போலந்து நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ரெட்ஸிக்கோவோ பகுதியில் கடந்த நவம்பர் 13ஆம் தேதி திறக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் அதிநவீன நிலம் சார்ந்த AEGIS தொழில்நுட்பம் கொண்ட பலிஸ்டிக் ஏவுகணை கண்காணிப்பு ரேடார் மையம் தங்கள் நாட்டின் பிரதான இலக்கு எனவும் தேவைப்பட்டால் அதை அதிநவீன ஆயுதங்கள் பயன்படுத்தி அழிப்போம் எனவும் ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா ஸக்கரோவா செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது இந்த புதிய ஏவுகணை தளம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் அங்கமாக இருக்கும் அமெரிக்க தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பின் தொடர்ச்சியான பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதி எனவும் இதன் காரணமாக ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டு பேராபத்துகள் அதிகரித்துள்ளதாகும் குறிப்பாக அணு ஆயுதப் போர் ஆபத்துகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இத்தகைய மேற்கத்திய ராணுவ அமைப்புகள் மற்றும் வசதிகளின் தன்மை மற்றும் அவை காரணமாக தங்கள் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து கருதியும் போலந்து நாட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஏவுகணை தளம் ரஷ்யாவின் பிரதான இலக்குகள் பட்டியலில் மிக நீண்ட நாட்களுக்கு முன்பே சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தேவை அல்லது சூழல் ஏற்படும் பட்சத்தில் இத்தகைய பிரதான இலக்குகளை பல்வேறு அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி ரஷ்யா முற்றிலுமாக அழிக்கும் எனவும் ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஸக்கரோவா கூறியுள்ளார்.
அதே நேரத்தில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள போலந்து அரசு ரஷ்யாவின் இத்தகைய மிரட்டல்கள் மேலும் வலுவான நேட்டோ ராணுவ கூட்டமைப்பிற்கான தேவையை உணர்த்துவதாக தெரிவித்துள்ளது இது தொடர்பாக பேசிய போலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பாவெல் வ்ரோன்ஸ்கி இந்த புதிய தளத்தின் பிரதான நோக்கம் தற்காப்பு எனவும் இந்த தளத்தில் எந்தவிதமான அணு ஆயுதங்களோ அல்லது தாக்குதல் ஆயுதங்களோ இல்லை எனவும் இத்தகைய மிரட்டல்கள் மேலும் போலந்து மற்றும் நேட்டோவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துவதாகவும் இதனை அமெரிக்காவும் பரிசீலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
போலந்து நாட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய அமெரிக்க ஏவுகணை கண்காணிப்பு தளம் ரஷ்யாவுக்கு அருகே நேட்டோ ராணுவ கூட்டமைப்பு அமைத்து வரும் ஏவுகணை தடுப்பு அமைப்பின் ஒரு பகுதி ஆகும் இந்த அதிநவீன ரேடார் வசதி மூலம் குறுந்தூர மற்றும் இடைத்தூர பலிஸ்டிக் ஏவுகணைகளை கண்காணித்து அவற்றை இடை மறித்து அழிக்க முடியும் எனவும் ருமேனியாவிலும் இத்தகைய தளம் அமைக்கப்பட உள்ளதும் துருக்கியில் ஏற்கனவே இத்தகைய முன்னெச்சரிக்கை ரேடார் மையம் அமைக்கப்பட்டு உள்ளதும் ஸ்பெயின் நாட்டில் இத்தகைய திறன் கொண்ட அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதும் கூடுதல் தகவல்கள் ஆகும்.