மோசமான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளதாகவும் அது அணு ஆயுத போருக்கு வழிவகுக்கும் வடகொரியா அதிபர் !!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வடகொரிய தலைநகர் பியாங் யாங்கில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது அமெரிக்கா தனது பொறுப்பெற்ற மூர்க்கத்தனமான கொள்கைகள் மூலமாக பிற நாடுகளை சீண்டுவதாகவும் அதன் மூலம் பதட்டங்களை அதிகரிப்பதாகவும் இதன் காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அணு ஆயுத போருக்கான வாய்ப்புகளை அதிகரித்திருப்பதாகவும் பேசியுள்ளார்.

அதாவது வட கொரிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் KCNA Korean Central News Agency கொரிய மத்திய செய்தி முகமை என்ற ஊடக நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கொரிய தீபகற்பத்தில் இரு தரப்பு நாடுகளும் அதாவது வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளும் ஆபத்தான தீவிரமான அல்லது கவலைக்குரிய சூழலை சந்தித்ததில்லை எனவும் இதன் காரணமாக இத்தகைய சூழல் அணு ஆயுத போருக்கு வழிவகுக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடைய இந்தப் பேச்சு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் வடகொரியா தொடர்ந்து தனது அணு ஆயுத திறன்களை மேம்படுத்தியும் அதிகரித்தும் வருகிறது தற்போது நடைபெற்று வரும் வடகொரிய பாதுகாப்புக் கண்காட்சியில் வடகொரியா அமெரிக்கா வரை சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் காட்சிப்படுத்தியுள்ளது இதற்கிடையே வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொடர்ந்து வடகொரியா அதிநவீன ஆயுதங்களை தயாரிக்கும் எனவும் அதன் மூலம் மட்டுமே வடகொரியாவின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசும் போது கடந்த 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை அன்றைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தான் மேற்கொண்ட சந்திப்புகள் மற்றும் பேச்சு வார்த்தைகளை சுட்டிக்காட்டி அமெரிக்காவுடன் எந்த அளவிற்கு பேச்சுவார்த்தை நடத்த முடியுமோ அந்த அளவிற்கு வடகொரியா விவாதித்துள்ளது எனவும் ஆனால் அமெரிக்கா என்ற வல்லாதிக்க நாடு ஒன்று கூடி வாழ்வதற்கு மனம் இல்லாமல் அதிகாரத்தின் மூலமாகவும் பலத்தின் மூலமாகவும் தங்களை நோக்கி செயல்பட விரும்புவதாகவும் அதற்கு வடகொரியா ஒருபோதும் அடிபணியாது எனவும் கூறியுள்ளார்.

அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வடகொரிய அதிபருடன் நடத்திய பேச்சு வார்த்தையில் வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் எனவும் அதற்குப் பதிலாக வடகொரியா மீதான பொருளாதார தடைகளை தளர்த்துவதாகவும் உறுதியளித்து அதற்கு வடகொரிய அதிபர் உடன்படாத நிலையில் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையேயான அமைதி பேச்சு வார்த்தைகள் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கதாகும்.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மேலும் பேசும்போது ராணுவ பதட்டத்தை அமெரிக்கா தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தொடர்ந்து தனது நட்பு நாடுகளுடன் இணைந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பாக குண்டு வீச்சு போர் விமானங்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்கள் போன்ற ராணுவ தளவாடங்களை குவித்து வருவதாகவும் இதன் மூலம் கொரிய தீபகற்பம் தற்போது உலகின் மிக பதட்டம் நிறைந்த பகுதியாக மாறி உள்ளதாகவும் கொரிய தீபகற்பத்தில் வரலாற்றில் இத்தகைய மோசமான சூழல் ஏற்பட்டதற்கு அமெரிக்காவின் வல்லாதிக்க செயல்பாடுகளே காரணம் எனவும் கூறியுள்ளார்.

சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் இது பற்றி கூறும்போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்கா வடகொரியாவை ஒரு அணு ஆயுத சக்தி கொண்ட நாடாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் அதைத்தொடர்ந்து பொருளாதார தடைகளை தளர்த்த வேண்டும் என்ற முலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுத கொள்கை சார்ந்த நோக்கங்களை கொண்டுள்ளதாகவும் அதே நேரத்தில் வடகொரியாவின் அணு ஆயுத திட்டம் தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது எனவும் கூறுகின்றனர்.