கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை இந்தியாவின் போதை பொருள் தடுப்பு பிரிவு ஆணையம் இந்திய கடற்படை மற்றும் குஜராத் மாநில காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு ஆகியவை கூட்டாக ஒன்றிணைந்து சுமார் 700 கிலோ மெத் என அழைக்கப்படும் மெத்தாம்பிட்டமைன் போதைப் பொருளை குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் அருகே உள்ள கடலோரப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான படகு ஒன்றில் கைப்பற்றினர் மேலும் அதிலிருந்து 8 ஈரான் நாட்டவர்களை கைது செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள மெத்தாம்பட்டமைன் போதைப் பொருள் சர்வதேச சந்தை மதிப்பு படி ஒரு கிலோவுக்கு இரண்டு முதல் மூன்று கோடி ரூபாய் வரை விலை போகும் எனவும் ஆகவே மொத்தம் கைப்பற்றப்பட்டுள்ள 700 கிலோவும் 1400 முதல் 2100 கோடி ரூபாய் வரை மதிப்பு மிக்கவையாக இருக்கும் எனவும் இந்தப் படகு இந்திய கடல் பகுதியில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்ட சோதனை இடப்பட்டதாகவும் அப்போது இந்த போதை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாகவும் படகில் இருந்த 8 ஈரான் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் போதைப் பொருள் தடுப்பு ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட ஈரான் நாட்டவர்களின் பெயர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன,
1) முகமது பலூச் – 41
2) பலூச் – 20
3) இஸ்மாயில் இப்ராஹிம் – 23
4) ரசூல் பக்ஷ் – 51,
5) முகமது ராஹிசி – 55,
6) குலாம் முகமது – 62,
7) காசிம் பக்ஷ் – 63,
8) நபி பக்ஷ் பலூச் – 43
இவர்களிடம் எவ்வித ஆவணங்களோ அடையாள அட்டைகளோ இல்லை என போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஆணை அதிகாரிகள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கை பற்றி இந்திய கடற்படை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஆணையம் மற்றும் குஜராத் காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு ஆகியவை அளித்த தகவலின் அடிப்படையில் இந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த ஆண்டில் இதுவரை இந்திய கடற்படை மேற்கொண்ட இரண்டாவது மிகப்பெரிய வெற்றிகரமான போதை பொருள் தடுப்பு நடவடிக்கை இது எனவும் பதிவிட்டுள்ளது, இந்த நடவடிக்கையில் இந்திய கடற்படையின் சிறப்புப்படையான மார்க்கோஸ் வீரர்கள் களம் இறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
சாகர் மந்தன் – 4 என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் AIS – Automatic Identification System தானியங்கி அடையாள அமைப்பு அல்லது மின்னனு படகு அல்லது கப்பல் அடையாள அமைப்பு இல்லாமல் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த வெளிநாட்டு படகை இந்திய கடற்படை கலன்கள் இடைமறித்து சுற்றி வளைத்து மார்க்கோஸ் சிறப்பு படை வீரர்களை படகுகள் மூலமாக அனுப்பி படகை சோதனையிட்டு போதைப் பொருட்களை கைப்பற்றி படகை இயக்கிய 8 நபர்களையும் கைது செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ஆண்டு இதுவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆணையம் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவற்றுடன் கூட்டாக இணைந்து தொடர்ச்சியாக பல்வேறு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது அந்த வகையில் இதுவரை சுமார் 3,400 கிலோ வெவ்வேறு வகையான போதை பொருட்களை வெற்றிகரமாக பறிமுதல் செய்துள்ளது மேலும் இவை தொடர்பான மூன்று வழக்குகளில் ஈரான் நாட்டை சேர்ந்த 11 பேரும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 14 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், இவர்கள் தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி உள்ளது கூடுதல் தகவலாகும்.