போருக்கு தயாராகும் படி மக்களை அறிவுறுத்தும் ஸ்வீடன் ஃபின்லாந்து டென்மார்க் மற்றும் நார்வே !!

ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு உக்ரைனையும் தாண்டி ரஷ்யா உடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் பிற ஐரோப்பிய நாடுகளையும் பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது, குறிப்பாக நார்டிக் மற்றும் பால்டிக் கடல் பிரதேச நாடுகளான ஸ்வீடன், ஃபின்லாந்து டென்மார்க் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் தற்போது ரஷ்யா தங்கள் நாடுகள் மீதும் படையெடுக்கும் வாய்ப்புகள் இருப்பதாக கருதி தங்களது நாட்டு மக்களை போருக்கு தயாராகும்படி அறிவிக்கைகளை வெளியிட்டு உள்ளன. இந்த அறிக்கைகளில் பொதுமக்கள் எந்த வகை பொருட்களை சேமித்து வைக்க வேண்டும் எனவும் ஒரு போருக்கு ஏற்ற பக்குவமடைந்த மன தைரியத்துடன் இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.

ஸ்வீடன் நாட்டைப் பொறுத்தவரையில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பிறகு அதுவரை இருந்து வந்த அணிசேரா கொள்கையை அந்நாட்டின் அரசு கைவிட்டு நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைந்தது. மேலும் தற்போது ஒருவேளை போர் மூண்டால் என்ற தலைப்பில் அறிவிக்கைகளை தனது நாட்டு மக்களுக்கு அதாவது அனைத்து வீடுகளுக்கும் தலா ஒரு அறிவிக்கை வீதம் அந்நாட்டின் உள்நாட்டு பிரச்சனை முகமை அனுப்பி வைத்துள்ளது. இதில் போர் இயற்கை பேரிடர் மற்றும் சைபர் தாக்குதல்கள் போன்ற சூழல்களை எப்படி கையாள்வது என்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்த அறிக்கை போர் ஏற்பட்டால் எப்படி அதை எதிர்கொள்வது என்பதை உள்ளிட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் அரசின் இந்த 32 பக்க அறிவிக்கையில் இத்தகைய அவசரகால சூழல்களின் போது அழுகாத உணவுப் பொருள்கள், தண்ணீர் மற்றும் மருந்துகளை சேமிக்க வேண்டும் எனவும் அதிகரித்து வரும் ராணுவ அபாயங்கள் பயங்கரவாதம் மற்றும் சைபர் தாக்குதல்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிக்கையில் இதற்கு முந்தைய பதிப்புகளை விடவும் மிகக் கூடுதலாக போர் தயார் நிலை பற்றி அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. பனிப்போர் காலகட்டத்திற்கு பிறகு ஸ்வீடன் அரசு தனது நாட்டு மக்களுக்கு முதல்முறையாக கடந்த 2018 ஆம் ஆண்டு இத்தகைய அறிவிக்கையை வழங்கியதும் தற்போது அதற்குப் பிறகு இந்த அறிவிக்கையை புதுப்பித்து வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பின்லாந்தை பொறுத்தவரையில் ஸ்வீடன் அரசை போல் இன்றி இந்த அறிவிக்கைகளை டிஜிட்டல் முறையில் அதாவது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவுடன் மிக நீண்ட நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் பின்லாந்து தயார்நிலை தொடர்பான இணையதளம் ஒன்றை உருவாக்கி அதில் இந்த அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது. இதில் போர் உள்ளிட்ட பல்வேறு அசாத்திய சூழல்களில் பொதுமக்கள் எப்படி அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி தகவல்கள் அடங்கியுள்ளன. இந்த டிஜிட்டல் அறிவிக்கையில் போர் ஏற்படும் பட்சத்தில் பின்லாந்து அரசு அதை எப்படி எதிர்கொள்ளும் என்பது பற்றியும் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு திறன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த அறிவிக்கையை பல மொழிகளில் வெளியிட்டுள்ளதும் கூடுதல் தகவலாகும்.

நார்வே அரசும் இத்தகைய எச்சரிக்கையையும் தயார் நிலை தொடர்பான அறிவிக்கையையும் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான முன்னெச்சரிக்கை அறிவிக்கை பிரதிகளை நார்வே நாட்டில் உள்ள வீடுகளுக்கு நார்வே அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்த அறிவிக்கையில் போர் மற்றும் இதர அசாத்திய சூழல்களில் பொதுமக்கள் நீண்ட நாட்கள் நீடிக்கும் உணவுப்பொருட்கள் மருந்துகள் குறிப்பாக அணு ஆயுத போர் மூளும் பட்சத்தில் அதற்கு தேவையான அயோடின் மாத்திரைகள் ஆகியவற்றை சேகரித்து வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

டென்மார்க்கை பொறுத்தவரையில் அவசரகால மேலாண்மை முகமை அசாதாரண சூழல்களின் போது பொதுமக்கள் மருந்துகள் மற்றும் உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ளவும் சந்திக்கவும் தயார் ஆகுவதை உறுதி செய்து வருகிறது. குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர், இதர தேவைகளுக்கான நீர் மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் குறிப்பாக அழுகாத உணவுப் பொருட்கள் போன்றவற்றை சேகரித்து வைக்கவும் அது தவிர மிக முக்கியமாக அவசர முதலுதவி பெட்டி ஒன்றை ஒவ்வொரு வீடுகளிலும் வைத்திருக்க வேண்டும் எனவும் சுகாதாரப் பொருட்கள் போர்வைகள் தீப்பெட்டிகள் மெழுகுவர்த்திகள் டார்ச்லைட்டுகள் மற்றும் பேட்டரிகள் ஆகியவற்றையும் சேகரித்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.