ஐரோப்பாவுக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்வதில் சவுதி அரேபியாவை முந்திய இந்தியா !!
1 min read

ஐரோப்பாவுக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்வதில் சவுதி அரேபியாவை முந்திய இந்தியா !!

பிரிக்ஸ் கூட்டமைப்பை சேர்ந்த மிக முக்கியமான உறுப்பு நாடான இந்தியா ஐரோப்பாவுக்கு கச்சா எண்ணெயிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்வதில் சவுதி அரேபியாவை முந்தியுள்ளதாக ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரசல்ஸை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் உலகளாவிய வர்த்தக கண்காணிப்பு நிறுவனமான Kpler தகவல் வெளியிட்டுள்ளது ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் போருக்கு முன்பதாக பெருமளவில் ரஷ்யாவில் இருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்து வந்த நிலையில் அதற்குப் பிறகு பொருளாதார தடைகளை விதித்த காரணத்தால் மாற்று வழிகளை எதிர்நோக்கி இருந்த நேரத்தில் இந்தியா அந்த இடத்தை நிரப்பி உள்ளது.

பொதுவாக சவுதி அரேபியா உலகளாவிய பெட்ரோலிய வர்த்தகத்தில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது மேலும் உலகத்தின் மிகப் பிரதானமான பெட்ரோலிய உற்பத்தி நாடுகளில் ஒன்று என்கிற அந்தஸ்தையும் தக்க வைத்துள்ளது, எனினும் ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் காரணமாக தங்களது பெட்ரோலிய தேவைகளை சந்தித்துக் கொள்வதற்கு ஐரோப்பிய நாடுகள் மாற்று வழிகளை தேடிய போது இந்தியா அதனை நன்கு பயன்படுத்தி தனது ஏற்றுமதியை ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகரித்தது தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சத்து 60,000 பேரல்களுக்கு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைன் போர் துவங்குவதற்கு முன்பு இந்தியப் பெட்ரோலிய சுத்திகரிப்பாளர்களிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 54000 பேரல்கள் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்து வந்தன, ஐரோப்பிய யூனியன் ரஷ்ய பெட்ரோலிய பொருட்கள் மீது தடை விதித்ததை தொடர்ந்து நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சம் பேரல்கள் பெட்ரோலிய பொருட்களை இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்ய துவங்கின.

அமெரிக்கா தலைமையிலான ரஷ்யா பெட்ரோலிய பொருட்கள் மீதான தடை காரணமாக இந்தியா ரஷ்யாவில் இருந்து மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி சுத்திகரித்து தனது தேவையை பூர்த்தி செய்து கொண்டு ஏற்றுமதியும் செய்து வருகிறது அந்த வகையில் கடந்த 2022 மற்றும் 2024 ஆகிய இரண்டு ஆண்டு கால கட்டத்தில் இந்தியா சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பணத்தை சேமித்துள்ளது, இதன் இந்திய மதிப்பு சுமார் 58,800 கோடி ரூபாயாகும்,
Kpler நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியா ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவு ஒரு நாளைக்கு 20 லட்சம் பேரல்கள் என்ற பிரம்மாண்ட அளவை தொட உள்ளது இது இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 44 சதவீதமாக இருக்கும்.

இதன் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கான இந்தியாவின் பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி பல மடங்கு அதிகரிக்கும் என்பதும் இதன் மூலம் இந்தியா பெருமளவில் வருவாய் ஈட்ட முடியும் என்பதும் கூடுதல் சிறப்பாகும் இந்தியா இப்படி சர்வதேச சந்தையில் குறிப்பாக ஐரோப்பிய சந்தையில் வேரூன்றி உள்ள நிலையில் சவுதி அரேபியாவும் தனது தயாரிப்புத் திறன்களை அதிகரித்து தனது ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள நினைக்கிறது அந்த வகையில் வருகிற 2025 ஆம் ஆண்டிற்குள் மேலும் கூடுதலாக ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர்கள் பெட்ரோலிய பொருட்கள் தயாரிப்பை அடையத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்