நேபாளத்தில் இருந்து இந்தியா வரவிருந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !!

கடந்த திங்கட்கிழமை அன்று நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து இந்திய தலைநகர் டெல்லிக்கு புறப்பட விருந்த இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு சொந்தமான AI216 விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நேபாள காவல்துறைக்கும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கும் தகவல் ஒன்று அளிக்கப்பட்டது, இதைத்தொடர்ந்து விமானத்தில் பல மணி நேரம் சோதனை நடைபெற்றதாகவும் ஆனால் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இது ஒரு வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் நேபாள காவல்துறை தலைவர் பகதூர் தெரிவித்துள்ளார்.

அதாவது நேபாள தலைநகர் காத்மாண்டு வில் அமைந்துள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து நேபாள நேரப்படி பிற்பகல் 2:46 மணி அளவில் விமானம் தரையிறக்கப்பட்டு இத்தகைய சூழல்களில் மேற்கொள்ளப்படும் அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் எந்தவித வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கபடாத நிலையில் விமானம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு மீண்டும் இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றதாக நேபாள காவல்துறையின் பள்ளத்தாக்கு பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குனர் கிரண் பஜ்ராச்சாரியா இந்திய ஊடகங்களுக்கு தொலைபேசி மூலமாக தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த ஒரு மாத காலமாக இந்திய விமான நிறுவனங்களால் வெளிநாடுகளுக்கும் உள்நாட்டுகுள்ளும் இயக்கப்பட்ட பல்வேறு விமானங்களுக்கு அதாவது இண்டிகோ ஏர் இந்தியா அகாசா ஏர் ஸ்பைஸ் ஜெட் விஸ்தாரா மற்றும் ஏர் நியூசிலாந்து போன்ற ஒரு சில வெளிநாட்டு விமானம் நிறுவனங்களின் சுமார் 400க்கும் அதிகமான விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பதாக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகர சிறப்பு காவல்துறை பிரிவினர் இந்த வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பின்னணியில் ஜெகதீஷ் என்பவர் இருப்பதாகவும்

அவரது மின்னஞ்சல் முகவரியை வைத்து இந்த வெடிகுண்டு மிரட்டல்களை அவர் அனுப்பியதை உறுதி செய்ததாகவும், அந்த நேரத்தில் தலைமறைவாக இருந்ததை தொடர்ந்து தனிப் படைகள் அமைத்து தேடி வருவதாகவும் தெரிவித்திருந்தனர் இந்த நிலையில் அவன் கடந்த வியாழக்கிழமை அன்று காவல்துறையினரிடம் சரணடைந்தான், ஆனாலும் அதற்கு பிறகு தற்போது மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் அதுவும் வெளிநாட்டு மண்ணில் ஒரு இந்திய விமான நிறுவனத்தின் விமானத்திற்கு விடுக்கப்பட்டுள்ளதும் இதில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்