கடந்த வெள்ளிக்கிழமை அன்று வடகொரியா ரஷ்யாவிற்கு உக்ரேன் போரில் உதவும் விதமாக சுமார் 1500 சிறப்பு படை வீரர்களை முதல் கட்டமாக அனுப்பியுள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக ஏறத்தாழ 13 ஆயிரம் படையினரை ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் தென் கொரியாவின் உளவுத்துறை அமைப்பான தேசிய உளவு சேவை நிறுவனம் தகவல் வெளியிட்டு உலகளாவிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது நம் அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் இதைத் தொடர்ந்து ரஷ்யாவும் வடகொரியாவும் மறுப்பு வெளியிட்டதும் அமெரிக்க அரசு மற்றும் நேட்டோ ராணுவ கூட்டமைப்பு ஆகியவை இதை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்திருந்ததும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியும் வடகொரிய படையினர் ரஷ்யாவிற்கு வர உள்ளதாக தனது பாராளுமன்ற உரையில் தெரிவித்திருந்தது போன்ற நிகழ்வுகள் அரங்கேறின.
இந்த நிலையில் தற்போது தென்கொரிய அரசு உக்ரைனுக்கு ராணுவ வீரர்களை அனுப்பி வைக்க உள்ளதாக பிரபல தென்கொரிய ஊடக நிறுவனமான யோன்ஹாப் தென் கொரிய அரசில் உள்ள பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரிகள் சிலர் தெரிவித்திருந்ததாக செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உக்ரைனுக்கு செல்லும் இந்த தென்கொரிய படை வீரர்கள் ரஷ்யாவில் உள்ள வடகொரிய சிறப்பு படை வீரர்களின் கள நடவடிக்கைகள் போர் தந்திரங்கள் போன்றவற்றை ஆராய்ந்து உக்ரைன் ராணுவத்திற்கு உதவ உள்ளதாக மேல் குறிப்பிட்ட யோன்ஹாப் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அது தொடர்பான செய்தி கட்டுரையில் இப்படி உக்ரைனுக்கு அனுப்பப்பட உள்ள தென்கொரிய படையினர் அனைவரும் தென் கொரியாவின் முப்படைகளின் உளவு பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்படுவர் எனவும் இவர்கள் போரில் ஏதேனும் வடகொரிய படையினர் சிறைபிடிக்கப்பட்டால் அவர்களை விசாரணை செய்வதற்கும் உக்ரைன் ராணுவத்திற்கு உதவ உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தி நிறுவனம் உக்ரேனில் போர்க்களத்தில் ரஷ்ய மற்றும் வடகொரிய கொடிகள் இணைந்து பறக்க விடப்பட்டிருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளது.
தென்கொரியா அரசு வடகொரியாவிற்கு ஏற்கனவே இது தொடர்பாக தனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளது மேலும் வடகொரிய படையினரை ரஷ்யாவில் இருந்து திரும்பப் பெறவும் வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் இவை எதற்கும் ஒப்புக் கொள்ளாவிட்டால் தென் கொரியா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து படிப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் ஒட்டுமொத்த உலக அமைதிக்கும் கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் இந்த செயல்பாடை ஒருபோதும் தென்கொரியா அரசு கைகட்டி வேடிக்கை பார்க்காது எனவும் மிகக் கடுமையான எச்சரிக்கையை தென் கொரிய அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
வடகொரியா இப்படி படைகளை அனுப்புவதற்கு கைமாறாக ரஷ்யா அதிநவீன ராணுவ தொழில்நுட்பங்கள் மற்றும் நிதி உதவிகள் போன்றவற்றை வடகொரியாவிற்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதும், இரண்டாம் உலகப் போருக்கு பின்னான காலகட்டத்தில் இருந்து இன்றைய ரஷ்யா அன்றைய சோவியத் ஒன்றியமாக இருந்த போதும் வடகொரியாவிற்கு மிக ஆதரவாக இருந்து வந்தது கடந்த இரண்டு வருடங்களாக இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் பல்வேறு வகையில் அதிகரித்துள்ளன குறிப்பாக இந்த ஆண்டு ஜூன் மாதம் இரு நாடுகளும் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டதும் கூடுதல் தகவல் ஆகும்