இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்திய தரைப்படையின் கவச படை போர் முறை திறன்களை பல மடங்கு அதிகரிக்கும் விதமாக 1500 அடுத்த தலைமுறை டாங்கி எதிர்ப்பு ஏவுகருவிகள் வாங்குவதற்கான விருப்பம் அறிதல் கோரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்திய தரைப்படையின் தாக்குதல் திறன்களை பல மடங்கு அதிகரிக்கும் எண்ணத்தோடு இந்த திட்டத்தின் கீழ் சுமார் 20000 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த விருப்பம் அறிதல் கோரிக்கையில் இந்த அடுத்த தலைமுறை டாங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளை பயன்படுத்துவதற்கான பயிற்சிகளை வீரர்களுக்கு அளிப்பதற்கு தேவையான சிமுலேட்டர் அமைப்புகளும் கோரப்பட்டுள்ளது, இந்த சிமுலேட்டர் அமைப்புகளை பெறுவதன் மூலம் வீரர்களுக்கு கவச வாகன போர்முறையில் தேவையான பயிற்சிகளை அளித்து அவர்களின் திறன்களை மேம்படுத்தி நவீன காலப் போர்முறையில் பின் தங்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் படி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இத்தகைய ஆயுதங்கள் தான் வாங்கப்படும், வெளிநாட்டு அமைப்புகள் ஆனால் கூட இந்தியாவில் இந்திய நிறுவனங்களுடன் கூட்டு தயாரிப்பு முறையில் தயாரிக்கப்பட வேண்டும் என்பதும் அவற்றில் 60% பாகங்கள் இந்திய தயாரிப்பாக இருக்க வேண்டும் என்பதும் மிக முக்கியமான நிபந்தனையாக உள்ளது மேக் இன் இந்தியா திட்டத்தின் இலக்கை நோக்கமாக கொண்ட இந்த திட்டம் வெளிநாட்டு இறக்குமதியை குறைத்து உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க எண்ணுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த அடுத்த தலைமுறை டாங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள் சமவெளிகள், பாலைவனங்கள், அதிக உயரப் பிரதேசங்கள் அதாவது கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ ஆறு கிலோமீட்டர் உயரம் கொண்ட பகுதிகள், கடலோரப் பகுதிகள் மற்றும் தீவுப் பகுதிகள் ஆகிய பகுதிகளில் இயங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும் மேலும் இவற்றை இரவிலும் பகலிலும் மழை பனி தூசு ஈரப்பதம் மிகுந்த சூழல்களிலும் மிகக் கடினமான கால நிலைகளிலும், மைனஸ் 45 முதல் பிளஸ் 45 வரையிலான தட்பவெப்ப சூழல்களிலும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பதும் நிபந்தனை ஆகும் இதன் மூலம் இந்தியாவின் பல தரப்பட்ட நிலப்பரப்புகளிலும் இவற்றை பயன்படுத்துவதை இந்திய தரைப்படை உறுதி செய்ய விரும்புவது தெரிய வருகிறது.
இந்த அடுத்த தலைமுறை டாங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள் எதிரி படைகளின் டாங்கிகள், கவச வாகனங்கள், கவச சண்டை வாகனங்கள், தாழ்வாக பறக்கும் ஹெலிகாப்டர்கள், கான்கிரீட் கட்டுமானங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆயுத அமைப்புகள் ஆகியவற்றை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது இத்தகைய டாங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள் மூலமாக போர்க்களத்தில் உள்ள பல தரப்பட்ட அல்லது பல வகையான இலக்குகளை வீரர்களால் சுலபமாக அழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதேபோல இந்த டாங்கி எதிர்ப்பு ஏவுகணை ஏவும் அமைப்புகள் வருங்காலத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் செய்யாமலேயே அவற்றை மேம்படுத்துவதற்கு ஏதுவாகவும் நவீனப்படுத்துவதற்கு ஏதுவாகவும் அதாவது புதிய தொழில்நுட்ப அமைப்புகள், ஏவுகணைகள், குறி வைக்கும் அமைப்புகள், சென்சார் அமைப்புகள் ஆகியவற்றை மிக எளிதாக இணைக்கும் விதமாக இருக்க வேண்டும் குறிப்பாக இந்த ஏவுகணை ஏவும் அமைப்பின் செயல்திறனோ அல்லது அதில் உள்ள துணை அமைப்புகளில் செயல் திறனோ பாதிக்கப்படாத வகையில் மிக எளிதாக நவீனப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பது கூடுதல் தகவலாகும்.