துருக்கியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சிரியா மற்றும் ஈராக்கை தாக்கிய துருக்கி விமானப்படை !!

கடந்த புதன்கிழமை அன்று துருக்கி தலைநகர் அங்காராவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள துருக்கியின் மிகப்பெரிய மிகவும் மதிப்பு மிக்க துருக்கி பாதுகாப்பு துறையின் கிரீடமாக கருதப்படும் துருக்கி வான்வழி தொழிற்சாலை நிறுவனத்தின் மீது இரண்டு குர்து மக்கள் கட்சியின் உறுப்பினர்கள் துப்பாக்கி மற்றும் கையறி குண்டுகளால் பயங்கர தாக்குதல் நடத்தியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டு 22 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் துருக்கி மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகம் எங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து துருக்கி விமானப்படை, சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள பல்வேறு இலக்குகளை இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தாக்கி அழித்துள்ளது, இது பற்றி துருக்கி பாதுகாப்பு துறை அமைச்சகம் துருக்கி அரசு ஊடகமான அனடோலு ஏஜென்சிக்கு அளித்துள்ள அறிக்கையில் வடக்கு ஈராக் மற்றும் சிரியாவில் 32 வெவ்வேறு இலக்குகளை துருக்கி விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாகவும் இதில் மிகப்பெரிய அளவில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு சிரியாவில் அரசுக்கு எதிராக போராடிவரும் குர்து மக்களை பெருமளவில் கொண்ட சிரிய ஜனநாயக படை துருக்கி படைகள் கொபானி நகரத்தையும், அலெப்போ நகரத்திற்கு வடக்கே அமைந்துள்ள தாள் ரிபாத் நகரத்தின் மீதும் குண்டு வீசியதாக தெரிவித்துள்ளது. சிரிய ஜனநாயக படையின் ஊடகப் பிரிவு தலைவர் ஃபர்காத் ஷமி இது பற்றி வெளியிட்ட அறிக்கையில் துருக்கி இராணுவத்தின் இந்த தாக்குதலில் இரண்டு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படையின் தலைமை தளபதி மஸ்லும் அப்தி பேசும்போது துருக்கி படைகள் ஈவிரக்கம் மற்ற முறையில் கண்மூடித்தனமாக மருத்துவமனைகள் பொதுமக்கள் வசிக்கும் இடங்கள் இதர சேவைகளை வழங்கும் இடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இது போர் குற்றம் எனவும் கூறியுள்ளார்.

அமெரிக்க அரசை பொருத்தவரையில் இந்த சிரிய ஜனநாயக படை பயங்கரவாத இயக்கம் அல்ல மேலும் இந்த படையின் YPG பெஷ்மார்கா படையினர் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக கடும் சண்டையிட்டவர்கள் ஆவர். ஆனால் துருக்கி அரசை பொருத்தவரை இந்த சிரிய ஜனநாயக படை பெஷ்மார்கா மற்றும் குர்து மக்கள் கட்சி ஆகியவை அனைத்தும் ஒன்றுதான் இவை அனைத்தையும் துருக்கி அரசு பயங்கரவாத இயக்கங்களாக அறிவித்துள்ளது தடை செய்தும் உள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க அரசு குர்து மக்கள் கட்சியை மட்டுமே பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஈராக்கில் நடைபெற்ற தாக்குதலை பொருத்தவரையில் வடக்கு ஈராக்கில் உள்ள மாவாத் மாவட்டத்தின் மேயர் கமிரான் ஹாசன் பேசும்போது சுலைமானியா மாகாணத்தில் உள்ள தனது மாவட்டத்தில் துருக்கி விமானப்படையினர் அசோஸ் மலை பகுதி மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஊடகமான CNN க்கு பேட்டி அளித்துள்ளார். துருக்கி தொழிற்சாலையில் தாக்குதல் நடைபெற்ற பிறகு துருக்கி அரசு பயங்கரவாதிகளின் செய்திகளை ஒளிபரப்புவதற்கு தடை விதித்தது தடையை மீறுவோர் மீது பல்வேறு வகையான தடைகள் விதிக்கப்படும் என துருக்கி ரேடியோ மற்றும் தொலைக்காட்சி கவுன்சில் தலைவர் எபுபெக்கீர் சாகின் தனது எக்ஸ் வலைதள கணக்கு மூலமாக அறிவித்தது கூடுதல் தகவலாகும்