இந்திய ராணுவத்தின் பிரதான அங்கமான இந்திய தரைப்படை தனது கண்காணிப்பு திறன்களை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு அதி நவீன உயர்ரக MALE – Medium Altitude Long Endurance நடுத்தர உயரத்தில் நீண்ட நேரம் பறக்க கூடிய UAV – Unmanned Aerial Vehicle ஆளில்லா வானூர்திகளை படையில் இணைக்க விரும்பியது. இதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் ஒரு அங்கமான Adani Defence & Aerospace அதானி பாதுகாப்பு மற்றும் வான்வெளி நிறுவனம் இதற்கு தனது தயாரிப்பை அளிக்க முன் வந்தது.
அதாவது இஸ்ரேல் நாட்டின் IAI – Israeli Aerospace Industries இஸ்ரேலிய வான்வெளி தொழிற்சாலை நிறுவனம் தயாரிக்கும் Hermes 900 ரக ஆளில்லா வானூர்தியின் தொழில்நுட்பத்தை மேல் குறிப்பிட்ட அதானி பாதுகாப்பு மற்றும் வான்வெளி நிறுவனம் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்த அடிப்படையில் பெற்று இந்தியாவில் சிறு மாற்றங்களுடன் தயாரித்து வருகிறது. அப்படி தயாரிக்கப்பட்ட இந்த ஆளில்லா கண்காணிப்பு வானூர்திகளுக்கு DRISHTI 10 திருஷ்டி 10 என பெயரும் சூட்டியுள்ளது. இத்தகைய ஒரு சில ஆளில்லா வானூர்திகளை இந்திய தரைப்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவை தங்களது கண்காணிப்பு திறன்களை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ் வாங்கி பயன்படுத்தி வந்தன.
இவற்றை இப்படி அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ் உடனடி தேவைகளை சந்திப்பதற்கு ஏதுவாக வாங்கினாலும் இதற்குப் பின்னால் மற்றொரு முக்கிய நோக்கமும் இருந்தது. அதாவது இத்தகைய ஆளில்லா கண்காணிப்பு வானூர்திகளின் திறன்களை பயன்பாடு மூலம் அறிந்து கொள்வதாகும். அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் கொள்முதல் செய்வதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்திய தரை படை லடாக் போன்ற அதிக உயர பிரதேசங்களில் இத்தகைய ஆளில்லா வானூர்திகளை பயன்படுத்திய போது அவற்றின் திறன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதை அறிந்து கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல் அருணாச்சல பிரதேசம் வரையிலான மிக உயர்ந்த இமயமலை பிரதேசங்களில் இந்திய தரைப்படை இயங்குவதால் அந்தப் பகுதிகளில் சிறப்பான கண்காணிப்பு திறன்கள் அவசியமாகிறது. ஆனால் இந்த வகை ஆளில்லா வானூர்திகளால் இந்திய தரைப்படையின் இந்த தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் இந்திய கடற்படை வாங்கிய இந்த வகை ஆளில்லா வானூர்திகள் கடற்படைக்கு திருப்தியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. காரணம் கடற்படை தேவைகள் மற்றும் கடற்படை நடவடிக்கைகளை பொறுத்தவரையில் அதிக உயரத்தில் பறக்க வேண்டிய கட்டாயங்கள் எதுவும் இல்லை. காரணம் இந்த வகை ஆளில்லா வானூர்திகள் கடற்படைக்காக இயக்கப்படும்போது அவை கடலின் மேற்பரப்பில் தான் இயங்க வேண்டியதாகிறது. ஆகவே அங்கு உயரம் ஒரு பிரச்சனை அல்ல ஆகவே வருங்காலத்தில் இத்தகைய திருஷ்டி 10 ஆளில்லா கண்காணிப்பு வானூர்திகளுக்கு இந்திய கடற்படை தரப்பில் இருந்து சில ஆர்டர்கள் கிடைக்கலாம் எனக் கூறப்படும். அதே வேளையில் இது அடுத்து வரவுள்ள டென்டரில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
அதாவது இந்திய கடற்படை இந்திய தரைப்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவை இணைந்து 76 நடுத்தர உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் ஆளில்லா வானூர்திகளை வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்திய தரைப்படைக்கு 60 வானூர்திகளும், இந்திய விமானப்படைக்கு 12 வானூர்திகளும் இந்திய கடற்படைக்கு நான்கு வானூர்திகளும் வாங்கப்பட உள்ளன. இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு உலக நாடுகளும் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தில் மிக முக்கியமான நிபந்தனை ஒன்றை முன் வைத்துள்ளது. அதாவது இந்திய தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே வெளிநாட்டு நிறுவனங்கள் ஆனாலும் சரி அவை இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் தயாரிப்பு பணிகளை மேற்கொள்வது தவிர்க்க முடியாத நிபந்தனை ஆகிறது.
இதன் மூலம் இந்திய அரசு இந்திய பாதுகாப்பு தொழில்துறை நிறுவனங்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்க நினைக்கிறது. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் பட்சத்தில் இந்தியாவின் கண்காணிப்பு, உளவு, எதிரி இலக்குகளை அடையாளம் கண்டுபிடிப்பது, எதிரி படைகளின் நடமாட்டத்தை அறிந்து கொள்வது போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு பேரூதவியாக அமையும் மற்றும் எதிர்காலத்தில் இந்தியாவின் ஆளில்லா வானூர்தி திறன்களை பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை