகுண்டுகளை வைத்தோ தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தவில்லை என்பதும் முக்கியமான தகவல்களாகும்.

இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ரஷ்ய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையிலிருந்து ஆறு குண்டுகள் பிரிந்து சென்று தாக்குதல் நடத்தியுள்ளன. ரஷ்யாவிடம் இத்தகை திறன் கொண்ட இரண்டே இரண்டு ஏவுகணைகள் தான் உள்ளன ஒன்று அவன்கார்ட் ஹைப்பர்சானிக் ஏவுகணை மற்றும் RS-18A எனவும் UR 100N எனவும் நேட்டோவால் SS-18 ஸ்டிலெட்டோ எனவும் அறியப்படும் ஏவுகணையாகும். நிச்சயமாக இத்தகைய மிரட்டல் தாக்குதலுக்கு ரஷ்யா விலை உயர்ந்த அதிநவீன புத்தம் புதிய ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை பயன்படுத்த வாய்ப்பில்லை. ஆகவே RS-18A ஏவுகணையை தான் ரஷ்யா பயன்படுத்தி இருக்க வேண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக உக்ரைன் போரில் மிக முக்கியமான ஆபத்தான திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மேல்குறிபிட்ட ஏவுகணை தவிர மேலும் ஏழு Kh-101 ஏவுகணைகள் மற்றும் ஒரு கின்சால் ஏவுகணை ஆகியவற்றை ரஷ்யா பயன்படுத்தி உள்ளது. இவற்றில் ஆறு Kh-101 ரக ஏவுகணைகளை உக்ரைன் விமானப்படை சுட்டு வீழ்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷ்யாவின் இந்த செயல் உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துமா அல்லது பலனளிக்காதா என்பதையும் இனி மேற்கத்திய நாடுகளின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.