ஐரோப்பாவுக்கு அதிக அளவில் கப்பல்களை ஏற்றுமதி செய்ய கொச்சி கப்பல் கட்டுமான தளம் திட்டம் !!
கொச்சி கப்பல் கட்டுமான தள நிறுவனத்தின் சேர்மன் மற்றும் மேலாண் இயக்குனர் மது எஸ் நாயர் சமீபத்தில் கொச்சி கப்பல் கட்டுமான தளம் CSL – Cochin Shipyards Limited ஐரோப்பிய கப்பல் சந்தையிலிருந்து பெருமளவில் ஆர்டர்களை பெறுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதாவது சிறிய தொலைவுக்கு பயணிக்கும் கப்பல்கள் ஐரோப்பிய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன இத்தகைய கப்பல்களை ஏற்றுமதி செய்யும் பொருட்டு ஐரோப்பாவில் இருந்து அதிக ஆர்டர்களை பெறுவதற்கு தான் தற்போது கொச்சி கப்பல் கட்டுமான தள இலக்கு நிர்ணயித்துள்ளது, கடந்த ஆண்டு இந்த நிறுவனம் 14 கப்பல்களை இரண்டு ஐரோப்பிய நிறுவனங்களுக்கு கட்டமைக்கும் ஒப்பந்தங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
100 முதல் 130 மீட்டர் நீளம் வரை உள்ள இந்த சிறிய தொலைவுக்கு பயணிக்கும் கப்பல்கள் தற்போதும் பல்வேறு இந்திய நிறுவனங்களால் பல்வேறு ஐரோப்பிய நிறுவனங்களுக்காக இந்தியாவில் கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில் கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனம் இதில் பெருமளவில் முன்னேற திட்டமிட்டுள்ளதாகவும் இதன் மூலம் ஐரோப்பிய கப்பல் தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதான நிறுவனங்களில் ஒன்றாக மாற திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சுமார் 140 பில்லியன் டாலர்கள் (11 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய்) மதிப்புள்ள உலகளாவிய கப்பல் கட்டுமான சந்தையில் இந்தியாவின் பங்கு ஒரு சதவிகிதம் கூட இல்லை இன்னும் தெளிவாக சொல்லப் போனால் இந்தியாவின் பங்கு வெறுமனே 0.5 சதவீதம் மட்டுமே ஆகும், ஆகவே தற்போது இந்திய அரசு இந்தியாவின் பங்கை அதிகரிக்கும் பொருட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இந்திய தயாரிப்பு கப்பல்களின் தேவையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் இந்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் கடல்சார் இந்தியா 2030 தொலைநோக்கு கொள்கையின் அங்கமாக புதிய கப்பல் கட்டுமான மற்றும் சரிபார்ப்பு கொள்கையை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவை உலகின் 10 முன்னணி கப்பல் கட்டுமானம் மற்றும் சரிபார்ப்பு நாடுகளில் நன்றாக மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்திய பொருளாதாரத்திற்கும் பெருமளவில் வளம் சேர்க்கப்படும் எனவும் வேலை வாய்ப்புகள் பெருமளவில் உருவாகும் எனவும்
கூறப்படுவது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்.