ரஷ்யாவுக்கு படைவீரர்களை அனுப்பிய குற்றச்சாட்டை மறுத்த ரஷ்யா மற்றும் வடகொரியா !!
1 min read

ரஷ்யாவுக்கு படைவீரர்களை அனுப்பிய குற்றச்சாட்டை மறுத்த ரஷ்யா மற்றும் வடகொரியா !!

கடந்த வெள்ளிக்கிழமை அன்று தென்கொரியாவின் உளவு நிறுவனம் வடகொரியா ரஷ்யாவிற்கு உக்ரைன் போரில் உதவும் விதமாக சுமார் 13,000 வீரர்களை அனுப்பி வைக்க உள்ளதாகவும், முதல் கட்டமாக ரஷ்ய கடற்படை கப்பல்களில் ஏறத்தாழ 1500 சிறப்பு படை வீரர்கள் ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை சென்றடைந்துள்ளதாகவும் அங்கு ரஷ்ய படையினருடன் இணைந்து ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்களுக்கு ரஷ்ய ராணுவ உடைகளும் ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் போலி ரஷ்ய குடிமக்கள் அடையாளங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் பயிற்சி நிறைவு செய்ததும் அவர்கள் உக்கரைன் உடனான போர்க்கள முன்னணிக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனவும் தகவல் வெளியிட்டு உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த தகவலை தென் கொரிய அதிபர் யூன் சூக் யோல், தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர், தென் கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், தென் கொரிய ராணுவ தளபதிகள், தென் கொரிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உறுதி செய்யும் விதமாக பேசி உள்ளனர் மேலும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்தார், இதற்கு சில நாட்கள் முன்னதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியும் தனது நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது வடகொரியாவின் இந்தப் படை நகர்வு பற்றி தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஷ்ய அரசும் வடகொரிய அரசும் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளன திங்கட்கிழமை அன்று வடகொரியாவின் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான பிரதிநிதி ஒருவர் வடகொரியா ரஷ்யாவிற்கு உக்ரைனுடன் போரிடுவதற்கு படைகளை அனுப்பி வைக்கவில்லை எனவும் இது தென்கொரியா அரசின் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும் நிராகரித்தார் மேலும் அவர் ரஷ்யா மற்றும் வடகொரியா இடையேயான இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் இது தொடர்பானது அல்ல எனவும் இது பற்றி விளக்கம் அளிக்க தங்கள் தரப்பிற்கு எவ்வித தேவையும் இல்லை எனவும் கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசும்போது தென் கொரியாவின் குற்றச்சாட்டுகள் சர்வதேச சமூகத்தில் வடகொரிய ஜனநாயக மக்கள் குடியரசு மீது களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சி எனவும் இரண்டு இறையாண்மை மிக்க நாடுகள் இடையேயான சட்டவிரோதமற்ற நட்பு ரீதியிலான இருதரப்பு ஒத்துழைப்புக்கான முயற்சிகளை சீர்குலைக்கும் செயல்பாடு எனவும் அவர் கூறினார் வடகொரிய அரசு ஊடகங்கள் இதுவரை இது பற்றி எவ்வித செய்தியும் வெளியிடாததும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது அதே நேரத்தில் ரஷ்யாவும் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்து உள்ள நிலையில் வடகொரியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் உறவுகளை நியாயப்படுத்தி உள்ளது.

கடந்த திங்கட்கிழமை அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஆலோசனைக் கூட்டத்தில் ரஷ்யாவின் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான தூதர் வசிலி நெபன்ஸியா தென்கொரியாவின் இந்த குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்தார் மேலும் வடகொரியா சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கு ஆயுதம் சப்ளை செய்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அடியோடு மறுத்துள்ளார் மேலும் அவர் பேசும் போது இப்படி ஈரான் சீனா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளை முன்வைத்து பதட்டத்தையும் பயத்தையும் ஏற்படுத்த மேற்கத்திய நாடுகள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார், இது ஒரு புறம் இருக்க வடகொரிய அதிபரின் சகோதரி செவ்வாய்க்கிழமையன்று தென்கொரிய மற்றும் உக்ரைன் அரசுகளை பைத்தியக்காரர்கள் எனவும் இரண்டு அணு ஆயுத நாடுகள் மீது கவனமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாகவும் மிகக் காட்டமான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க அமெரிக்க அரசோ அல்லது நேட்டோ ராணுவ கூட்டமைப்பு தென் கொரியாவின் இந்த குற்றச்சாட்டுகளை இதுவரை உறுதி செய்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை, ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான அமெரிக்காவின் துணை தூதர் ராபர்ட் வூட் தென் கொரியாவின் இந்த அறிக்கைகளை கவனித்து வருவதாகவும் ஆனால் இதுவரை இது பற்றி உறுதியான தகவல் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் ஆனால் அப்படி இது உண்மையாக இருக்குமானால் அது மிகவும் ஆபத்தான கவலைக்குரிய விஷயமாகும் எனவும் மேலும் அது போரின் தீவிரத்தை அதிகரிப்பதாக இருக்கும் எனவும் ரஷ்யா மற்றும் வடகொரியா இடையேயான ராணுவ உறவுகள் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதை குறிப்பிடும் வகையில் இருக்கும் எனவும் அப்படி ஒரு சூழல் உருவாகுமானால் அதை கையாள்வது எப்படி என தங்களது நட்பு நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல முன்னாள் நெதர்லாந்து பிரதமர் மற்றும் இந்நாள் நேட்டோ ராணுவ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட் தென் கொரியாவின் இந்த குற்றச்சாட்டுகள் தற்போது வரை தங்களது தரப்பால் உறுதி செய்யப்படவில்லை எனவும் ஆனால் இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது மிக மிக ஆபத்தான செயல்பாடாக மாறிவிடும் என கூறியுள்ளார் மேலும் தென் கொரிய அதிபர் யூன் சூக் யோல் உடன் தொலைபேசி வாயிலாக இது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார், தென் கொரியா அதிபர் இது பற்றி கூறும் போது இத்தகைய செயல்பாடுகள் சர்வதேச சட்ட விதிகளை மீறியது எனவும் கொரிய தீபகற்பம் மற்றும் ஒட்டுமொத்த உலகளாவிய அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல் எனவும் இதனை தென்கொரிய அரசு ஒருபோதும் கைகட்டி வேடிக்கை பார்க்காது எனவும் தெரிவித்துள்ளார்.