அமெரிக்காவுடனான கவச வாகன ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள தடுமாற்றம்; இந்தியாவுக்கு கவச வாகனங்களை விற்பனை செய்ய முன்வந்துள்ள ரஷ்யா !!
அமெரிக்காவிடமிருந்து இந்திய ராணுவத்தின் இயந்திர மயமாக்கப்பட்ட காலாட்படை படை அணிகளுக்கு 500க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக்கர் கவச வாகனங்கள் வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட இறுதி கட்ட நிலையை எட்டிய நிலையில் அமெரிக்காவுடனும் கனடாவுடன் காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் மோதல்கள் காரணமாக அந்த வாகன ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ரஷ்யா தனது VPK-7829 Bumerang கவச வாகனங்களை இந்திய தரைப்படைக்கு விற்பனை செய்வதற்கு முன் வந்துள்ளது.
ஏற்கனவே இந்திய தரைப்படை ரஷ்ய தயாரிப்பு BTR வாகனங்களை பயன்படுத்தி பின்னர் படையிலிருந்து விலக்கியது, தொடர்ந்து BMP-1 மற்றும் நீரில் செல்வதற்கு ஏற்றபடி இந்தியாவிலேயே மாற்றி அமைக்கப்பட்ட BMP-2 SHARATH ஆகிய கவச வாகனங்களை பயன்படுத்தி வருகிறது. இவற்றின் வயதும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் அவற்றுக்கு மாற்றாக உடனடி தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்தியா அமெரிக்காவிடமிருந்து ஸ்ட்ரைக்கர் கவச வாகனங்களை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தற்போது அதே ரஷ்யா தான் தனது புதிய தலைமுறை கவச வாகனங்களை இந்திய தரப்பிற்கு அளிக்க முன்வந்துள்ளது.
ரஷ்யாவை பொறுத்தவரையில் இந்த புதிய தலைமுறை ரஷ்ய கவச வாகனம் மேற்கத்திய கவச வாகனங்களை போன்று பல்வேறு அதிநவீன வசதிகளை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாகனத்தில் இரண்டு வகைகள் உள்ளன. முதலாவது வகை 25 டன் எடை கொண்ட நிலத்தில் மட்டும் பயணிக்கும் திறன் கொண்ட K17 ரகமாகும், அடுத்தபடியாக நிலத்திலும் நீரிலும் பயணிக்கும் திறன் கொண்ட 22 டன் எடை கொண்ட K16 கவச வாகனமும் உள்ளது. இந்த வாகனத்தால் அதிகபட்சமாக 800 km தூரம் வரை பயணிக்க முடியும். இந்த வாகனத்தில் 700 குதிரை சக்தி திறன் கொண்ட டிஜிட்டல் முறையில் இயக்கப்படும் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் தானியங்கி கியர்பாக்ஸ் தொழில்நுட்பமும் உள்ளது.
இந்த வாகனத்தால் சாலையில் அதிகபட்சமாக மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்திலும், சாலையில்லாத கரடு முரடான நிலப்பரப்பில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்க முடியும். இது தவிர நீரில் ஐந்து நாட் அதாவது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இந்த வாகனத்தை இயக்குவதற்கு மூன்று பேர் தேவை ஒரு ஓட்டுநர், ஒரு ஆயுதம் இயக்குபவர் மற்றும் ஒரு கட்டளை அதிகாரி. இந்த வாகனத்தால் முழு ஆயுத சுமையுடன் இருக்கும் 8 வீரர்களை சுமந்து சொல்ல முடியும். இந்த வாகனங்களில் ஸ்டீல் மற்றும் செராமிக் பாதுகாப்பு கவசங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர லேசர் கண்டுபிடிப்பு கருவிகள் மற்றும் புகை வெளியேற்றும் கருவிகள் மற்றும் 360 டிகிரி கோணத்தில் வாகனத்தை சுற்றிலும் கவனிக்கும் கேமராக்கள் ஆகியவையும் உள்ளன.
இந்த வாகனங்களில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் எதிரிகள் இந்த வாகனத்தை அழிக்க ஏவும் ஆயுதங்களை அழிப்பதற்கான ஆப்கானிட் தற்காப்பு ஆயுதமும் உள்ளது. மேலும் கன்னிவெடிகள் மற்றும் குண்டு வெடிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய சூழல்களில் வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன, 1.5 முதல் 2 கிலோமீட்டர் தூரம் நிலத்தில் உள்ள இலக்குகளையும் 2.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வான் இலக்குகளையும் தாக்குவதற்கு ஏதுவான 30 மில்லி மீட்டர் கனரக துப்பாக்கி ஒன்று உள்ளது.
இது தவிர இரண்டு ஜோடி அதாவது நான்கு கார்நெட் டி தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் இந்த வாகனங்களில் உள்ளன. இது தவிர ஒரு 7.62 மில்லி மீட்டர் இயந்திர துப்பாக்கியும் உள்ளது. மேலும் தேவைப்பட்டால் 30 மில்லி மீட்டர் கையேரி குண்டு லாஞ்சர் அமைப்பையும் பொருத்திக் கொள்ளலாம், ஒரே நேரத்தில் பல இலக்குகளை அடையாளம் கண்டு மேல்குறிப்பிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி அவற்றை தாக்கி அழிப்பதற்கு உதவும் வகையிலான இரண்டு பார்வை கருவிகளும் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் ஸ்ட்ரெய்க்கர் மற்றும் ரஷ்யாவின் பூமராங் வாகனங்களை ஒப்பிடுகையில் பூமராங் வாகனம் அதிக குதிரை சக்தி திறன் கொண்ட என்ஜினை கொண்டுள்ளது. மேலும் இதனால் நீரிலும் நிலத்திலும் பயணிக்க முடியும் ஸ்ட்ரைக்கர் வாகனத்தை விடவும் அதிகமாக தற்காப்பு வசதிகளை கொண்டுள்ளது மேலும் ஸ்ட்ரைக்கர் வாகனத்தை ஒப்பிடுகையில் அதே அளவிலான படை வீரர்களை சுமந்து கொண்டு போர்க்களத்தில் பயணிக்கும் திறனும் உள்ளது குறிப்பிடத்தக்கது