சீராகும் இந்தியா சீன உறவுகள் தெற்காசியா மற்றும் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் !!
கடந்த 2020 ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளதாக்கு பகுதியில் சீன படையினர் அத்துமீறி புகுந்து இந்திய படையினரை தாக்கினர், இதில் 20-கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் 40-க்கும் அதிகமான சீன ராணுவ வீரர்களும் இந்திய வீரர்களின் வீரதீர தாக்குதலில் கொல்லப்பட்டனர் இதைத்தொடர்ந்து இரு நாடுகளும் கடந்த நான்கு ஆண்டுகளாக லட்சக்கணக்கான வீரர்களை கிழக்கு லடாக்கில் குவித்திருந்தன, மேலும் இது ஆசியாவில் ஒரு மிகப்பெரிய போர் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருந்தது இந்தியா மற்றும் சீனா ஆகிய இருவரும் ஆசிய சக்திகள் மோதிக் கொள்ளும் நிலை உருவாகுமோ என உலகம் முழுவதும் அச்சங்கள் எழுந்தன.
இப்படி கடந்த நான்கு ஆண்டுகளாக இரு நாடுகள் இடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் மிக மோசமான சூழல் மற்றும் பதட்டம் நிலவி வந்தது மேலும் இரு நாடுகள் இடையேயான ராஜாங்கம் மற்றும் புவிசார் அரசியல் உறவுகள் அதல பாதாளத்திற்கு சென்றது, இரு நாடுகள் இடையேயான வர்த்தகத்திலும் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டது குறிப்பாக இந்தியா சீன மொபைல் ஆப்களை தடை செய்தது மேலும் பல்வேறு சீன தயாரிப்பு பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் தடை விதித்திருந்தது.
சீனாவின் அடாவடி போக்கை தொடர்ந்து இந்தியா சீனாவுக்கு எதிராக பல்வேறு வகையான ராஜாங்க மற்றும் புவிசார் அரசியல் நடவடிக்கைகளையும் எடுத்தது அதன் ஒரு பகுதியாக அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உடனான குவாட் கூட்டமைப்பில் மிகச் தீவிரமாக செயல்பட துவங்கியது, நான்கு நாடுகள் இடையேயான மலபார் கடற்படை போர் பயிற்சிகள் மிக தீவிரமடைந்தன இதன் விளைவாக இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் இடையேயான உறவுகளும் மிக வலுவடைந்தன மிக அதிக அளவில் வளர்ச்சி பெற்றன தொடர்ந்து இந்தியா தனது ராணுவ மேம்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா மற்றும் குறிப்பாக ஜப்பானுடன் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தங்களையும் செய்து கொண்டது.
இது ஒரு புறம் இருக்க இந்தியாவின் மேற்கு புறத்தில் இருக்கும் இந்தியாவின் மிகத் தீவிரமான எதிரி நாடான பாகிஸ்தானும் இந்தியா மற்றும் சீனா இடையேயான மோதலை மிகவும் ரசித்தது இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விதமாக காய் நகர்த்தியது தற்போது ரஷ்ய உதவியோடும் இந்தியா மற்றும் சீனா இடையே நடைபெற்ற பல்வேறு கட்ட உயர் மட்ட பேச்சுவார்த்தைகளின் விளைவாகவும் ஏற்பட்டுள்ள இணக்கமான சூழல் பாகிஸ்தானுக்கு மிகவும் கவலையையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது என்றால் மிகை ஆகாது.
இந்தியா சீனா இடையே ரஷ்ய உதவியுடன் ஏற்பட்டுள்ள இந்த சமூகமான சூழல் தற்போது பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் குறிப்பாக அமெரிக்காவின் ஆதரவு நாடுகளுக்கும் பலத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது, குறிப்பாக இந்த விவகாரத்தை ஜப்பான் தென் கொரியா பிலிப்பைன்ஸ் ஆஸ்திரேலியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எப்படி பார்க்கின்றன என்பதையும் இந்த நாடுகளுடனான உறவை இந்தியா எப்படி கையாள போகிறது என்பதையும் வரும் காலங்களில் தான் பார்க்க முடியும்.
சீனாவுடனான மோதலை அடிப்படையாக வைத்து அந்தப் புள்ளியில் இந்தியாவுடன் இணையும் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு இந்தியா தனது பிரமாஸ் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏற்றுமதி செய்தது இதை அந்த நேரத்தில் சீனா முற்றிலும் எதிர்பார்க்கவில்லை அதைத்தொடர்ந்து இந்தியாவிற்கு தனது கடுமையான கண்டனங்களையும் தெரிவித்திருந்தது தற்போது வருங்காலத்தில் பிலிப்பைன்ஸ் உடனான ஆயுத ஏற்றுமதி உறவுகளை இந்தியா எப்படி கையாள உள்ளது என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
சீனாவுடன் இந்தியா இணக்கமான உறவுகளை கொண்டிருந்தால் அது நிச்சயம் மேற்குலக நாடுகள் குறிப்பாக அமெரிக்காவின் கண்களை உறுத்தும் ஆகவே இதை காரணமாக வைத்து வருங்காலங்களில் இந்தியாவுக்கு சர்வதேச அரசியல் அரங்கில் பல்வேறு வகையான மறைமுக மற்றும் நேரடி அழுத்தங்களை அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் தருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன, மேலும் இந்தியாவுக்கு தேவையான ஆயுதங்களை வாங்குவதில் சிக்கலும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன இது தவிர பாகிஸ்தான் இனி அமெரிக்காவுடன் அதிகமாக நெருங்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
எது எப்படியோ சீனா பல பலமுறை இந்தியாவை கடந்த 1950 முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் ஏமாற்றி வந்துள்ளது மீண்டும் மீண்டும் இந்தியாவுடனான எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பிரச்சனைகளை செய்து வந்துள்ளது மீண்டும் மீண்டும் அருணாச்சல பிரதேசம் போன்ற இந்திய பகுதிகளை தன்னுடையது என கோரி வந்துள்ளது, மேலும் இந்தியாவுடன் ஆன எல்லைக்கு மிக அருகே கிராமங்களை அமைத்து வருவது மற்றும் இந்திய பகுதிகளை இணைத்து சீன பெயரிட்டு வரைபடங்களை வெளியிடுவது தவிர இந்திய பெருங்கடல் பகுதியில் தனது நாட்டு கடற்படை கப்பல்களை அனுப்புவது போன்ற இந்தியாவை சீண்டும் செயல்களை செய்து வந்துள்ளது ஆகவே இந்த முறையும் சீனாவை நம்ப முடியுமா என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்