பிரபல அமெரிக்க ஊடக நிறுவனமான ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தியின் படி இந்தியாவுக்கு போர் விமான ஜெட் என்ஜின்களை டெலிவரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த அமெரிக்க நிறுவனத்திற்கு இந்திய அரசு அபராதம் விதிக்க உள்ளதாக தெரிய வருகிறது. அதாவது General Electrics நிறுவனம் இந்தியாவின் இலகுரக தேஜாஸ் LCA TEJAS MK1 ரக போர் விமானங்களுக்கு தேவையான GE F-404 என்ஜின்களை டெலிவரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் இவற்றின் டெலிவரி மிக மிக காலதாமதம் ஆகி உள்ளது. அதாவது வருகிற 2025 ஆம் ஆண்டு தான் இவற்றின் டெலிவரி துவங்கும் சூழல் நிலவுகிறது.
மேல் குறிப்பிடப்பட்ட இலகுரக தேஜாஸ் மார்க் 1a விமானங்களை தயாரிக்கும் இந்தியாவின் பிரதான மற்றும் முன்னணி வானூர்தி தயாரிப்பு நிறுவனமான HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்த F-404 இன்ஜின்களை அதாவது 99 என்ஜின்களை டெலிவரி செய்வதற்கான 716 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் கடந்த 2021 ஆம் ஆண்டு கையெழுத்தானது. தொடர்ந்து இந்த இன்ஜின்களின் டெலிவரி கடந்த 2023 ஆம் ஆண்டிலேயே துவங்கியிருக்க வேண்டியதாகும். ஆனால் தற்போது இதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் இரண்டு முன்னணி போருக்கு தயாராகி வரும் இந்தியாவின் திட்டத்திற்கு மிக முக்கியமான அம்சமாக இருக்கும் உள்நாட்டு போர் விமான தயாரிப்பு செயல்பாடுகளுக்கு மிகப்பெரிய தடையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த சிக்கலான சூழல் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பாதுகாப்பு உறவுகள் வலுவடைந்து வரும் சூழலில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் செய்தியின் படி கடந்தாண்டு மேல் குறிப்பிட்ட ஜெனரல் எலக்ட்ரிக்ஸ் நிறுவனம் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இந்தியாவின் அடுத்த தலைமுறை இலகு ரக போர் விமானத்திற்கு தேவையான அதிநவீன எஞ்சின் ஒன்றை கூட்டாக தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டதும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இது பற்றி ஜெனரல் எலக்ட்ரிக் ஏரோஸ்பேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில் இதுவரை தாங்கள் சந்திக்காத அளவிற்கு சப்ளை செயின் பிரச்சனைகளை தடைகளை அழுத்தங்களை சந்தித்து வருவதாகவும், தங்களது 15 சப்ளை நிறுவனங்கள் சிக்கலில் உள்ளதாகவும் இதை சரி செய்வதற்கு தேவையான முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உலக அளவில் தற்போது போர் விமான என்ஜின்களின் டெலிவரியை காலதாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஒருபுறம் இந்திய விமானப்படையின் பலம் குறைந்து வரும் நிலையில் குறிப்பாக ரஷ்ய தயாரிப்பு பழைய விமானங்களை இந்திய விமானப்படை விலக்கம் செய்து வரும் நிலையில் இந்த காலதாமதம் புதிய போர் விமானங்களை இணைப்பதை பாதித்து வருகிறது. மற்றொருபுறம் இந்தியாவின் இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்கும் திட்டத்தையும் பாதித்து வருகிறது. தற்போது அமெரிக்கா பிரான்ஸ் மற்றும் அர்மேனியா ஆகிய நாடுகள் இந்தியாவின் பிரதான ஆயுத இறக்குமதி நாடுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.