நேபாள நாட்டின் மத்திய வங்கியான NRB – Nepal Rastra Bank நேபாள தேசிய வங்கி தனது நாட்டிற்கான 100 ரூபாய் நோட்டுக்களை அச்சு அடிப்பதற்கான ஒப்பந்தத்தை சீன நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது, இதில் இந்தியாவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ள சர்ச்சைக்குரிய விஷயம் என்னவென்றால் நேபாளம் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் எல்லையோரம் இந்திய நாட்டிற்கு உட்பட்ட மூன்று பகுதிகளை நேபாள நாட்டின் பகுதிகளாக காண்பித்து வரைபடத்தை மாற்றி அந்த நோட்டுகளில் அச்சடிக்க உள்ளனர் என்பதாகும்.
அதாவது மேலே குறிப்பிடப்பட்ட வகையில் லிபுலெக் லிம்பியதுரா மற்றும் கலாபானி ஆகிய மூன்று இந்திய பகுதிகளை நேபாள நாட்டின் பகுதிகளாக காண்பித்து வரைபடத்தை மாற்றி சுமார் 30 கோடி 100 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கான ஒப்பந்தத்தை CBPMC – China Banknote Printing and Minting Corporation சீனா பண நோட்டு அச்சடிப்பு மற்றும் நாணய தயாரிப்பு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு இந்த ஆண்டு மே மாதம் நேபாள அமைச்சரவை ஒப்புதல் அளித்த போது அந்த நோட்டுகளில் அச்சடிக்க வேண்டிய வரைபடத்திற்கும் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
(IFB No. NRB/CMD/ICB/G-03/080/81) என்ற எண் கொண்ட நேபாள தேசிய வங்கியால் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் படி சுமார் 30 கோடி 100 ரூபாய் நோட்டுக்களை வடிவமைத்து அச்சடித்து சப்ளை மற்றும் டெலிவரி செய்வதற்கும் மேலும் இது தொடர்பான இதர சேவைகளை வழங்குவதற்குமான ஒப்பந்தத்தை ஏறத்தாழ 9 மில்லியன் (8,996,592.00) அமெரிக்க டாலர்கள் செலவில் அச்சடிப்பதற்கான ஒப்பந்தத்தை மேலே குறிப்பிடப்பட்ட சீன பண நோட்டு அச்சடிப்பு மற்றும் நாணய தயாரிப்பு நிறுவனம் மிகக் குறைந்த டெண்டர் கோரிய அதன் அடிப்படையில் வழங்கி உள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது, இந்திய மதிப்பில் இந்த நோட்டுக்களை அச்சடிப்பதற்கான தொகை சுமார் 120 கோடியாகும் அதாவது ஒரு நோட்டிற்க்கு நான்கு ரூபாய் நான்கு பைசா செலவாகும்.
ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி நேபாள அரசு மேலே குறிப்பிடப்பட்ட லிபுலெக், லிம்பியதுரா மற்றும் கலாபானி உள்ளிட்ட இந்திய பகுதிகளை அரசியல் சாசன திருத்தம் மூலமாக புதிய வரைபடம் வெளியிட்டு நேபாளத்துடன் இணைத்து அறிவித்தது இந்த மூன்று பகுதிகளும் கடந்த 60 ஆண்டு காலமாக இந்திய கட்டுப்பாட்டில் உள்ளது இங்கு வாழும் மக்களும் இந்திய குடிமக்களாக உள்ளனர் இவர்கள் இந்திய அரசுக்கு வரி கட்டி இந்திய தேர்தல்களிலும் வாக்களித்து வருகின்றனர் இந்த மூன்று பகுதிகளும் திபத்தின் மேற்கு பகுதியில் உள்ள ங்காரி பகுதியுடனும் எல்லையை பகிர்ந்துள்ளன, அப்போதே இந்தப் பிரச்சினை இந்தியா மற்றும் நேபாள அரசுக்கு இடையில் மிகப்பெரிய விரிசலையும் மோதலையும் ஏற்படுத்தி இருந்தது.
நேபாளம் இந்தியாவுடன் சுமார் 1850 கிலோமீட்டர் நீளம் எல்லையை சிக்கிம் மேற்குவங்கம் பிஹார் உத்தரப்பிரதேசம் உத்தராகண்ட் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்கிறது இதில் இந்த மூன்று பகுதிகளும் சுமார் 370 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டவையாக அமைந்துள்ளன, குறிப்பாக கலாபானி தெற்காசியாவின் புவிசார் அரசியல் மற்றும் ராஜதந்திர நகர்வுகளில் மிக மிக முக்கியமான இடத்தை பிடிக்கிறது காரணம் இது சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள திபெத் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் சங்கமிக்கும் இடமாக உள்ளது மேலும் லிபுலெக் கணவாய் உத்தரகாண்ட் மாநிலத்தை ஆக்கிரமிப்பு திபெத்துடன் இணைக்கிறது அதேபோல லிம்பியதுரா கணவாய் கலாபானிக்கு அருகே இந்தியா மற்றும் ஆக்கிரமிப்பு திபெத்தின் ங்காரி பகுதிகள் சந்திக்கும் இடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேல் குறிப்பிட்ட கலாபானி லிம்பியதுரா மற்றும் லிபுலெக் ஆகிய மூன்று பகுதிகளும் உத்தரகாண்ட் மாநிலத்தின் குமாவோன் டிவிஷன் கீழ் வரும் பித்தோராகர் மாவட்டத்தில் இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ளவையாகும் நேபாள தேசிய வங்கியின் விதிகளின்படி ஒவ்வொரு நோட்டுகளின் வடிவமைப்பு அந்த வங்கியின் பொறுப்பாகும் இதில் ஏதேனும் மாறுதல் (வடிவமைப்பு மற்றும் அளவு) செய்ய வேண்டுமானால் அதற்கு நேபாள அரசின் அனுமதியை பெற வேண்டியது அவசியமாகும், தற்போது சீன நிறுவனத்திற்கு நேபாள அரசு இந்திய பகுதிகளை இணைத்து வெளியிட்ட வரைபடத்தை புதிய நேபாள 100 ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்கும் பொறுப்பை வழங்கியுள்ளது இது இந்திய அரசிற்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதற்கு என்ன பதிலடி கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்