இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனா தான்தோன்றித்தனமாக செயல்படுவதை தொடர்ந்தும் சீன ராணுவம் இந்தோ பசிபிக் பிராந்தியம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சீனாவின் ஆதிக்கத்தை நிலை நாட்ட முயன்று வருவதை தொடர்ந்தும் ஜப்பான் அரசு ஜப்பான் படைகளை ஆஸ்திரேலியாவில் நிலைநிறுத்த முடிவு செய்துள்ளது இந்த அறிவிப்பு சமீபத்தில் ஆஸ்திரேலியா ஜப்பானிய மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பிற்கு பிறகு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மால்ஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது அமெரிக்க மற்றும் ஜப்பானிய சகாக்களான லாய்ட் ஆஸ்டின் மற்றும் கென் நக்காத்தானி ஆகியோருடன் சந்திப்பு மேற்கொண்டு பேச்சு வார்த்தை நடத்திய பிறகு ஊடகவியலாளர்களை சந்தித்து விரைவில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஜப்பானிய படைகள் வடக்கு ஆஸ்திரேலியாவில் நிலைநிறுத்தப்படும் எனவும் அங்கு அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியா படைகளுடன் இணைந்து ஜப்பானிய படைகள் செயல்படும் எனவும் அறிவித்தார்.
ஏற்கனவே வடக்கு ஆஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு மாத காலத்திற்கு அமெரிக்க மரைன் கோர் படையை சேர்ந்த 2000 வீரர்கள் நிலை நிறுத்தப்படுவது வழக்கம் இவர்கள் அங்கு ஆஸ்திரேலியா படைகளுடன் கூட்டு பயிற்சிகள் மற்றும் பல்வேறு கூட்டு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் இனி இவர்களுடன் ஜப்பானிய படைகளும் இணைந்து செயல்பட தொடங்கும், ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் இது பற்றி பேசும்போது அமெரிக்கா மற்றும் ஜப்பான் படைகளுடன் இணைந்து செயல்பட கிடைத்த வாய்ப்பு ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் தரைப்படை சார்பில் இதற்காக ARDB – Amphibious Rapid Deployment Brigade அதாவது அதிவிரைவு நிலநீர் போர் முறை நகர்வு பிரிகேடு என்ற சுமார் 3000 நிலநீர் போர்முறையில் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்ட படைப்பிரிவு தேர்வு செய்யப்பட்டுள்ளது, இந்தப் படைப்பிரிவு அமெரிக்க மற்றும் ஜப்பானிய தயாரிப்பு ஆயுதங்களையும் தளவாடங்களையும் பயன்படுத்தி வருகிறது இந்தப் படைப் பிரிவில் மூன்று காலாட்படை ரெஜிமென்டுகள், ஒரு பீரங்கி படை பட்டாலியன், ஒரு பொறியியல் பட்டாலியன், ஒரு சிக்னல் பட்டாலியன், ஒரு சரக்கு போக்குவரத்து பட்டாலியன், ஒரு கள ஆய்வு பட்டாலியன் மற்றும் ஒரு பயிற்சி பிரிவு ஆகியவை அடங்கும்.
இந்த சிறப்பு நிலநீர் போர் முறை படைப்பிரிவை ஜப்பான் தனது பரந்து விரிந்த தீவுப் பகுதிகளை சீன வடகொரிய மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் இருந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக அவற்றை பாதுகாக்கும் நோக்கத்துடனும் ஒருவேளை ஏதேனும் ஒரு போர் அல்லது எதிரி ராணுவ நடவடிக்கையில் ஒரு தீவு சிக்கிக் கொண்டால் அதனை மீட்கும் நோக்கத்துடனும் இந்தப் படைப்பிரிவு ஜப்பான் ராணுவம் உருவாக்கியது தற்போது இந்த சிறப்பு படைப்பிரிவில் பல்வேறு புத்தம் புதிய ஆயுதங்களும் தளவாடங்களும் சேர்க்கப்பட்டு வருகின்றன மேலும் இதனை விரிவு செய்யும் நோக்கத்துடன் ஆன திட்டங்களும் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் சீனாவுக்கு எதிரான உறுதியான நடவடிக்கையாக இதனை பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர் இதனை உறுதி செய்யும் வகையில் சீனாவை குறிப்பிடாமல் மறைமுகமாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் இந்த அறிவிப்பு மூலம் எங்கள் மூன்று நாடுகளுக்கு இடையேயான கூட்டு நடவடிக்கைகள் வலுப்படும் எனவும் இந்தோ பசிபிக் பிராந்தியம் மற்றும் ஒட்டு மொத்த உலகத்திற்கும் எங்களது ஒன்றிணைந்த செயல்பாடுகள் பற்றிய உறுதியை இது வெளிப்படுத்துகிறது எனவும் இந்த கூட்டு செயல்பாடு மூலமாக எங்கள் மூன்று நாடுகளுக்கு இடையேயான கள ஆய்வு தகவல் சேகரிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகள் வலுப்படும் அது பாதுகாப்பான மற்றும் அமைதியான இந்தோ பசிபிக் பிராந்தியத்திற்கு வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.