பாதுகாப்பு துறையில் தற்சார்பு கொள்கைக்கு ஊக்கமளிக்கும் விதமாக இந்திய தரைப்படை தனது வடக்கு பிராந்திய கட்டளையகத்தில் வீரர்களின் பயன்பாட்டிற்காக உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட 550 ASMI இயந்திர பிஸ்டல்களை படையில் இணைத்துள்ளது.
இந்த ஆயுதத்தை இந்திய தரைப்படை அதிகாரியான கர்னல் பிரசாத் பான்ஸோத் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து வடிவமைத்து தயாரித்ததார், தொடர்ந்து தற்போது தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் நகரத்தில் அமைந்துள்ள லோகேஷ் மெஷின் என்ற தனியார் பாதுகாப்புத்துறை நிறுவனத்துடன் இணைந்து இவை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆயுதம் குறுகிய இடங்களில் பயன்படுத்துவதற்கு ஏதுவான வகையில் கையடக்கமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் அத்தகைய குறுகிய இடங்களில் எதிரிகள் மீது வலுவான தொடர் தாக்குதலை நடத்துவதற்கும் இது உதவுகிறது இதனை ஒற்றை கையிலேயே பிஸ்டல் போலவும் இயந்திர துப்பாக்கி போலவும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளனர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள உலோகம் மிகவும் எடை குறைவானதாகும்.
இந்திய தரப்பின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் இந்த ASMI இயந்திர பிஸ்டல் துப்பாக்கி முழுக்க முழுக்க அதாவது 100% உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது எனவும் பாதுகாப்பு தயாரிப்பில் இந்தியா தன்னிறைவு அடைவதற்கு ஊக்கமளிக்கும் விதமாக பாதுகாப்பு தற்சார்பு கொள்கையில் இந்திய தரைப்படையின் உறுதியை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஆயுதம் படையில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்