துருக்கி வானூர்தி தொழிற்சாலையில் நடைபெற்ற தாக்குதல் !!

துருக்கி தலைநகர் அங்காரா அருகே அமைந்துள்ள துருக்கி அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வானூர்தி தயாரிப்பு நிறுவனமான TUSAS – Turkish Aerospace Industries துருக்கி வான்வெளி தொழிற்சாலை வளாகத்தில் கடந்த புதன்கிழமை அன்று ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் கொடூரமாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு டாக்ஸி டிரைவர் மற்றும் நான்கு வானூர்தி தொழிற்சாலை நிறுவன ஊழியர்கள் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோர் ஈடுபட்டதாக துருக்கி உள்துறை அமைச்சர் அலி எர்லிகாயா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

துருக்கி துணை அதிபர் செவ்தெத் இல்மா இந்த தாக்குதல் பற்றி பேசும்போது தாக்குதல் நடத்தியவரை வாகனத்தில் கொண்டு வந்த டாக்ஸி டிரைவரையும் அவர்கள் சுட்டுக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். இவர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் கையெரி குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். துருக்கி உள்துறை அமைச்சர் அலி எர்லிகாயா துருக்கி அரசன் சார்பில் பேசும்போது தாக்குதல் நடத்திய இருவரும் குர்து இனக்குழுவை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் இருவரும் குர்திஷ் மக்கள் கட்சியின் உறுப்பினர்கள் எனவும் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார். மேல் குறிப்பிடப்பட்ட அமைப்பு துருக்கியின் ஒரு பிரிவினைவாத அமைப்பாகும். இதனைத் துருக்கி ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தி தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் மேற்குறிப்பிட்ட அமைப்பானது இதுவரை இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்கும் விதமாக எவ்வித அறிக்கையோ தகவலையோ வெளியிடவில்லை இதற்கிடையே ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய துருக்கி பாதுகாப்பு அமைச்சர் யாசர் குலர் இந்தக் கோழைத்தனமானவர்களை மீண்டும் மீண்டும் பலமுறை தண்டித்து விட்ட பிறகும் அவர்கள் அதிலிருந்து ஒன்றும் கற்கவில்லை என கூறியுள்ளார். இதற்கிடையே ரஷ்யாவுக்கு பிரிக்ஸ் மாநாட்டிற்கு கலந்து கொள்ள சென்ற துருக்கி அதிபர் எர்தோகான் இது வெறுப்பு நிறைந்த ஒரு தாக்குதல் சம்பவம் என தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். மேலும் ரஷ்ய அதிபரின் இரங்கலுக்கும் நன்றி தெரிவித்தார்.

நேட்டோ ராணுவ கூட்டமைப்பின் அங்கமாக துருக்கி உள்ளது. அந்தக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட் இந்த துக்ககரமான நேரத்தில் துருக்கியுடன் நேட்டோ அமைப்பு உறுதுணையாக நிற்பதாகவும் பதிவிட்டு துருக்கி அதிபர் எர்தோகானுடன் தொலைபேசி மூலமாக பேசி தகவலை கேட்டு அறிந்து இரங்கல்களையும் பதிவு செய்துள்ளார். அங்காரா நகர மேயர் மன்சூர் எவாஸ் இந்த தாக்குதல் தனக்கு மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.அதேபோல துருக்கி நீதித்துறை அமைச்சர் இல்மாஸ் துங்க் இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்,

துருக்கி நிபுணர் அஸ்லி ஐடின் தஸ்பாஸ் பேசும்போது இந்த தாக்குதல் கடந்த சில வருடங்களாக அமைதி அனுபவித்து வந்த துருக்கியில் பல்வேறு கேள்விகளை எழுப்பும் எனவும் குர்து மக்களுடன் அமைதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை துருக்கி அரசு பரிசீலிக்க துவங்கிய நேரத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது, துருக்கி பாதுகாப்புத் துறையின் கிரீடமாக கருதப்படும் தொழிற்சாலையின் மீது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் மாறாத வடுவை ஏற்படுத்தும் என கூறினார்.

டாக்ஸி ஓட்டுநர் முராத் அர்சலான் தாக்குதல் நடத்திய இருவரையும் சவாரிக்காக அழைத்து தாக்குதல் நடைபெற்ற தொழிற்சாலையில் கொண்டு விட்டதும் அவரையும் சுட்டுக் கொன்று வண்டியின் பின்புறம் உள்ள டிக்கியில் அடைத்து வைத்துள்ளனர், கொல்லப்பட்ட ஸாகிதே குக்லு தனது கணவர் தனக்கு அனுப்பிய மலர் கொத்தை பெறுவதற்கு தொழிற்சாலையின் வாசலுக்கு சென்றபோது தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார், இந்த கோர தாக்குதலைத் தொடர்ந்து TUSAS நிறுவனத்தின் பொது மேலாளர் மெஹ்மெத் தெமிரோக்லு அவர் கலந்து கொண்டிருந்த மிக முக்கியமான பாதுகாப்பு கண்காட்சியில் இருந்து பாதி வழியில் தாய் நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான துருக்கி வான்வெளி தொழிற்சாலை நிறுவனம் கடந்த 1973 ஆம் ஆண்டு வெளிநாட்டு இறக்குமதியை குறைக்கும் விதமாக துருக்கி தொழில் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டது இந்த நிறுவனம் துருக்கியின் மிக மிக முக்கியமான பாதுகாப்புத்துறை நிறுவனமாக கருதப்படுகிறது மேலும் இது துருக்கியிலேயே மிகப்பெரிய பாதுகாப்புத்துறை நிறுவனம் ஆகும், இங்குதான் பல்வேறு வகையான அதிநவீன ஆளில்லா கண்காணிப்பு மற்றும் தாக்குதல் வானூர்திகளும், ஐந்தாம் தலைமுறை KAAN உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களும் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது