கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி தமிழகத்தின் 11 இடங்களில் என் ஐ ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவும் விதமாக தேர்தலை புறக்கணிப்பது மற்றும் ஜனநாயக அரசுகளை கவிழ்ப்பது தொடர்பான சதித்திட்டம் பற்றிய வழக்கில் அதிரடி சோதனை நடத்தியது இந்த சதி திட்டத்தை ஹிஸ்ப்- உத்-தாஹ்ரீர் என்ற அமைப்பு தீட்டி உள்ளது.
சென்னை தாம்பரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் 11 இடங்களில் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குழுவினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர் இந்த சோதனையின் போது பல்வேறு டிஜிட்டல் கருவிகள் கணக்கில் வராத பணம் ஹிஸ்ப் உத் தாஹ்ரீர் அமைப்புக்கு சொந்தமான புத்தகங்கள் கையேடுகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் தற்போது சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூலை மாதம் சென்னை பெருநகர காவல் துறையிடம் இருந்து RC-02/2024/NIA/CHE என்ற இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டதாகவும் மேலே குறிப்பிட்ட ஹிஸ்ப் உத் தாஹ்ரீர் அமைப்பானது தேர்தலில் பங்கேற்பது மற்றும் ஓட்டு போடுவது ஆகியவை இஸ்லாத்திற்கு எதிரானது எனவும் ஹராம் எனவும் சமூக வலைதளங்கள் மூலமாக பிரச்சாரம் செய்ததாகவும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பதற்கு தனது ஆதரவாளர்களை ஊக்குவித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் மிக முக்கிய குற்றவாளியான ஹமீத் ஹுசைன் மேலும் ஐந்து பேருடன் சேர்ந்து ரகசிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியதாகவும் இவற்றில் இந்திய எதிர்ப்பு கொள்கைகளை முன்னிலைப்படுத்தியதாகவும் தமிழகம் முழுவதும் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை அமைப்பது தொடர்பாக வேறு பலருடன் சேர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டதாகவும் மக்களை பிளவுபடுத்தி இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு பாதகம் விளைவிக்க திட்டமிட்டதாகவும் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் தெரியவந்துள்ளது