இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கே ராமமோகன் நாயுடு கடந்த புதன்கிழமை அன்று இந்தியாவின் வளர்ந்து வரும் சிவில் விமான போக்குவரத்து துறையின் வளர்ச்சி மற்றும் தேவைகளை சுட்டிக்காட்டி உள்நாட்டில் விமானம் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக இந்திய அரசு ஒரு சிறப்பு திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்
கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பாரதிய வாயுயான் விதேயாக் 2024 மசோதாவில் மத்திய அரசின் இந்தியாவை தன்னிறைவாக்கும் திட்டமான ஆத்ம நிற்பார் பாரத் திட்டத்தின் நோக்கங்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக இந்தியாவில் வானூர்தி வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு சார்ந்த ஒழுங்கு முறைகளை ஏற்படுத்தவும் நெறிமுறைகளை வகுக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு இந்திய அரசு உள்நாட்டில் வானூர்திகளை தயாரிப்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் இந்தியாவே தனக்குத் தேவையான விமானங்களை தயாரித்து கொள்ளும் சிந்தனைகளை அரசு மிகவும் ஊக்கப்படுத்தி வருவதாகவும் இதற்காக வானூர்தி தயாரிப்பு தொழில் துறையினர் மற்றும் விமான போக்குவரத்து துறையை சார்ந்தவருடன் இணைந்து சிறப்பு திட்டத்தை ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்
மேலும் அவர் பேசும் போது அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிலேயே வானூர்திகளை வடிவமைத்து தயாரிக்கும் பணிகள் துவங்கும் எனவும் வானூர்தி தயாரிப்பில் உலகின் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக வேண்டும் என விரும்புவதாகவும் மேலும் அப்படி இந்தியாவில் தயாரிக்கப்படும் விமானங்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவும் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார்
தொழில்துறையினர் நடத்திய கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கே ராமோகன் நாயுடு பேசும்போது மேல் குறிப்பிட்ட தகவல்களை தெரிவித்தார் மேலும் அவர் இந்தியாவில் MRO – Maintenance Repair & Overhaul அதாவது பராமரிப்பு பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் செயல்பாடுகளுக்கும் மிகப்பெரிய அளவில் தேவை நிலவி வருவதாகவும் இந்தியாவின் வானூர்தி துறை ஒரு உருமாற்றத்தின் விளிம்பில் உள்ளதாகவும் அந்த வகையில் இந்திய அரசு பயணிகள் போக்குவரத்து விமான சரக்கு போக்குவரத்து மற்றும் பராமரிப்பு பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் போன்ற நடவடிக்கைகளின் உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்ற விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் தற்போது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் வானூர்தி துறை சந்தையாக திகழ்ந்து வருகிறது உலகப் பிரசித்தி பெற்ற அமெரிக்காவின் போயிங் மற்றும் ஐரோப்பாவின் ஏர்பஸ் போன்ற விமான தயாரிப்பு நிறுவனங்களின் முக்கியமான சந்தையாக இந்தியா மாறி உள்ளது குறிப்பாக சமீபத்தில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்களுக்காக இரண்டு நிறுவனங்களுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் இதுவரை உலக வரலாற்றில் விமான போக்குவரத்து துறையில் இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமானதாகும்.
இது ஒரு புறம் இருக்க இந்தியாவின் பிரதான மற்றும் முன்னணி வானூர்தி தயாரிப்பு நிறுவனமான இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறையை சேர்ந்த HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக் லிமிடெட் சொற்ப அளவில் சிறிய விமானங்களை தயாரித்து வருகிறது, அந்த வகையில் இந்தியா தற்போது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் விமான போக்குவரத்து துறை சந்தையாக மாறி உள்ள காலகட்டத்தில் இந்தியாவின் விமான போக்குவரத்து துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக இந்த புதிய மசோதா கடந்த 1934 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு இதுவரை சுமார் 21 முறை மாற்றி அமைக்கப்பட்ட விமான சட்டத்தை நீக்குவதற்கான வழி வகைகளை கொண்டுள்ளது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்.