கடந்த ஒரு வார காலகட்டத்தில் இந்திய விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு தினந்தோறும் ஒன்றுக்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன அதாவது கடந்த ஒரு வார காலகட்டத்திற்குள் இந்திய விமான நிறுவனங்களின் சுமார் 140 க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன, இது இந்திய வான் போக்குவரத்து துறைக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சிக்கலாகவும் சவாலாகவும் கருதப்படுகிறது.
இண்டிகோ விஸ்தாரா ஏர் இந்தியா ஸ்பைஸ் ஜெட் அகாஸா ஏர் போன்ற விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு தான் அதிக அளவில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன பெரும்பாலான மிரட்டல்கள் வதந்திகள் என கண்டறியப்பட்டாலும் இத்தகைய சூழல்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் காரணமாக விமான நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன, இது பயணிகளுக்கும் மிக மோசமான அனுபவத்தை அளிக்கிறது அவர்கள் வான் போக்குவரத்தை தேர்வு செய்வதில் சிக்கலையும் ஏற்படுத்துகிறது மேலும் விமான நிறுவனங்களுக்கும் சரி பயணிகளுக்கும் சரி நேர விரையத்தையும் ஏற்படுத்துகிறது.
இதில் உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும் விமானங்களும் சர்வதேச பயணம் மேற்கொள்ளும் விமானங்களும் உள்ளடங்கும் மேலும் ஒரு சில வெளிநாட்டு விமான நிறுவனங்களின் விமானங்களுக்கும் அதாவது இந்தியா வரும் வெளிநாட்டு விமானங்களுக்கும் மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது, அதேபோல் சிங்கப்பூருக்கு சென்ற இரண்டு இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அடுத்து சிங்கப்பூர் விமானப்படை போர் விமானங்கள் உதவியோடு அந்த விமானங்கள் தரையிறக்கப்பட்டதும், இத்தகைய வெடிகுண்டு மிரட்டல்கள் சமூக வலைதளங்களில் குறிப்பாக x வலைதளத்தில் விடுக்கப்படுவதும், ஒரே ஒரு எக்ஸ் வலைதள பக்கத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட முறை பல்வேறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிப்பது தொழில்நுட்ப சிக்கல்களால் கடினமாக உள்ளது ஆகவே தற்போது இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை முகநூல் வலைதளத்தை கொண்டிருக்கும் மெட்டா மற்றும் எக்ஸ் வலைதள நிறுவனங்களுக்கு இத்தகைய கணக்குகளை பற்றிய விவரங்களை அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது, மேலும் இத்தகைய வெடிகுண்டு மிரட்டல்களை விடுப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வான் போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது தவிர இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடம் இந்தியாவின் விமான நிலையங்களை பாதுகாக்கும் CISF – Central Industrial Security Force மத்திய தொழில் பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் ராஜ்வீந்தர் சிங் பாட்டி மற்றும் BCAS – Bureau of Civil Aviation சிவில் விமான போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றின் இயக்குனர் ஜெனரல் ஸூல்ஃபிகர் ஹாசன் ஆகியோர் சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர் இது தவிர உள்துறை அமைச்சக செயலாளர் திரு கோவிந்த்மோகனுடன் அரை மணி நேரத்திற்கு மேலாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.