இந்தியா சீனா இடையேயான எல்லை பிரச்சினைகள் முடிவு எட்டப்பட்டது !!

சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக செல்வதற்கு முன்பு இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இது தொடர்பாக ஊடகவியலாளர்களை சந்தித்து பேசினார் அப்போது யாரும் எதிர்பாராத வகையில் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சினையில் ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார் அதாவது கிழக்கு லடாக்கில் இருதரப்பு ரோந்து நடவடிக்கைகள் மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் படை விலக்கம் ஆகியவற்றை மேற்கொள்வது குறிப்பாக மிக பதட்டமான பகுதிகளாக கருதப்பட்ட தெம்சாக் மற்றும் தெப்சாங் ஆகிய பகுதிகளிலும் பிரச்சனைக்கு முடிவு காணப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.

மேலும் அவர் பேசும் போது கடந்த ஒரு சில வாரங்களாக இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் ராணுவ அதிகாரிகள் பல்வேறு விதமாக தொடர்பில் இருந்ததாகவும் அவர்கள் தொடர்ச்சியாக இருதரப்பு பேச்சு வார்த்தைகளை நடத்தி வந்ததாகவும் இவற்றின் விளைவாக இந்தியா சீனா இடையேயான எல்லை பிரச்சினையில் ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் படைகள் பின்வாங்குவது மற்றும் ரோந்து நடவடிக்கைகள் தொடர்பாக ஒப்புதல் ஏற்பட்டுள்ளதாகவும் இதைத்தொடர்ந்து இரு நாடுகளும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த விவகாரம் பற்றி அதிகமாக விவரங்களை பகிர்ந்து கொள்ளவில்லை அதேபோல இரு நாடுகளுக்கு இடையேயான இருநாட்டு ராணுவத்தினரும் ரோந்து மேற்கொள்ளாத இடையாக மண்டலங்கள் உள்ள பகுதிகள் இனியும் தொடருமா என்பது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இந்த விவகாரங்கள் தற்போது இரு தரப்பாலும் விவாதிக்கப்பட்டு வருவதாக கூறினார் மேலும் அவர் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோர் இடையே நடைபெற்ற சந்திப்புகள், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்திய சீன வெளியுறவு மற்றும் ராணுவ அதிகாரிகள் பங்கு பெற்ற சந்திப்புகள் மற்றும் செப்டம்பர் மாதம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் எல்லை பிரச்சினை பேச்சுவார்த்தைக்கான சீன பிரதிநிதி வாங் ஆகியோர் பங்குபெற்ற பேச்சு வார்த்தைகள் தான் இந்த முடிவுக்கு வித்திட்டதாக கூறினார்.

இது தவிர கடந்த ஒரு சில வாரங்களாக இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் மூத்த வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் ஆகியோர் பங்கு பெற்ற மிகத் தீவிரமான பேச்சு வார்த்தைகளும் இந்த முடிவு எட்டப்படுவதற்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது, குறிப்பாக தற்போதைய இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி முன்பதாக சீனாவுக்கான இந்திய தூதராக பணியாற்றியவர் ஆவார் ஆகவே இந்தப் இருதரப்பு பேச்சு வார்த்தைகளில் அவரும் மிக முக்கிய பங்காற்றி இருப்பதாக தலைநகர் டில்லியில் இருந்து வரும் நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் பற்றி இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்கள் பேசும்போது தற்போது எட்டப்பட்டுள்ள முடிவு மிக முக்கியமானது எனவும் கடந்த 2020 ஆம் ஆண்டு வரை பின்பற்றப்பட்டு வந்த இரு தரப்பு எல்லை ஒப்பந்தம் தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் இதன் காரணமாக இந்தியா சீனா இடையேயான எல்லை சூழல் கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலைக்கு சென்றுள்ளதாகவும் ஆகவே இந்தியா சீனா இடையேயான எல்லை பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும் என் டி டிவி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது ஒரு புறம் இருக்க சீனா இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எவ்வித கருத்துக்களையும் முதலில் தெரிவிக்காமல் இருந்தது மேலும் இதை உறுதிப்படுத்தும் விதமாகவும் எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்தது பின்னர் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியை உறுதிப்படுத்தி செய்தி அறிக்கையை வெளியிட்டது சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கடந்த ஒரு சில வாரங்களாக இந்தியா மற்றும் சீன அதிகாரிகள் மிக தீவிரமாக பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகவும் அதன் விளைவாக இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சனை தொடர்பாக ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் இதனை சீனா வரவேற்பதாகவும் இனி அடுத்த கட்டமாக எட்டப்பட்டுள்ள முடிவுகளை அமல்படுத்த சீனா நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.