கடந்த திங்கட்கிழமை அன்று இந்திய கடலோர காவல் படையின் கப்பல்கள் வங்கக் கடலில் அந்தமான் நிக்கோபார் தீவு பகுதிக்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான மீன் பிடி படகு ஒன்றில் இருந்து சுமார் 6000 கிலோ அளவுக்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருளான மெத்தாமி பட்டமைன் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது இந்திய கடலோர காவல் படையின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
இந்தப் போதை பொருட்கள் தலா 2 கிலோ பாக்கெட்டுகள் என மொத்தம் 3000 பாக்கெட்டுகளாக பிரித்து வைக்கப்பட்டிருந்தன, சர்வதேச சந்தையில் இவை ஒவ்வொரு பாக்கெட்டும் தலா 4 முதல் 6 கோடி ரூபாய் வரை மதிப்பு கொண்டவை என அதிகாரிகள் கூறுகின்றனர் ஆக பறிமுதல் செய்யப்பட்ட இந்த 6000 கிலோ மெத்தாம்ஃபெட்டமைன் போதைப்பொருளின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 12,000 கோடி முதல் 18 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள பாரன் தீவு அருகே இந்த மியான்மர் நாட்டை சேர்ந்த மீன்பிடிப்படகு பயணித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படை கலன் அந்த மீன்பிடி படகை வேகத்தை குறைத்து நிறுத்த கட்டளையிட்டபோது அந்த மீன் பிடிப்பது வேகத்தை அதிகரித்து பயணிக்கத் துவங்கியது இதனைத் தொடர்ந்து மேலிடத்திற்கு அந்த இந்திய கடலோர காவல் படை கலன் தகவல் அனுப்பவே உடனே அந்தப் பகுதியில் அருகில் இருந்த இந்திய கடலோர காவல் படையின் அதிவேக ரோந்து படகுகள் குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து அந்த மியான்மர் நாட்டை சேர்ந்த மீன்பிடி படகு இடை மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டது அப்போது தான் இந்த பிரம்மாண்ட அளவிலான போதைப் பொருட்களின் இருப்பு பற்றி தெரிய வந்தது உடனடியாக அந்த மீன்பிடி படகு அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேச தலைநகரம் ஸ்ரீ விஜயபுரத்திற்கு ( முன்னர் போர்ட் பிளேயர்) கொண்டு செல்லப்பட்டது மேலும் அந்தப் படகில் இருந்த 6 மியான்மர் நாட்டவர்களும் கைது செய்யப்பட்டனர் தொடர்ந்து அந்தமான் நிக்கோபார் காவல்துறையினருடன் இணைந்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 2019 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளிலும் இதே போன்ற போதைப் பொருட்களுடன் இந்தப் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டு படகுகள் இடைமறிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது, இது பற்றி இந்திய கடலோர காவல் படையின் மூத்த அதிகாரிகள் பேசும் போது பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இந்தியா மற்றும் இந்தியாவுக்கு அருகே உள்ள நாடுகளுக்கு விநியோகம் செய்வதற்காக கடத்தி வரப்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர்.
பொதுவாக இந்தியாவுக்கு மேற்கே Golden Crescent அதாவது தங்க பிறை என அழைக்கப்படும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அடங்கிய பகுதி ஆசியாவிலேயே அதிகமாக போதைப்பொருள் உற்பத்தி செய்யும் பகுதியாகும் குஜராத் முதல் கன்னியாகுமரி வரையிலான பகுதிகளில் பிடிக்கப்படும் போதைப்பொருட்கள் இந்தப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுபவை ஆகும், அதேபோல இந்தியாவுக்கு கிழக்கே Golden Triangle அதாவது தங்க முக்கோணம் என அழைக்கப்படும் பகுதி உள்ளது இதில் மியான்மர் தாய்லாந்து மற்றும் லாவோஸ் ஆகியவை உள்ளன. இந்த இரண்டு பகுதிகளும் உலகில் மிக அதிகமாக போதைப்பொருட்களை உற்பத்தி செய்யும் இடம் ஆகும் இங்கு உற்பத்தி செய்யப்படும் போதைப் பொருட்கள் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிற்கும் கடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இந்த நடவடிக்கை சுமார் இரண்டு நாட்களாக வான் மற்றும் கடல் வழி கண்காணிப்பு மூலமாக சாத்தியமானதாகவும் ஏற்கனவே இது பற்றி ரகசிய தகவல் கிடைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது மேலும் இந்த வரலாற்று சிறப்புமிக்க பறிமுதல் கடத்தல் கும்பல்களின் நூதன சிந்தனைகள் மற்றும் அதிகரித்து வரும் சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றிற்கு எதிராக இந்தியாவின் நடவடிக்கைகள், மற்றும் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய படைகள் காட்டும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிக்காட்டுவதாக கூறப்படுவது கூடுதல் சிறப்பாகும்.