இஸ்ரேல் ஈரான் மோதல் சிறப்பு கட்டுரை !!
1 min read

இஸ்ரேல் ஈரான் மோதல் சிறப்பு கட்டுரை !!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் தற்போது மேலும் பதட்டத்தையும் பரபரப்பையும் உலக அளவில் குறிப்பாக மத்திய கிழக்கில் ஏற்படுத்தி உள்ளது கடந்த திங்கட்கிழமை இரவு அன்று ஈரான் இஸ்ரேல் மீது 180 க்கும் அதிகமான பலிஸ்டிக் மற்றும் ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது இந்த தாக்குதலை இஸ்ரேலின் தற்காப்பு அமைப்புகளும் இங்கிலாந்து விமானப்படை மற்றும் அமெரிக்க கடற்படை ஆகியவை கூட்டாக தடுத்து நிறுத்தின.

பல இடங்களில் இந்த ஏவுகணைகள் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினாலும் பெரும்பாலான ஏவுகணைகளை வீழ்த்தியதாக இஸ்ரேலிய பிரதமர் மற்றும் இஸ்ரேலிய ராணுவ செய்தி தொடர்பாளர் ஆகியோர் அறிவித்துள்ளனர் மேலும் ஈரான் மிகப்பெரிய தவறு இழைத்து விட்டதாகவும் இதற்கான விலையை ஈரான் நிச்சயம் கொடுத்தே தீர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர் இஸ்ரேலிய அரசு மற்றும் இஸ்ரேலிய ராணுவம் ஆகியவை ஈரானுக்கு எதிரான பதில் நடவடிக்கைகள் பற்றி ஆலோசனைகள் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய இராணுவ செய்தி தொடர்பாளர் ரியல் அட்மிரல் டேனியல் ஹகேரி ஊடகங்களிடம் பேசும் போது ஈரானிய ராணுவ நடவடிக்கை அல்லது ஈரானியத் தாக்குதல் மிகவும் ஆபத்தானது மற்றும் மிகப்பெரிய அளவில் பிரச்சினையை முற்றிப்போக வைத்துள்ளதாகவும் இதற்கு நாங்கள் நிச்சயமாக பதிலடி கொடுப்போம் என்றும் அது எங்கே எப்படி எப்போது என்பதை நாங்கள் தெரிவு செய்வோம் எனவும் இஸ்ரேல் அரசின் நடவடிக்கை மற்றும் உத்தரவுக்கு இணங்க இராணுக்கான பதிலடி இஸ்ரேல் ராணுவம் வழங்கும் எனவும் தெரிவித்தார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலமாக உரையாற்றி பேசியபோது ஈரான் மிகப்பெரிய அளவில் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதாகவும் ஆனால் இஸ்ரேலிய தற்காப்பு அமைப்புகள் மற்றும் நாடுகளின் உதவியோடு அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் இந்த தாக்குதலில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் ஈரான் இந்த தாக்குதலை நடத்தியதன் மூலம் மிகப்பெரிய தவறு இழைத்து விட்டதாகவும் நிச்சயமாக இதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலின் ஆரோ ARROW மற்றும் பேட்ரியாட் MIM – 104 PATRIOT போன்ற தற்காப்பு அமைப்புகள் ஈரானிய ஏவுகணைகளை பெருமளவில் இடைமறித்து அளித்துள்ளன மிகவும் பிரபலமான IRON DOME அமைப்பு இந்த தற்காப்பு நடவடிக்கையில் பயன்படுத்தப்படவில்லை காரணம் இந்த அமைப்பு பலிஸ்ட்டிக் ஏவுகணைகளை தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டதல்ல மாறாக சிறிய ராக்கெட்டுகள் பீரங்கி குண்டுகள் போன்றவற்றை மட்டுமே தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாகும் அதே நேரத்தில் மேற்குறிப்பிட்ட இரண்டு அமைப்புகளும் பலிஸ்டிக் ஏவுகணைகளை இடை மறிக்கும் ஆற்றல் கொண்டவை ஆகும்.

இது தவிர சைப்ரஸ் நாட்டில் உள்ள இங்கிலாந்து விமான படையின் RAF AGROTIRI அக்ரோத்திரி விமானப்படை தளத்திலிருந்து இரண்டு இங்கிலாந்து விமானப்படை EUROFIGHTER TYPHOON போர் விமானங்கள் மற்றும் ஒரு எரிபொருள் டேங்கர் விமானம் ஆகியவை புறப்பட்டு இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஈரானிய ஏவுகணைகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டன இது தவிர அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல்கள் மற்றும் அமெரிக்க கடற் படையின் போர் விமானங்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன அதே நேரத்தில் ஈரானின் நடவடிக்கையை மிகவும் கடுமையாக கண்டித்து உள்ளன அதேபோல ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானுக்கு கண்டனங்களை பதிவு செய்து இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது செயலாளர் அன்டோணியோ குட்டரேஸ் மத்திய கிழக்கில் மீண்டும் மீண்டும் பிரச்சனை பெரிதாகி வருவதாகவும் இது விரைவில் நிற்க வேண்டும் எனவும் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

ஏமன் நாட்டின் ஹூத்தி பயங்கரவாத கிளர்ச்சியாளர்கள், ஈராக்கில் இயங்கும் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள், லெபனானில் இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பாளர் ஹிஸ்புல்லா காசாவில் இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் ஆகியவை இந்த தாக்குதல்களை வரவேற்றுள்ளன மேலும் தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளன ஈரானுடைய இந்த நடவடிக்கையில் தாங்களும் உடன் இருப்பதாகவும் அறிவித்துள்ளன, ஈரான் இந்த தாக்குதல் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு பதில் நடவடிக்கை எனவும் இனி இதற்கு இஸ்ரேல் பதிலடி தர நினைத்தால் மிகக் கடுமையான தாக்குதலை ஈரான் நடத்தும் எனவும் இந்த தாக்குதலில் ஈரான் தனது சக்தியின் ஒரு சிறு ஓரத்தை தான் பயன்படுத்தியுள்ளதாகவும் முழு சக்தியை வெளிப்படுத்த வில்லை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்ய தரப்பில் அந்நாட்டு அரசின் செய்தி தொடர்பாளர் மரியா சக்கரோவா பேசும்போது இது அமெரிக்க அதிபர் வைடனுடைய வெளியுறவுக் கொள்கையின் தோல்வியின் வெளிப்பாடு எனவும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் வெள்ளை மாளிகையின் கையாலாகாத தனத்தை இது வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார் சீனா இந்த விவகாரத்தில் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இந்த பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதாகி வருவது கவலை அளிப்பதாகவும் லெபனானில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இந்தியா மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள சூழல் மிகவும் கவலை அளிப்பதாகவும் பொதுமக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் எனவும் ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் பொறுமை காக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள நிலையில் இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவிக்கையை அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று இஸ்ரேலின் பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி ஈரானுக்கு எதிராக மிகக் கடுமையான வலிமையான நடவடிக்கை எடுப்பதற்கு முடிவு செய்துள்ளதாகவும் ஆனால் இத்தகைய நடவடிக்கை ஒரு பிராந்திய அளவிலான போரை ஏற்படுத்தாது என நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் இஸ்ரேலில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன மேலும் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் இஸ்ரேலின் அணு ஆயுத தாக்குதலுக்காக வடிவமைக்கப்பட்ட ஜெரிகோ 3 JERICHO – 3 ஏவுகணைகளை பயன்படுத்தி அணு ஆயுதம் இல்லாத தாக்குதலை ஈரானுடைய முக்கிய எண்ணெய் கிணறுகள் என்னை சுத்திகரிப்பு மையங்கள் மின் உற்பத்தி நிலையங்கள் ஆயுதக் கிடங்குகள் ராணுவ மையங்கள் ஆகியவற்றுக்கு எதிராக நடத்துவதற்கு ஆயத்தப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போதைக்கு உலகில் நடைபெறும் பிரச்சனைகளில் வேறு எதுவும் இஸ்ரேல் ஈரான் பிரச்சனை அளவுக்கு மூன்றாவது உலகப்போரை தூண்டும் தன்மையை கொண்டவை அல்ல உதாரணமாக இந்தியா சீனாவுக்கு போர் ஏற்பட்டாலோ அல்லது தற்போது உக்கிரன் மற்றும் ரஷ்ய இடையே நடைபெறும் போரோ மூன்றாவது உலகப்போரை தூண்டாது ஆனால் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஒரு முழு அளவிலான போர் மூண்டால் அது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் உள்ள அதாவது சிரியா ஈராக் லெபனான் காசா ஏமன் ஆகிய நாடுகளில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு குழுக்களும் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானுடைய போரில் இணையும் இதைத்தொடர்ந்து இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தும் மேலும் இஸ்ரேலுக்கு உதவியாக அமெரிக்கா களம் இறங்கும்,

இதற்கு அடுத்த கட்டமாக சவுதி அரேபியா ஜோர்டான் ஐக்கிய அரபு அமீரகம் பக்ரைன் உள்ளிட்ட நாடுகளும் இந்தப் போரில் இழுக்கப்படும் அப்படிப் போர் மேலும் விரிவடையும் பட்சத்தில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் தாக்கும் சூழல் உருவாகும் இதைத் தொடர்ந்து நேட்டோ அமைப்பின் ஐந்தாவது ஷரத்தை அமெரிக்கா பயன்படுத்தி ஒட்டுமொத்த நேட்டோவையும் போரில் ஈடுபட அழைப்பு விடுக்கும் அப்படி ஒட்டு மொத்த நேட்டோ அமைப்பும் களமிறங்கும் போது சவுதி அரேபியா ஓமன் ஐக்கிய அரபு அமீரகம் பஹ்ரைன் குவைத் கத்தார் உள்ளிட்ட நாடுகளில் உள்ள நேட்டோ நாடுகளின் படைத்தளங்களும் ஈரானிய தாக்குதலுக்கு உள்ளாகும் இதைத்தொடர்ந்து மேல் குறிப்பிட்ட வளைகுடா நாடுகளும் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும், இதில் அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் இஸ்ரேல் போன்ற அணு ஆயுதங்களை கொண்ட நாடுகளும் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடு என அறியப்படும் ஈரானும் ஈரானுக்கு ஆதரவாக அணு ஆயுத திறன் கொண்ட ரஷ்யாவும் வடகொரியாவும் களமிறங்கும் வாய்ப்புகளும் ஏற்படும்

இப்படி மேற்காசியாவில் ஒரு கடுமையான போர் நடைபெறும் சூழலில் தெற்காசியாவில் ஈரானை தொடர்ந்து மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிவரிசையாக அமைந்திருக்கும் பாகிஸ்தான் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் இந்தப் போரில் இழுக்கப்படும் வாய்ப்புகள் ஏற்படலாம் அல்லது இதை பயன்படுத்தி பாகிஸ்தான் மற்றும் சீனா இந்தியா மற்றும் தைவானுக்கு எதிரான நடவடிக்கைகளையும் துவங்கி இது உலகம் முழுவதையும் பாதிக்கும் மிகப்பெரும் ஒரு அபாயம் உள்ளது என்றால் மிகை அல்ல.

இவையெல்லாம் இஸ்ரேலின் அடுத்த கட்ட பதில் நடவடிக்கையை பொருத்தும் அதைத்தொடர்ந்து ஈரானின் நடவடிக்கைகளை பொருத்துமே அமையும் என்பதும் இதன் காரணமாகத்தான் உலகம் முழுவதும் உலக நாடுகள் மற்றும் உலகத் தலைவர்கள் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் ஒருபுறம் ஆதரவு தெரிவித்தாலும் மறுபுறம் அமைதி காக்கும் படியும் பொறுமை காக்கும் படியும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்