விண்வெளித் திட்டங்களில் செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சுமார் 2.54 மடங்கு திருப்பி இந்திய பொருளாதாரத்திற்கு தரும் இஸ்ரோ !!
ISRO – Indian Space Research Organisation இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிக்கனமான பட்ஜெட்டை வைத்துக் கொண்டு அதி நவீன கண்டுபிடிப்புகளையும் பல்வேறு இலட்சியத் திட்டங்களையும் நிறைவேற்றுவதில் பெயர் பெற்றதாகும். தற்போது வெளியாகி உள்ள ஒரு அறிக்கையின்படி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்வெளி திட்டங்களில் செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சுமார் 2.54 மடங்கு பணத்தை இந்திய பொருளாதாரத்திற்கு திருப்பி தருவதாக தெரியவந்துள்ளது முன்னனி பொருளாதார நிபுணர்கள் இதனை முதலீடு செய்யப்படும் பணத்திற்கு கிடைக்கும் சிறப்பான வருவாய் விகிதம் என வர்ணிக்கின்றனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் முனைவர் சோமநாத் இது பற்றி பேசும் போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக விண்வெளி துறையில் செய்யப்படும் முதலீடுகள் இந்திய சமூகத்திற்கும் இந்திய பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய அளவில் பலன் அளித்துள்ளதாகவும் பணக்காரர்கள் நடுத்தர வர்க்கத்தினர் ஏழைகள் என அனைவருக்கும் பலன் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஐரோப்பிய விண்வெளி ஆலோசனை நிறுவனமான Novaspace நோவாஸ்பேஸ் எனும் ஜாம்பவான் நிறுவனம் “இந்திய விண்வெளி ஆய்வின் சமூகப் பொருளாதாரத் தாக்கம்” என்ற ஆய்வறிக்கையை சமீபத்தில் சமர்ப்பித்தது. இந்த ஆய்வறிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இந்திய விண்வெளித் துறை இந்தியாவின் பொருளாதாரத்திற்கு சுமார் 60 பில்லியன் டாலர்கள் ( 5 லட்சம் கோடி) வருவாயை ஈட்டி தந்துள்ளதாகவும், வரிகளின் மூலமாக 24 பில்லியன் டாலர்கள் அதாவது ஏறத்தாழ இரண்டு லட்சம் கோடி ரூபாயை ஈட்டி தந்து உள்ளதாகவும் 4.7 மில்லியன் (47 லட்சம் வேலைகளுக்கு ஆதரவாக இருந்ததாகவும்) அந்த அறிக்கை கூறுகிறது.
முதல்முறையாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இத்தகைய ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்த நிலையில் இது தொடர்பான ஒப்பந்தத்தை பெறுவதற்கான டென்டரில் உலகளாவிய அளவில் மிகப்பெரிய நிறுவனங்கள் கடுமையாக போட்டி போட்டு நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நோவாஸ்பேஸ் நிறுவனம் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தேசிய விண்வெளி தினத்தின் போது வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் தற்போது இந்திய விண்வெளித் துறையின் மதிப்பு 60 பில்லியன் டாலர்கள் எனவும் அடுத்த 10 ஆண்டுகளில் இது 89 முதல் 131 பில்லியன் டாலர்கள் அதாவது 7 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் முதல் ஏறத்தாழ 11 லட்சம் கோடி ரூபாய் வரை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த ஆய்வறிக்கையில் ஒரு சில குறைகள் உள்ளன இதற்கான காரணம் மேல் குறிப்பிட்ட ஐரோப்பிய விண்வெளி துறை ஆலோசனை நிறுவனம் இந்தியாவின் கிராம பகுதிகளில் முறைசாரா துறையில் விண்வெளி ஆய்வு மற்றும் விண்வெளித் திட்டங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றி விரிவான ஆய்வை நடத்தவில்லை என்பதாகும் அதே நேரத்தில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் பரவலாக ஒவ்வொரு இந்தியரின் தினசரி வாழ்விலும் தேசத்தின் சமுக கட்டமைப்பிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
நோவா ஸ்பேஸ் நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த நிபுணர்களில் ஒருவரான ஸ்டிவ் போஷிங்கர் கூறும்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி 55 ஆண்டுகள் ஆகிறது இந்த 55 ஆண்டுகளிலும் இஸ்ரோவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த நிதி அமெரிக்க அரசால் NASA நாசாவிற்கு ஒதுக்கப்படும் ஒற்றை ஆண்டு நிதியை விட குறைவாகும் ஆனால் இந்த குறைந்த அளவிலான நிதியை வைத்துக் கொண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்வெளி துறையில் சாதித்திருப்பது ஏராளம் என்கிறார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தற்போதைய ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு 1.6 பில்லியன் டாலர்களாகும் (13,800 கோடி) அதே நேரத்தில் நாசாவின் இந்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு சுமார் 25 பில்லியன் டாலர்களாகும் ஏறத்தாழ 2 லட்சத்து 8 ஆயிரம் கோடிகள் ஆகும். இது இஸ்ரோவின் பட்ஜெட்டை விடவும் சுமார் 15.5 மடங்கு அதிகமாகும், கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் இஸ்ரோ இதுவரை தனியார் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் தேசிய விண்வெளித் திட்டங்கள் சார்ந்த 127 வெவ்வேறு வகையான சிறிதும் பெரிதுமான செயற்கைக்கோள்களை ஏவி உள்ளதாகவும் மேலும் 97 ராக்கெட்டுகளை பயன்படுத்தி இந்தியா சுமார் 432 வெளிநாட்டு செயற்கை கோள்களை விண்வெளியில் ஏவியுள்ளதாகவும் இதற்கு மூன்று வெவ்வேறு வகையான ராக்கெட்டுகளை பயன்படுத்தி வருவதாகவும் அதே போல் விண்வெளி ஆராய்ச்சி செய்ய முடியாத, ராக்கெட் மற்றும் செயற்கைகோள் தொழில்நுட்பம் பல்வேறு வளர்ந்து வரும் மற்றும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளுக்கு வாடகை அடிப்படையில் சேவைகள் வழங்கி வருகிறது எனவும் இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
விண்வெளியில் இந்தியாவுக்கு சொந்தமான 50க்கும் அதிகமான வெவ்வேறு வகையான செயற்கைக்கோள்கள் நிறுத்தப்பட்டுள்ளன இவற்றின் மதிப்பு சுமார் 50,000 கோடி ரூபாய் ஆகும், இவற்றில் 22 செயற்கைக்கோள்கள் LEO – Low Earth Orbit தாழ்வான புவி சுற்றுவட்ட பாதையிலும் 29 செயற்கைக்கோள்கள் GSO – Geo Synchronous Orbit புவி ஒத்திசைவு சுற்றுவட்ட பாதையிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இவை ATM மற்றும் இணையவழி பண பரிமாற்றம், தகவல் தொடர்பு, வான் தரை கடைல் போக்குவரத்து வழிகாட்டி சேவைகள், விவசாயம், தட்பவெப்பம், புயல் எச்சரிக்கை, தகவல் ஒளிபரப்பு, இணைய வசதி, கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு என பல்வேறு துறைகளில் பணக்காரர்கள் முதல் சாமானியர் வரை ஒவ்வொரு இந்தியருக்கும் மிகப்பெரிய அளவில் உதவி புரிகின்றன மேலும் அந்த அறிக்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 லட்சம் மீனவர்கள் மற்றும் 140 கோடி இந்தியர்கள் தட்பவெப்பம் குறித்த தகவல்களை பெறுவதாக கூறப்பட்டுள்ளது.
இது தவிர தேசிய பாதுகாப்பை பொறுத்தவரையில் இந்தியாவின் பல்வேறு உளவு செயற்கைக்கோள்கள் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என நான்கு திசையிலும் எந்த நேரமும் எதிரிகளை கண்காணித்துக் கொண்டிருக்கின்றன, பாகிஸ்தான் பிரதமரின் அலுவலகத்தில் நிற்கும் கார்களின் நம்பர் பிளேட் வரை அவற்றால் தெளிவாக கண்காணிக்க முடியும் என்பது அவற்றின் தொழில்நுட்பத் திறனுக்கு சான்றாகும் இந்தியாவின் உளவு செயற்கை கோள்களின் துல்லியத்தன்மை 25 சென்டிமீட்டர் ஆகும் இது உலகளவில் மிக சிறந்த உளவு செயற்கைக்கோள் வரிசையில் இந்திய செயற்கைகோள்களும் இடம்பெறுவதை உறுதி செய்துள்ளது மேலும் முப்படைகள் இடையேயான தகவல் பரிமாற்றம் ஆகியவற்றிற்கும் குறிப்பாக போர் விமானங்கள் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கடலில் இருக்கும் இந்திய போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களின் தகவல் தொடர்பு ஆகியவற்றிற்கும் உதவி புரிகின்றன.
அதேபோல கடந்த ஆண்டு சந்திராயன் – 2 திட்டம் ஆதித்யா L1 சூரிய ஆய்வு திட்டம் மற்றும் சந்திராயன்-3 போன்ற திட்டங்களை இஸ்ரோ மேற்கொண்டது. அதேபோல உலகிலேயே முதல் முறையிலேயே நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதைகளை எட்டிய சாதனையை செய்த ஒரே நாடு இந்தியாவாகும். அதேபோல நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திராயன் – 3 விண்கலத்தை இறக்கி வரலாற்று சாதனை படைத்தது. மேலும் கடந்த 2009ஆம் ஆண்டு இந்தியா அனுப்பிய சந்திராயன் – 1 விண்கலம் நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது இதன் காரணமாகத்தான் நாசா மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ் ARTEMIS திட்டத்தை துவங்கியது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கணக்கில் அடங்காத அளவுக்கு உயிர்களை காப்பாற்றி உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தட்பவெப்ப மற்றும் காலநிலை ஆய்வு செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு முன் புயல்கள் மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி வந்தன கடந்த 1970 ஆம் ஆண்டு கிழக்கு இந்தியாவில் போலா புயல் சுமார் மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் மக்களின் உயிரை பலி வாங்கியது ஆனால் தற்போது இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் முன்கூட்டியே எச்சரிக்கை அளிப்பதால் உயிர் சேதங்கள் தற்போது இரட்டை இலக்கத்தை தாண்டவில்லை சமீபத்தில் ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவு பற்றிய அபாயத்தை கூட முன்னரே ஆய்வறிக்கையாக இஸ்ரோ வெளியிட்டிருந்தது இன்னும் இந்தியா முழுவதும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளின் பட்டியலை அரசுகளின் கவனத்திற்காக வெளியிட்டிருந்தது, இஸ்ரோவின் ஆய்வுகளால் பாதுகாக்கப்பட்ட உயிர்களின் மதிப்பை யாராலும் கணக்கிட முடியாது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தை ஒட்டியுள்ள தும்பா எனும் மீனவ கிராமத்தில் இஸ்ரோ துவங்கிய பயணம் தற்போது செவ்வாய் கிரகம் வரை நீண்டுள்ளது, கடந்த 1963ஆம் ஆண்டு 715 கிலோ எடையுள்ள Nike Apache ராக்கெட்டை அமெரிக்காவிலிருந்து பெற்று முதல் முறையாக ஏவியது ஆனால் இன்று அதைவிட 900 மடங்கு பெரிய சுமார் 6 லட்சத்து 40 ஆயிரம் கிலோ எடை கொண்ட முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட LVM – 3 ராக்கெட்டை ஏவுகிறது. உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சி மிகவும் பாதுகாக்கப்பட்ட துறையாகும் விண்வெளி ஆராய்ச்சி தொழில்நுட்பங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் எந்த நாடும் மற்றொரு நாட்டிற்கு இதில் பெரிய அளவில் உதவாது, அப்படிப்பட்ட துறையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தானாகவே வளர்ந்து புரிந்துள்ள சாதனை நம் அனைவரின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாகும் அதிலும் நஷ்டம் ஏற்படும் அளவிற்கு அதிக ஆபத்துகளை கொண்ட இந்த துறையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஈட்டி தரும் வருவாய் பிரமிக்கத்தக்கது என்றால் மிகை ஆகாது.