கடந்த வாரம் தென் கொரியாவின் உளவு அமைப்பான தேசிய உளவு சேவை நிறுவனம் வடகொரியா முதல் கட்டமாக ரஷ்யாவிற்கு 1500 வீரர்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக 12000 வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் இவர்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாக ரஷ்ய படையுடன் இணைந்து உக்ரைன் படைகளுக்கு எதிராக போரிட உள்ளதாகவும் அறிவித்ததை தொடர்ந்து தென் கொரிய அதிபர் தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரும் இந்த தகவல்களை உறுதிப்படுத்தி தங்கள் நாட்டு நாடாளுமன்றத்தில் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டனர், இதற்கு ஒரு வாரம் முன்னதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது நாட்டு பாராளுமன்றத்தில் வடகொரியா ரஷ்யாவிற்கு ஆதரவாக 13,000 வீரர்கள் வரை அனுப்பி வைக்க உள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி வடகொரியா ரஷ்யாவிற்கு உதவும் வகையில் படை வீரர்களை அனுப்பும் செய்திகள் தென் கொரியா மற்றும் உக்ரைன் அரசுகள் சார்பில் பன்னாட்டு தலைவர்களால் வெளியிடப்பட்டாலும் கூட அமெரிக்காவோ அல்லது நேட்டோ ராணுவ கூட்டமைப்போ இந்த தகவல்களை உறுதி செய்யவில்லை, ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான அமெரிக்க தூதர் இது பற்றி பேசும்போது இது போன்ற தகவல் தங்களுக்கு கிடைத்திருப்பதாகவும் ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார் மேலும் நேட்டோ ராணுவ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட் இது பற்றிய எந்தவித ஆதாரங்களும் தங்களுக்கு கிடைக்கவில்லை என கூறியிருந்தார் இருவரும் இந்த தகவல் உண்மையானால் இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம் எனவும் போரின் தீவிர தன்மையை அதிகமாக்கும் விவகாரம் எனவும் கூறினர்.
இந்த நிலையில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் வடகொரியா ஏறத்தாழ 3000 வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் இப்படி ரஷ்யாவிற்கு நேரடியாக வடகொரியா உதவும் காரணத்தால் வடகொரியா மிக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் கடந்த புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளார் மட்டுமின்றி வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது முதல் கட்டமாக வடகொரியா 3000 வீரர்களை ரஷ்ய கடற்படை கப்பல்கள் மூலமாக பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள கிழக்கு ரஷ்யாவில் அமைந்துள்ள மிகப்பெரிய துறைமுக நகரமான விளாடிவாஸ்டாக் நகரத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அங்கிருந்து இவர்கள் கிழக்கு ரஷ்யாவில் உள்ள பல்வேறு ராணுவ தளங்களுக்கான அனுப்பி வைக்கப்பட்டு பயிற்சிகள் பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசும் போது வடகொரியாவின் இந்த வீரர்கள் ரஷ்ய படைகளுடன் இணைந்து போரில் களம் காணுவார்களா என்பது பற்றி தங்களுக்கு தற்போது தெரியவில்லை எனவும் ஆனால் இதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதாகவும் அது மிகவும் கவலைக்குரியது எனவும் அவர்கள் அங்கிருந்து மேற்கு ரஷ்யாவிற்கு சென்று ரஷ்யப்படைகளுடன் இணைந்து உக்கிரன் ராணுவத்தை எதிர்த்து போரிடலாம் எனவும் கூறினார் அவரும் சரி அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரும் சரி வடகொரியாவின் இந்த நகர்வுகளை அமெரிக்க அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறியுள்ளனர்,
இத்தாலி தலைநகர் ரோம் நகரில் செய்தியாளர்களிடம் பேசி அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் வடகொரிய வீரர்கள் ரஷ்யாவில் என்ன செய்கின்றனர் என்பதற்கான பதில் இனி தான் கிடைக்கும் என கூறியுள்ளார் மேலும் அவர் பேசும் போது வட கொரிய வீரர்கள் ரஷ்ய படைகளுடன் இணைந்து உக்கிரன் ராணுவத்தை எதிர்த்து போரிட்டால் அது ஐரோப்பாவில் மட்டுமல்ல இந்தோ பசிபிக் பிராந்தியத்திலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
தென் கொரிய அரசை பொருத்தவரையில் வடகொரியா இப்படி ரஷ்யாவிற்கு வீரர்களை அனுப்பி வைப்பதற்கு கைமாறாக ரஷ்யா வடகொரியாவுக்கு ஏவுகணை மற்றும் முக்கியமான ராணுவ தொழில்நுட்பங்களையும் கொடுத்து நவீன மயமாக்கல் பணிகளுக்கு உதவும் எனவும் இது தென்கொரியாவின் தேசிய பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் எனவும் அஞ்சுகிறது தென்கொரியாவின் உளவு நிறுவனத்தின் தலைவர் சோ தே யாங் 1500 வடகொரிய சிறப்பு படை வீரர்கள் ரஷ்யாவிற்கு முதலில் பயணித்ததாகவும் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக மேலும் 1500 வீரர்கள் ரஷ்யாவுக்கு சென்றுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் தற்போது ரஷ்ய ராணுவத்திடம் டிரோன்கள் மற்றும் இதர ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு பயிற்சிகளை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தென்கொரிய உளவு நிறுவனத்தின் தலைவர் பாராளுமன்றத்தில் வடகொரிய வீரர்களின் மனதிடம் மற்றும் உடல் திறன் ஆகியவற்றைப் பற்றி ரஷ்ய அதிகாரிகளுக்கு நல்ல எண்ண ஓட்டம் உள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் வடகொரிய இராணுவத்திற்கு நவீன கால போர்முறையில் அனுபவம் இல்லாத காரணத்தால் போர்க்களத்தில் மிகப்பெரிய அளவில் இழப்புகளை வடகொரிய படையினர் சந்திப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கருதுவதாகவும் ஆகவே இவர்களுக்கு முடிந்த அளவுக்கு தீவிரமான பயிற்சிகளை சிறப்பாக அளிக்க உதவும் விதமாக அதிக அளவில் கொரிய மொழி பேசுபவர்களையும் வேலைக்கு எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
வடகொரிய அரசு ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு தேர்வாகியுள்ள வடகொரிய ராணுவ வீரர்களின் குடும்பங்களை சிறப்பு முகாம்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர்களை பொதுமக்களிடமிருந்து பிரித்து வைத்துள்ளதாகவும் வடகொரிய மக்களுக்கு வடகொரிய வீரர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது பற்றி தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தென் கொரிய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன வட கொரியர் ராணுவத்தில் சுமார் 12 லட்சம் படையினர் உள்ளனர் இது உலகின் மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்றாகும் ஆனால் கடந்த 1950 முதல் 1953 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற கொரிய போருக்குப் பிறகு வடகொரிய ராணுவம் எந்த போரிலும் ஈடுபடவில்லை சர்வதேச ராணுவ நிபுணர்கள் இப்படிப்பட்ட அனுபவம் இல்லாத வடகொரிய இராணுவத்தால் ரஷ்ய இராணுவத்திற்கு எந்த வகையில் உதவ முடியும் என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்