தென்கொரியாவின் உளவு அமைப்பான NIS – National Intelligence Service தேசிய உளவு சேவை வடகொரியா உக்ரைனில் ரஷ்ய படைகளுடன் இணைந்து போரிடுவதற்காக சுமார் 12 ஆயிரம் வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்க உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது இதனை தென்கொரிய அதிபர் யூன் சூக் யோல் மற்றும் தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் கிங் யாங் ஹ்யூன் ஆகியோரும் உறுதிப்படுத்தும் விதமாக பேசியுள்ளனர் உக்ரைன் அதிபர் ஜெனன்ஸ்கியும் சமீபத்தில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இந்த தகவலை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
கடந்த அக்டோபர் 18ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை அன்று தென் கொரிய அதிபர் யூன் சூக் யோல் இந்த தகவல் வெளியானதை அடுத்து அவசரகால பாதுகாப்பு கூட்டத்தை கூட்டியதாகவும் இந்தக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை சேர்ந்த மூத்த அதிகாரிகள், தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தென் கொரிய உளவுத் துறை ஆகியவற்றை சேர்ந்த மூத்த ராணுவ மற்றும் உளவு அதிகாரிகள் கலந்து கொண்டதாக தென்கொரிய அதிபர் அலுவலகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் சில மாதங்களுக்கு முன்பதாக ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் செய்து கொண்ட இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் அனைவரும் வடகொரியா ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவி செய்து வந்த நிலையில் இருந்து படையினரை அனுப்பி உதவி செய்யும் நிலைக்கு மேல் குறிப்பிட்ட ஒப்பந்தம் தான் அடித்தளமாக அமைந்துள்ளது என்பதையும் இது தென் கொரியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கும் இதைத்தொடர்ந்து தென் கொரியா இந்த விவகாரத்தில் வெறுமனே பொறுமை காக்காமல் சர்வதேச சமூகத்துடன் இணைந்து தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதற்கும் இசைவு தெரிவித்ததாக அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய உளவு நிறுவனம் சற்று காலமாகவே வடகொரியாவின் படை நகர்வுகளை கவனித்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் வட கொரியாவை சேர்ந்த மூத்த ஏவுகணை விஞ்ஞானி மற்றும் மூத்த வடகொரிய ராணுவ அதிகாரிகள் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர்க்கள முன்னணிக்கு சென்று ரஷ்ய படையினருக்கு வடகொரிய ஏவுகணைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய செயல்பாடுகளை விளக்கி எடுத்துரைத்ததாக தகவல் வெளியிட்டது இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் எட்டாம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சுமார் 1500 வடகொரிய சிறப்பு படை வீரர்கள் கிழக்கு ரஷ்யாவிற்கு நகர்த்தப்பட்டதையும் மேலும் படை வீரர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் படைவீரர்களை நேரில் சென்று சந்தித்து உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்ததாகவும் தகவலை வெளியிட்டு உள்ளது.
வடகொரியா ரஷ்யாவுக்கு கடந்த ஆகஸ்ட் 2023 முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் 70 முறையாக சுமார் 13,000 கண்டைனர்களில் ஏவுகணைகள், ராக்கெட்டுகள், டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், எட்டு லட்சம் 122 மற்றும் 152 மில்லி மீட்டர் பீரங்கி குண்டுகள் ஆகியவற்றை அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, தென்கொரியாவில் இந்த குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருக்க ரஷ்யா கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி வடகொரிய படையினரை தனது போர் நடவடிக்கையில் பயன்படுத்தவில்லை என மறுப்பு தெரிவித்திருந்தது, இதைத்தொடர்ந்து அமெரிக்க ராணுவம் இந்த தகவல்களை தங்கள் தரப்பு இதுவரை உறுதி செய்யவில்லை எனவும் நேட்டோ ராணுவ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட் தற்போது இந்த தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை எனவும் தென் கொரியா உடன் இணைந்து இது பற்றிய விவரங்களை சேகரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
தென் கொரிய உளவு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி நான்கு நீர் நில நடவடிக்கை கப்பல்கள் மற்றும் மூன்று பாதுகாப்பு கப்பல்கள் ஆகியவற்றை உபயோகித்து ரஷ்யா வடகொரிய படையினரை வடகொரிய நகரங்களான சாங்ஜின், ஹாம்ஹூங் மற்றும் மூசுடான் ஆகிய நகரங்களில் இருந்து ரஷ்யாவின் கிழக்கில் உள்ள விளாாடிவாஸ்டாக் நகரத்திற்கு முதல் கட்டமாக நகர்த்தியுள்ளதாகவும் மிக விரைவாக இரண்டாவது கட்ட படை நகர்வு நடைபெற உள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக 12 ஆயிரம் வீரர்களை வடகொரியா ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும், ஏற்கனவே ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகரத்தை சென்றடைந்த வடகொரிய வீரர்கள் அங்கு மற்றும் ப்ளாகோவ்ஷ்சென்ஸ்க், உஸ்ஸூரிஸ்க் மற்றும் கபாரோவ்ஸ்க் ஆகிய நகரங்களிலும் உள்ளதாகவும்
அதாவது மேல் குறிப்பிடப்பட்ட நான்கு ரஷ்ய நகரங்களிலும் உள்ள ரஷ்ய படைத்தளங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய படையினருடன் ஒருங்கிணைப்பு பயிற்சிகளை அவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் அவர்களுக்கு ரஷ்ய இராணுவ உடைகள் மற்றும் ஆயுதங்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் மேலும் அவர்கள் வெளிநாட்டவர்கள் என்பதை மறைக்கும் விதமாகவும் வடகொரியா தனது படையினரை ரஷ்யாவுக்கு இந்த போரில் பங்கு பெறுவதற்காக அனுப்பி வைத்துள்ளது என்பதை மறைக்கும் விதமாகவும் அவர்களுக்கு போலி ரஷ்ய அடையாள ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களது அடிப்படை ஒருங்கிணைப்பு பயிற்சிகள் நிறைவடைந்ததும் போர்க்கள முன்னணிக்கு அனுப்பி வைக்கப்படுபவர் என்பதாகவும் தென் கொரிய தேசிய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்