ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல் திட்டங்களை கசிய விட்ட அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் !!

ஈரான் சமீபத்தில் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அதற்கு மிக கடினமான பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் அறிவித்திருந்தது இதைத் தொடர்ந்து ஈரான் மீதான தாக்குதல் திட்டங்களை வகுத்து அதற்காக இஸ்ரேல் தயாராகி வந்த நிலையில் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் திட்டங்கள் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகளால் கசிய விடப்பட்டுள்ளது உலக அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கசிவு காரணமாக ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் திட்டங்களில் தோய்வும் பின்னடைவும் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது மட்டுமின்றி இதன் காரணமாக இஸ்ரேல் அமெரிக்க இருதரப்பு உறவுகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன அமெரிக்க அரசியலிலும் பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்தும் யூத சமூகத்தினர் இடையேயும் இது பரவலாக அதிருப்தியை அமெரிக்க அரசு மீது ஏற்படுத்தியுள்ளது, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த கசிவு காரணமாக வருங்காலத்தில் இஸ்ரேல் அமெரிக்காவுடன் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ள தயங்கும் எனவும் இது இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது எனவும் விரைவாக கசிய விட்ட வரை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த கசிவு தனக்கு மிகுந்த கவலை அளிப்பதாக கூறியதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார் மேலும் அவர் பேசும் போது இந்த முக்கிய தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் வேண்டுமெனவே கசிய விடப்பட்டதா அல்லது ஹேக் செய்து திருடப்பட்டதா என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை என ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார், தற்போதைய அமெரிக்க துணை அதிபரும் அமெரிக்க அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் இந்த விவகாரம் பற்றி எவ்வித கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

இந்த விவகாரம் இஸ்ரேலின் அரசியல் அரங்கிலும் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது பல்வேறு இஸ்ரேலிய அரசியல்வாதிகள் அமெரிக்காவின் மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு அமெரிக்கா மிக விரைவாக இந்த தகவல்களை கசிய விட்ட வரை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகவும் சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆந்தணி ப்ளிங்கென் அவர்களை சந்தித்து காசா மற்றும் லெபனான் போர் குறித்து விவாதிக்கும்போது இந்த விவகாரத்தையும் முன்வைத்ததாக இஸ்ரேலில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கசிவு ஒட்டு மொத்த அமெரிக்க ராணுவத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது, இது அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறை மீதான நம்பகத்தன்மையை பாதித்துள்ளதாகவும், குறிப்பாக நட்பு நாடுகள் அமெரிக்காவுடன் மிக முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொள்வதை தடுக்கும் காரணியாக இது மாறக்கூடும் எனவும் கருதுவதாக கூறப்படுகிறது, அமெரிக்க எதிர்க்கட்சியான குடியரசு கட்சி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தையும் ஜனநாயக கட்சியையும் மிகவும் காட்டமாக விமர்சனம் செய்து வருகிறது.

கசிய விடப்பட்ட ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் திட்டங்களில் சமீப காலமாக இஸ்ரேல் விமானப்படை தளங்களில் நடைபெற்ற நடவடிக்கைகள், ஆயுதங்களின் நகர்வுகள், ஆளில்லா வானூர்திகள் மற்றும் போர் விமானங்களை உள்ளடக்கிய பயிற்சிகள் தொடர்பான தகவல்கள் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இதன் மூலமாக அமெரிக்கா இஸ்ரேல் மீது செயற்கைக்கோள் உள்ளிட்டவற்றை கொண்டு வேவு பார்த்ததும் தெரியவந்துள்ளது ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டம் வகுத்து இறுதி கட்டப் பணிகளை மேற்கொண்டு தயாராகி வந்த நிலையில் இந்த கசிவு நடைபெற்றுள்ளது பலத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் இந்த ஆவண கசிவு மிகவும் தீவிரத் தன்மை உடையது எனவும் இது அமெரிக்க உளவுத்துறை கட்டமைப்பில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதையும் அந்தக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள ஓட்டைகளையும் வெளிச்சம் பட்டு காண்பிப்பதாக அமைந்துள்ளதாக கருதுவதாகவும் அதே நேரத்தில் இந்த கசிவு காரணமாக இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதல் திட்டங்களில் எவ்வித தொய்வும் ஏற்படாது என நம்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முக்கிய தகவல்களின் கசிவு காரணமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான உளவு தகவல்கள் பரிமாற்றத்தின் தன்மை தொடர்பாகவும் அமெரிக்க பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்புகளுடன் பரிமாறப்படும் மிக முக்கியமான தகவல்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுந்துள்ளதாக புவிசார் அரசியல் வல்லுனர்கள் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர், இது ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசுக்கு மிகப்பெரிய தலைகுனிவு ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த கசிவு பற்றி விசாரிப்பதற்கு அமெரிக்க அரசு FBI – Federal Bureau of Investigation மத்திய குற்றப் பலனாய்வு அமைப்பிற்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.