வஜ்ரா பிரகார் 2024 இந்திய அமெரிக்க தரைப்படை சிறப்பு படை வீரர்களின் கூட்டுப் பயிற்சி 15 ஆவது ஆண்டாக இந்த வருடம் அமெரிக்காவின் ஐடாகோ மாகாணத்தில் அமைந்துள்ள ஆர்சார்ட் பயிற்சி மையத்தில் கடந்த நவம்பர் இரண்டாம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகின்றன இது வருகிற நவம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த பயிற்சிகளின் நோக்கம் இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது, கூட்டு செயல்பாடுகளை அதிகரிப்பது போன்றவை ராணுவ அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தாண்டு வஜ்ரா பிரகார் பயிற்சியின் போது இந்தியா சார்பில் முதலாவது பாரா சிறப்பு படை வீரர்களும் அமெரிக்க தரைப்படை சார்பில் முதலாவது சிறப்பு படை குழு வீரர்களும் கலந்து கொள்கின்றனர் இவர்கள் கூட்டாக வான் மற்றும் நீர் வழியாக எதிரி பகுதிகளில் ஊடுருவுவது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது, ட்ரோன் போர் முறை பயிற்சிகள் மேற்கொள்வது, சிறப்பு படை மனோவியல் போர் முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவது, போர் விமானங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு தாக்குதல் நடத்த வழி நடத்துவது, தொலைதூரங்களில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்குவது, வான் வழியாக எதிரி எல்லைகளுக்குள் இருக்கும் படையினருக்கு சப்ளைகளை பெறுவது போன்றவை நடைபெற உள்ளன.
இந்த வஜ்ரா பிரகார் கூட்டு பயிற்சிகள் முதல்முறையாக கடந்த 2010 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது அந்த ஆண்டு இந்தியாவில் அந்த பயிற்சிகள் நடைபெற்ற நிலையில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டிலும் வருடாந்திர அளவில் நடைபெற்று வந்தன கடந்த 2022ஆம் ஆண்டு இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தின் பாக்லோ பகுதியில் அமைந்துள்ள சிறப்பு படை பயிற்சி பள்ளியில் நடைபெற்றது மேலும் கடந்த ஆண்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் உம்ரோய் பகுதியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும், இந்த ஆண்டு நடைபெறும் பயிற்சியில் இருதரப்பிலிருந்தும் தல 45 வீரர்கள் வீதம் பங்கேற்க உள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்.
இந்தியா அமெரிக்கா இடையே டைகர் ட்ரயம்ப் என்ற முப்படை கூட்டு பயிற்சி, யூத் அபியாஸ் தரைப்படை கூட்டு பயிற்சி மற்றும் வஜ்ரா பிரகார் சிறப்பு படை கூட்டு பயிற்சிகள் ஆகியவையும் இது தவிர மலபார் ரெட் பிளாக் மற்றும் ரிம் பேக் ஆகிய பன்னாட்டு விமானப்படை மற்றும் கடற்படை பயிற்சிகளும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது