எல்லையோரங்களில் 75 புதிய உட் கட்டமைப்பு வசதிகளை திறந்து வைத்த பாதுகாப்பு அமைச்சர் !!

கடந்த அக்டோபர் 12ஆம் தேதி இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங் எல்லையோரங்களில் சுமார் 2236 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 75 உட்கட்டமைப்பு திட்டங்களை திறந்து வைத்துள்ளார் இந்த 75 உட்கட்டமைப்பு வசதி திட்டங்களில் 22 சாலை திட்டங்கள் 51 பாலங்கள் முற்படுகின்றன இவை 11 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

அதாவது மேல் குறிப்பிடப்பட்ட 75 திட்டங்களில் 19 திட்டங்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும், 11 திட்டங்கள் லடாக்கிலும், 18 திட்டங்கள் அருணாச்சல பிரதேசத்திலும், 9 திட்டங்கள் உத்தராகண்டிலும், தலா இரண்டு திட்டங்கள் வீதம் மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும், தலா ஒரு திட்டம் வீதம் நாகலாந்து மிசோரம் மற்றும் அந்தமான் நிக்கோபார் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டங்களை பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங் மேற்குவங்க மாநிலம் சிலிகுரி அருகே உள்ள சுக்னாவில் அமைந்துள்ள இந்திய தரைப்படையின் மலையக போர் படைப்பிரிவான திரிசக்தி கோர் என அழைக்கப்படும் 33 ஆவது கோர் படைப்பிரிவின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திரிவேதி முன்னிலையில் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார் என பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 75 திட்டங்களில் மிகவும் பிரதானமானவை சிக்கிம் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குபுப் – ஷெராத்தங் இடையேயான சாலையும் உள்ளடங்கும், இதைத்தொடர்ந்து பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங் இந்தத் திட்டங்கள் மூலமாக இந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் சமூக பொருளாதார தரம் உயரும் எனவும் எல்லையோர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான அரசின் நோக்கத்தை உறுதி தன்மையை வெளிப்படுத்துகிறது எனவும் பிரதமர் மோடியின் வளர்ச்சி அடைந்த இந்தியா 2047 என்ற இலக்கை அடையும் விதமாக நாட்டின் பாதுகாப்பு திறன்களை பல மடங்கு உயர்த்தும் எனவும் கூறினார்.

மேலும் ராஜ்நாத் சிங் பேசும்போது இந்தப் பணிகளை செவ்வனே மேற்கொண்டு BRO – Border Roads Organisation எனப்படும் எல்லையோர சாலை கட்டமைப்பு நிறுவனம் மிகக் கடினமான நிலப்பரப்புகளில் மிக கடினமான கால நிலைகளை தாண்டி நிறைவேற்றியதாக வாழ்த்து தெரிவித்தார் மேலும் 2024 2025 நிதியாண்டு காலகட்டத்தில் எல்லையோர சாலை கட்டுமான நிறுவனத்திற்கு நாட்டின் பாதுகாப்பு திறன்கள் மற்றும் எல்லையோர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த அமைப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சுமார் 6500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த 75 திட்டங்களை நிறைவேற்றியதின் மூலமாக இந்த ஆண்டு இதுவரை எல்லையோர சாலை கட்டுமான நிறுவனம் சுமார் 111 கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது இதில் பிரதமர் மோடியால் முன்னர் திறந்து வைக்கப்பட்ட அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள சேலா சுரங்க பாதையும் உள்ளடங்கும் இந்த 111 உட்கட்டமைப்பு திட்டங்களின் கூட்டு மதிப்பு சுமார் 3751 கோடி ரூபாய் என்பது கூடுதல் சிறப்புமிக்க தகவல் ஆகும்.