சமீபத்தில் இத்தாலிய கடற்படை பிரிவு இந்தியாவுக்கு வந்து இந்திய கடற்படையுடன் கோவாவுக்கு அருகே அரபிக்கடல் பகுதியில் கடல் பயிற்சிகளை மேற்கொண்டது. இந்த இத்தாலிய கடற்படை பிரிவின் தளபதியான துணை அட்மிரல் அவ்ரலியோ டி கரோலிஸ் இத்தாலிய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ITS CAVOUR இல் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது இந்திய பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் செயல்பாடுகளை புகழ்ந்துள்ளார்.
அவர் பேசும்போது இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகரித்து வரும் கடற்கொள்ளை நடவடிக்கைகள் பற்றி பேசினார். மேலும் செங்கடல் பகுதி வழியாக நடைபெறும் வணிக கப்பல் போக்குவரத்து கணிசமாக குறைந்துள்ளதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மீண்டும் சோமாலிய கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகள் அதிகரித்ததாகவும் செங்கடல் பகுதியில் போக்குவரத்து குறைந்த காரணத்தால் ஆப்பிரிக்காவை சுற்றி கப்பல்கள் பயணிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் இந்த சூழலில் இந்திய கடற்படை இந்திய பெருங்கடலில் மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இந்திய பெருங்கடலை வெறுமனே இந்திய பெருங்கடல் என அழைப்பதில்லை அதற்கு இப்படி ஒரு காரணம் இருப்பதாகவும் கூறினார்.
இந்தியாவும் இத்தாலியும் கடந்த ஒரு சில ஆண்டுகளாக கடற்படை அளவில் மிக அதிக அளவில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தியுள்ளன. கடந்தாண்டு இத்தாலி இந்தோ பசிபிக் ஓசியன் இனிசியடிவ் நடவடிக்கையின் ஒரு அங்கமாக சேர்ந்தது, மேலும் கடந்த ஆண்டில் இத்தாலிய கடற்படை கப்பல் ஆகஸ்ட் மாதம் மும்பை கடற்படை தளத்திற்கு வந்தது. அதே ஆண்டு இந்திய கடற்படை கப்பல் ஐ என் எஸ் சுமேதா முன்பதாக மும்பை வருகை தந்திருந்த இத்தாலிய கடப்படை கப்பல் ஐடிஎஸ் மொரோஷினி கப்பலுடன் இத்தாலியின் சர் தீனியா கடல் பகுதியில் இணைந்து இருதரப்பு பயிற்சி மேற்கொண்டதும், இந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மிலன் 2024 கடற்படை கூட்டுப் பயிற்சிகளில் இத்தாலி கடற்படை கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்