சீனாவுக்கு எதிரான க்வாட் QUAD நாடுகள் என அறியப்படும் இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தின் மிக முக்கியமான நாடுகளான இந்தியா அமெரிக்கா ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் பங்குபெறும் 28 வது மலபார் கூட்டு பயிற்சிகள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரத்தில் கடந்த எட்டாம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன இந்த மலபார் கூட்டு பயிற்சிகள் வங்க கடல் பகுதியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த 1992 ஆம் ஆண்டு இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகள் இடையே ஆன இருதரப்பு கூட்டு பயிற்சியாக துவங்கிய இது பின்னர் 2007 ஆம் ஆண்டு ஜப்பானிய கடற்படை இதில் இணைந்தது அதே ஆண்டில் சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இணைந்தன, உறுப்பினர் சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் விலகிக் கொண்ட நிலையில் 2015 ஆம் ஆண்டு ஜப்பான் இந்த பயிற்சிகளின் உறுப்பு நாடாக இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் இணைந்தது பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு மீண்டும் ஆஸ்திரேலியா இந்த பயிற்சியில் மற்று மூன்று நாடுகளுடன் நிரந்தர உறுப்பினராக இணைந்தது, 2017 ஆம் ஆண்டு குவாட் அமைப்பு மீண்டும் மீள் உருவாக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த பயிற்சிகள் கடற்படை பயிற்சிகள் எனவும் அறியப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
வருகிற 18-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சிகளில் இந்தியா சார்பில் டெல்லி ரக நாசகாரி கலனான ஐ என் எஸ் டெல்லி போர்க்கப்பல் மற்றும் விவரங்கள் வெளியிடப்படாத மேலும் நான்கு கப்பல்களும் ஒரு நீர்மூழ்கி கப்பலும், அமெரிக்கா சார்பில் ஆர்லெபர்க் ரக நாசகாரி கப்பலான யு எஸ் எஸ் ட்யுவி போர்க்கப்பல், ஜப்பான் சார்பில் மூறாசாமெ ரக நாசகாரி கப்பல் ஜே எஸ் அரியாகே போர்க்கப்பல் மற்றும் ஆஸ்திரேலியா கடற்படை சார்பில் அன்சாக் ரக ஃப்ரிகேட் கலனான ஹெச் எம் ஏ எஸ் அன்சாக் ஆகியவையும், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க பி8 தொலைதூர கண்காணிப்பு, கப்பல் மற்றும் நீர்மூழ்கி வேட்டை விமானங்கள், ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கடற்படைகளின் MH60R நீர்மூழ்கி வேட்டை ஹெலிகாப்டர்களும் பங்கேற்க உள்ளன
விசாகப்பட்டினம் நகரத்தில் நடைபெற்ற துவக்க விழாவில் இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர், அமெரிக்க கடற்படையின் பசிபிக் கடற்படை தளபதி அட்மிரல் ஸ்டீபன் கோலர், ஜப்பானிய கடற்படையின் துணை தளபதி வைஸ் அட்மிரல் கட்சூச்சி ஒமாச்சி மற்றும் ஆஸ்திரேலியா கடற்படை சார்பில் படைக்கலன்களின் தளபதி ரியர் அட்மிரல் கிறிஸ்டோபர் எர்சன் ஸ்மித் ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினர் அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு நான்கு நாடுகளின் மூத்த கடற்கரை அதிகாரிகளும் தெளிவான விளக்கங்களும் பதில்களையும் அளித்தனர்.
மேலும் இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பேசும் போது இந்தக் கூட்டுப் பயிற்சிகள் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஒருமித்த சிந்தனை உள்ள மற்ற நாடுகளை போலவே கடல் சார் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான இந்தியாவின் உறுதியை வெளிப்படுத்துகிறது எனவும் உங்களது ஒருமித்த முயற்சிகள் உறவையும் படை ஒத்துழைப்பையும் அதிகப்படுத்தும் எனவும் ஒன்றாக நாங்கள் இந்தப் பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட விரும்புகிறோம் எனவும் கூறினார்.
அமெரிக்க கடற்படையின் பசிபிக் பிராந்திய கடற்கரையின் தளபதி அட்மிரல் ஸ்டீபன் கோலர் பேசும்போது நான் இங்கு எனது சகாக்களுடன் எங்களது கடற்படைகளின் கூட்டுப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளேன் எங்களது கடற்படைகள் இந்திய பெருங்கடலில் எங்களது போர் தயார் நிலை, கடல் சார் ஒருங்கிணைப்பு திறன்கள் மற்றும் ஒருங்கிணைந்த படை நடவடிக்கை திறன்கள் ஆகியவற்றை வலுப்படுத்த பயிற்சி மேற்கொள்ள உள்ளன மலபார் பயிற்சிகள் பிரச்சினைகளை தடுப்பதற்கான கூட்டு முயற்சிக்கான சிறந்த உதாரணம் எனவும் மேலும் அமைதியான சுதந்திரமான இந்தோ பசிபிக் பிராந்தியத்திற்கான உறுதியை இதன் மூலம் வெளிப்படுத்துகிறோம் எனவும் தெரிவித்தார்.
ஜப்பானிய கடற்படையின் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் கட்சூச்சி ஒமாச்சி பேசும்போது கடந்த 2007ஆம் ஆண்டு ஜப்பான் கடற்படை இந்த பயிற்சிகளில் இணைந்த பிறகு தற்போது 17 ஆண்டுகள் ஆகிறது, இந்த மலபார் கூட்டு பயிற்சிகள் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் மற்றும் அமைதியான சுதந்திரமான இந்தோ பசிபிக் பிராந்தியத்திற்கு வழிவகுக்கும் சர்வதேச சட்டவிதிகளுக்கு உட்பட்ட கடல்சார் ஒழுங்கை நிலை நாட்டவும் உதவும் என நம்புவதாகவும் ஒருபோதும் இல்லாத அளவுக்கு தற்போது இந்திய அமெரிக்க ஜப்பானிய ஆஸ்திரேலியா கூட்டுறவு பல மடங்கு வளர்ச்சி அடைந்து வருவதாகவும் ஆகவே தான் இனியும் எதிர்காலத்தில் கடற்படைகள் இடையேயான பலதரப்பு உறவுகள் ஆழமாகும் என நம்புவதாகவும் கூறினார்.
ஆஸ்திரேலியா கடற்படையின் படையணியின் கட்டளை அதிகாரி கமோடர் ஜோனத்தான் லே பேசும்போது மலபார் போர் பயிற்சிகள் ஒருங்கிணைந்த படை நடவடிக்கைகள் மற்றும் ஒத்துழைப்பை அதிகமாக்கும் இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாகும் எனவும் ஆஸ்திரேலியா ஏற்கனவே பலமுறை இந்த போர் பயிற்சிகளில் பங்கேற்றுள்ளதாகவும் கடந்த ஆண்டு இந்த போர் பயிற்சிகளை தங்களது மண்ணில் நடத்தியதில் மகிழ்ச்சி அடைவதாகவும் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய கடற்படையின் பிராந்திய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பயிற்சிகளில் கலந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
நான்கு நாடுகளின் கடற்படை மூத்த அதிகாரிகள் இறுதியாக பேசும் போது இந்த ஆண்டு நடைபெற உள்ள மலபார் கடற்படை கூட்டு பயிற்சிகள் இதுவரை நடைபெற்றதிலேயே மிகவும் முக்கியமான மற்றும் அதிநவீன தொழில் நுட்பங்களை அதிக அளவில் உள்ளடக்கிய பயிற்சியாக அமையும் எனவும் கடல்சார் போர்முறையில் உள்ள அனைத்து போர் திறன்களை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும் கடல் பரப்புக்கு மேலே கடல் பரப்புக்கு கீழே வான்வெளி மற்றும் தகவல் பரிமாற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்