என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம் நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என கூறிய விகாஷ் யாதவ், பாதுகாக்கும் இந்திய அரசு ??

கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டில் இந்திய அரசில் பணியாற்றும் அதிகாரியான விகாஷ் யாதவ் சட்டவிரோதமாக நிகில் குப்தா என்பவருடன் இணைந்து அமெரிக்காவில் வசித்து வரும் குர்ப்ந்த்வந்த் சிங் பன்னூன் எனும் காலிஸ்தான் ஆதரவாளன் மற்றும் பயங்கரவாதியை கொலை செய்ய முயற்சி செய்ததாக தெரிவித்திருந்தது, இந்த நிலையில் அவர் தனது குடும்பத்தினரிடம் பேசியது தொடர்பான தகவல்கள் சில தற்போது வெளியாகி உள்ளது.

இப்படி அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டு அக்டோபர் 17ஆம் தேதி வெளியான 24 மணி நேரத்தில் அதாவது அக்டோபர் 18ஆம் தேதி விகாஷ் யாதவ் தனது குடும்பத்தினரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதாகவும் அப்போது தன்னைப் பற்றிய செய்திகளை பார்த்தீர்களா என கேட்டதாகவும் ஆம் நாங்கள் பார்த்தோம் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என சொன்ன போது விகாஷ் யாதவ் தன்னை பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும் தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியதாகவும் விகாஷ் யாதவ் தற்போது டெல்லியில் உள்ள திஹார் சிறையில் இருப்பதாக நம்புவதாகவும் கூறுகின்றனர்.

மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்க அரசு விகாஷ் யாதவ் மீது விசாரணையை துவங்கிய மூன்று வார காலகட்டத்திற்குள்ளாகவே தலைநகர் டில்லியில் டெல்லி காவல்துறையினரால் விகாஷ் யாதவ் ஒரு கடத்தல் மற்றும் பணம் பறிப்பு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்ததும், கடந்த மே மாதம் தனது மகளின் சிகிச்சையை தொடர்ந்து பார்க்க பிணையில் வந்ததும் குறிப்பிடத்தக்கது ஆகவே இந்த விவகாரத்தில் விகாஷ் யாதவை பாதுகாக்க அவர் இந்தியாவில் ஏதோ குற்றம் செய்தவர் போலவும் அதை தொடர்ந்து அவரை கைது செய்து வைத்துள்ளது போலவும் மத்திய அரசு பணியில் இல்லாதது போலவும் இந்திய அரசு காண்பித்து அவரை பாதுகாக்கிறதா என்ற கேள்வியும் சந்தேகமும் எழுந்துள்ளது, அவரது சகோதரர் அஜய் யாதவும் இதே கருத்தை முன்வைக்கிறார், அமெரிக்க அரசு நாடு கடத்தல் கோரிக்கையை முன்வைத்தால் இந்த வழக்கை காரணம் காட்டி இந்திய அரசு மறுப்பு தெரிவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விகாஷ் யாதவ் ரா உளவு அமைப்பில் பணியாற்றியதாக கூறப்படுவது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் விகாஷ் யாதவ் மத்திய ரிசர்வ் காவல்படையில் பணியாற்றி வருவதாக தான் நாங்கள் கருதியிருந்தோம் எனவும், விகாஷ் யாதவும் இந்த விவகாரங்கள் பற்றி தங்களிடம் ஒன்றும் தெரிவிக்கவில்லை எனவும் செய்திகளை பார்த்து தான் பல விவரங்களை தெரிந்து கொண்டதாகவும் கூறுகின்றனர்.

விகாஷ் யாதவ் கடைசியாக தலைநகர் தில்லியில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது அவரது முகவரியாக தலைநகர் தில்லியில் உள்ள ஆண்ட்ரூஸ் கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசு பணியாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு தான் கொடுக்கப்பட்டுள்ளது, அங்கு தான் அவர் தனது மனைவியுடன் வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விகாஷின் மனைவி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஏக்தா எனும் விமான பணிப்பெண் ஆவார், நண்பர்கள் மூலம் சந்தித்து கொண்ட இருவரும் சாதி கடந்து காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

விகாஷ் யாதவ் நன்கு படிக்கக்கூடியவர் எனவும் உடற்பயிற்சியில் தீவிர ஆர்வம் கொண்டவர் எனவும், அறிவியலில் இளங்கலை பட்ட படிப்பு முடித்தவர் எனவும், இந்திய ராணுவத்தில் அதிகாரி ஆவதற்கான NDA National Defence Academy தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு எழுதியவர் எனவும், பின்னர் துணை ராணுவப்படை அதிகாரி தேர்வெழுதி வெற்றி பெற்று கடந்த 2009ஆம் ஆண்டு தனது 22 வயதிலேயே தேச பாதுகாப்பு பணியில் இணைந்ததாகவும் அவரது உறவினர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.