சமீபத்தில் இந்திய விமானப்படை இந்திய கப்பற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படை ஆகியவை உபர் எனும் தனியார் போக்குவரத்து சேவை நிறுவனத்துடன் படையினரின் குடும்பத்தினர் நியாயமான கட்டணத்தில் போக்குவரத்து வசதியை பெறுவதற்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டன. ஆனால் இது நாடு முழுவதும் குறிப்பாக சைபர் பாதுகாப்பு நிபுணர்களால் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது மேலும் பல தரப்புகளிலிருந்து எதிர்ப்புக் குரல்களும் வலுவாக எழும்பின.
அதாவது படையினரின் குடும்பத்தினரின் விவரங்கள் ஹேக் செய்யப்படும் அல்லது திருடப்படும் அபாயங்கள் உள்ளதாகவும் இது பாதுகாப்பு படைகளையும் வீரர்களையும் கடுமையாக பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. பலர் இந்தியாவில் பொதுவாக தனிப்பட்ட விவரங்கள் சிறந்த முறையில் பாதுகாக்கப்படுவதில்லை எனவும் குறிப்பாக இதுபோன்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் இது முக்கியமாக பார்க்கப்பட வேண்டும் எனவும் விமர்சனம் முன் வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது இந்திய விமானப்படை இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படை ஆகியவை இந்தத் திட்டம் தொடர்பாக உபர் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.